உண்மைச் சரிபார்ப்புகளும்
அரசிறை முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தில் (FMRA) குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுடன் அரசாங்கம் இணங்கவில்லை என அமைச்சர் தமது அறிக்கையில் குறிப்பிடுகிறார். இந்தக் கூற்றை உறுதிப்படுத்துவதற்கு அவர் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளையும் அண்மைக் காலங்களில் உண்மையில் அதன் பெறுமதிகளையும் குறிப்பிடுகிறார்.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, 2003ம் ஆண்டின் 3ம் இல. அரசிறை முகாமைத்துவ பொறுப்பு சட்டம், சட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருத்தங்கள், இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகள் (CBSLAR), நிதி அமைச்சின் ஆண்டறிக்கைகள் (MofAR) மற்றும் வெரிட்டே ரிசர்ச்சினால் வெளியிடப்பட்ட இலங்கைக்கு அதிக விதிகள் தேவையா அல்லது கூடுதல் இணக்கப்பாடு தேவையா? (வெரிட்டே 1), மார்ச் 2023ல் கடன் விபரம் (வெரிட்டே 2) ஆகிய தலைப்பிலான கட்டுரைகளையும் FactCheck.lk ஆராய்ந்தது.
வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறைகள், மத்திய அரசாங்கத்தின் கடன், அரசாங்கத்தால் வழங்கப்படும் பொது (அரச) உத்தரவாதங்கள் ஆகியவற்றுக்கான வரம்புகளுடன் அவற்றை எட்ட வேண்டிய திகதிகளும் அரசிறை முகாமைத்துவச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. FMRA சட்டத்திலும் அதன் திருத்தங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளும் அமைச்சர் குறிப்பிடும் வரம்புகளும் ஒப்பிடப்பட்டு அட்டவணை 1ல் காட்டப்பட்டுள்ளன. திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்னதாக அசல் FMRA சட்டத்தில் குறிப்பிடப்பட்ட வரம்புகளையே அமைச்சர் குறிப்பிடுகிறார். வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறைக்கான வரம்பை அமைச்சர் சரியாகக் குறிப்பிடுகிறார். எனினும் கடன் வரம்பு மொ.உ.உற்பத்தியின் 60% என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபோதும் அமைச்சர் 65% எனக் குறிப்பிடுகிறார். பொது உத்தரவாதங்கள் தொடர்பில் வரம்பானது தொடர்ச்சியான மூன்று ஆண்டுகளுக்கான பெறுமதி என்பதை அவர் குறிப்பிடத் தவறிவிட்டார்.
சமீபத்திய ஆண்டுகளின் பெறுமதி தொடர்பில் அமைச்சர் மூன்று கூற்றுகளை முன்வைக்கிறார்.
கூற்று 1: ‘இன்று’ வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நிலைமையே உள்ளது: 2020, 2021 மற்றும் 2022. சட்டம் அமுல்படுத்தப்பட்டது முதல் ஒவ்வொரு ஆண்டும் 5% எனும் வரம்பை விட அதிகமாகவே உள்ளது.
கூற்று 2: பொதுப் படுகடன் 125 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. 2022ம் ஆண்டின் இறுதியில், செலுத்தப்படாத வெளிநாட்டுக் கடனுக்கான வட்டி அடங்கலாக பொதுப் படுகடன் மொ.உ.உற்பத்தியின் 128% என அரசாங்கம் அறிக்கையிட்டுள்ளது (வெரிட்டே2 ஐப் பார்க்கவும்). இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் செலுத்தப்படாத வட்டி கணக்கில் கொள்ளப்படாததால் 118% எனும் குறைந்த பெறுமதி குறிப்பிடப்பட்டுள்ளது.
கூற்று 3: பொது உத்தரவாதம் 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. வெரிட்டே1 மற்றும் நிதி அமைச்சின் ஆண்டறிக்கை பொதுப்படுகடன் 15 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. இது 2021ம் ஆண்டின் மொத்த நிலுவையாகும்.
