ரன்ஜித் சியம்பலாபிடிய

நிதியியல் உறுதிப்பாடு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிடிய பகுதியளவு சரியாகக் குறிப்பிடுகிறார்

"

...நாங்கள் நிதியியல் உறுதிப்பாட்டை நோக்கி படிப்படியாக முன்னேறி வருகிறோம். முதல் காலாண்டில் எங்கள் ஆரம்ப மீதி ரூ.56 பில்லியன் எதிர்மறையாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கணக்கிட்டிருந்தது. ஆனால் இந்தக் காலாண்டில் எங்கள் ஆரம்ப மீதியை ரூ.48 பில்லியன் நேர்மறையாகக் கொண்டுவந்திருக்கிறோம்.

இலங்கை பாராளுமன்றம் - பாராளுமன்றம் நேரலை - தேவைக்கேற்ப | மே 25, 2023

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

நிதியியல் உறுதிப்பாட்டை அடைவதில் இலங்கை சீராக முன்னேறி வருகிறது என்ற கூற்றை இராஜாங்க அமைச்சர் முன்வைக்கிறார். இந்தக் கூற்றுக்கு வலுச்சேர்ப்பதற்கு, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் ஆரம்ப நிலுவை ரூ.-56 பில்லியனான இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணிப்பிட்ட போதும், இலங்கை ரூ.48 பில்லியனை எட்டியுள்ளது என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார். வருமானத்திற்கும் செலவினத்திற்கும் (வட்டிக் கொடுப்பனவுகள் தவிர்த்து) இடையிலான வித்தியாசம் ஆரம்ப மீதி எனப்படுகிறது 

நிதியியல் உறுதிப்பாடு தொடர்பிலான அவரது கூற்றை ஆராய்வதற்கு, நிதி அமைச்சின் 2022 ஆண்டறிக்கை (MoFAR), IMF ஊழியர் அறிக்கை (IMFSR), வெரிட்டே ரிசர்ச் முன்னெடுக்கும் IMF கண்காணிப்பான் (https://manthri.lk/en/imf_tracker இணைப்பைப் பார்க்கவும்) ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது. 

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் ஆரம்ப மீதி ரூ.48.3 பில்லியன் என MoFAR அறிக்கையிட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் குறிப்பிடுவது போன்று ரூ.56 பில்லியன் எதிர்மறையாக இருக்கும் என்ற IMF இன் கணிப்பீட்டை விட இது அதிமாகும். 

எனினும் நிதிச் செயல்பாட்டின் பிற முக்கிய குறிகாட்டிகளான வருமானம், வட்டிச் செலவு ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் ஒரேயொரு குறிகாட்டியை மட்டும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிடுகிறார் (கூடுதல் தகவல்களுக்கு மேலதிகக் குறிப்பு 1 ஐப் பார்க்கவும்). 1) 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சேகரிக்கப்பட வேண்டிய வரி வருமானம்இது ரூ.650 பில்லியனாக IMF ஆல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது 2) 2023க்கான வட்டி வீதம் 7.2%, இது இருதரப்பு மற்றும் வர்த்தகக் கடன்களுக்கான செலுத்தப்படாத வட்டியை உள்ளடக்கியது. கிடைக்கக்கூடிய தகவல்களைக் கொண்டு FactCheck.lk முன்னெடுத்த கணக்கீடுகளின் பிரகாரம், 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்க்கப்படும் வட்டிச் செலவு ரூ.500 மில்லியனுக்கும் குறைவாகும் (FactCheck.lk கணக்கீடுகளுக்கான கூடுதல் தகவல்களுக்கு மேலதிகத் தகவல்கள் 2 ஐப் பார்க்கவும்). 

ரூ.578 பில்லியன் வரி வருமானத்தை சேகரித்ததன் மூலம் IMF நிர்ணயித்த இலக்கான ரூ.650 பில்லியனை அரசாங்கம் எட்டத் தவறிவிட்டது (MoFAR). அதே காலப்பகுதிக்கான வட்டிச் செலவு ரூ.673.1 பில்லியன் ஆகும். இது எதிர்பார்க்கப்பட்ட ரூ.500 பில்லியன் வட்டிச் செலவை விட அதிகமாகும். 