அரசிறை முகாமைத்துவச் சட்டத்தில் உள்ள வரம்புகளை அமைச்சர் பெரும்பாலும் சரியாகக் குறிப்பிடுகிறார். அதேபோன்று அவர் குறிப்பிடும் அண்மைக்காலப் பெறுமதிகள் மூன்றும் சரியாக உள்ளன. அசல் FMRA சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுடன் ஒப்பிடுகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த வரம்புகள் குறிப்பிடத்தக்க அளவு மீறப்பட்டுள்ளன. இதையே அமைச்சர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்ட முனைகிறார். (கூடுதல் விளக்கத்திற்கு மேலதிகக் குறிப்பைப் பார்க்கவும்).
ஆகவே நாங்கள் அவரது அறிக்கையை சரியானது என வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: FMRA வரம்புகள் தொடர்பான ஒப்பீடு (மொ.உ.உற்பத்தியின் பங்காக)
Additional Note
அமைச்சர் குறிப்பிடும் சமீபத்திய ஆண்டுகளின் பெறுமதி அரசிறை முகாமைத்துவச் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட வரம்புகளுடன் முழுமையாக பொருந்திப் போகவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். FMRA மத்திய அரசாங்கத்தின் கடனுக்கான வரம்பையே குறிப்பிட்டுள்ளது. பொதுப் படுகடனுக்கான வரம்பைக் குறிப்பிடவில்லை (இதில் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் கடனும் உள்ளடக்கப்பட்டுள்ளது). மேலும் அரசாங்கத்தின் உத்தரவாதத்திற்கான வரம்பு தொடர்ச்சியான மூன்று ஆண்டுகளுக்கே சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, மொத்த நிலுவைத் தொகை குறிப்பிடப்படவில்லை.
மூலம்
- இலங்கை பாராளுமன்றம். (2003). அரசிறை முகாமைத்துவ (பொறுப்பு) சட்டம், இல.3, https://publicfinance.lk/public/uploads/act/file/1615372025.pdf இணைப்பிலிருந்து பெறப்பட்டது
- இலங்கை மத்திய வங்கி. (2023). ஆண்டறிக்கை 2022. https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports/annual-report-2022 இணைப்பிலிருந்து பெறப்பட்டது
- வெரிட்டே ரிசேர்ச். (2023). இலங்கைக்கு அதிக விதிகள் தேவையா அல்லது கூடுதல் இணக்கப்பாடு தேவையா? வெரிட்டே ரிசேர்ச், மார்ச் 2023. https://www.veriteresearch.org/wpcontent/uploads/2023/03/VR_EN_Insights_FMRA_March_2023.pdf இணைப்பிலிருந்து பெறப்பட்டது
- நிதி அமைச்சு. (2022). இலங்கை முதலீட்டாளர் விளக்கம். https://www.treasury.gov.lk/api/file/10083639-80a1-4856-a72f-30698b30df35 இணைப்பிலிருந்து பெறப்பட்டது
- வெரிட்டே ரிசேர்ச். (2023). கடன் விபரம், மார்ச் 2023. https://www.veriteresearch.org/wpcontent/uploads/2023/03/Debt_Update_Issue_2_March_17.01.pdf இணைப்பிலிருந்து பெறப்பட்டது
- நிதி அமைச்சு. (2021). ஆண்டறிக்கை 2021. https://www.treasury.gov.lk/web/annual-reports/section/2021 இணைப்பிலிருந்து பெறப்பட்டது
- Publicfinance.lk (2021). அரசிறை முகாமைத்துவ பொறுப்புச் சட்டத்துடன் இணங்காமை பொறுப்பின்மையைக் குறிக்கின்றது. https://publicfinance.lk/en/topics/Non-Compliance-with-the-Fiscal-Management-Responsibility-Act-Has-Been-a-Demonstration-of-Irresponsibility-1624966502 இணைப்பிலிருந்து பெறப்பட்டது