2023 முதல் காலாண்டுக்கான ஆரம்ப மீதியில் இலங்கை சிறப்பாகச் செயற்பட்டுள்ளதை இராஜாங்க அமைச்சர் சரியாகக் குறிப்பிட்டுள்ள போதும், நிதியியல் உறுதிப்பாடு தொடர்பான IMF இன் ஏனைய முக்கிய குறிகாட்டிகளில் இலங்கை பின்தங்கியுள்ளது. நிதியியல் உறுதிப்பாடு குறித்த இராஜாங்க அமைச்சரின் கூற்று ஒரேயொரு குறிகாட்டியை எட்டியதன் மூலம் ஆதரிக்கப்படவில்லை. 

எனவே அவரது கூற்றை நாங்கள் பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம். 

மேலதிகக் குறிப்பு 1: நிதியியல் உறுதிப்பாட்டை மதிப்பிடுவதில் இந்தக் குறிகாட்டிகள் பின்வரும் காரணங்களால் முக்கியமானவை. 

  1. அரச வருமானம்: வரி வருமானத்திற்கான இலக்கை அடைவது, முன்மொழியப்பட்ட வரி விதிப்புக் கொள்கைகளின் செயல்திறனையும், நிதி ஒருங்கிணைப்பு மற்றம் கடன் உறுதிப்பாட்டை அடைவதற்கான அரசாங்கத்தின் திறனையும் நிரூபிக்கிறது. 
  1. வட்டிச் செலவு: வட்டிச் செலவுகள் ஆரம்ப நிலுவையில் உள்ளடக்கப்படவில்லை என்றாலும், நிதி ஒருங்கிணைப்பு மற்றும் கடன் உறுதிப்பாட்டை எட்டுவதில் அரசாங்கத்தின் திறனை குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கிறது. 

மேலதிகக் குறிப்பு 2: 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான IMF மதிப்பிட்டுள்ள வட்டிச் செலவை FactCheck.lk கணக்கிட்டுள்ளது. 2023க்கான IMF கணிப்பிட்ட வட்டி வீதமான 7.2 சதவீதத்தில் உள்நாட்டு வட்டிக் கொடுப்பனவுகள் மற்றும் மொத்த வெளிநாட்டு வட்டிக் கொடுப்பனவுகள் ஆகிய இரண்டும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அறிக்கையிடப்பட்டுள்ள ரூ.673.1 பில்லியன் வட்டிச் செலவில் பலதரப்புக் கடன் வழங்குனர்களுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 12, 2022 முதல் வெளிநாட்டு நிதிச் சந்தைகள் மற்றும் இருதரப்பு கடன் வழங்குனர்களுக்கான கடன் சேவைக் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக இவை உள்ளடக்கப்படவில்லை. இதன் பிரகாரம் 2023க்கான மொத்த மதிப்பிடப்பட்ட ஆண்டு வட்டிக் கொடுப்பனவு ரூ.2,007 பில்லியன் ஆகும். 2022 இறுதியில் நிலுவையிலுள்ள மத்திய அரசாங்கத்தின் மொத்தக் கடன் மற்றும் நிலுவைகள் ஆகியவற்றில் சர்வதேச நாணய நிதியத்தின் 7.2% என்ற கணிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதிச் சந்தைகள் மற்றும் இருதரப்பு கடன் வழங்குனர்களுக்குச் செலுத்த எதிர்பார்க்கப்படும் வட்டிக் கொடுப்பனவைத் தவிர்க்கும் வகையில் இந்த மதிப்பீடு சரிசெய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதிச் சந்தைகள் மற்றும் இருதரப்பு கடன் வழங்குனர்களுக்கான (ரூ.1,802 பில்லியன்) வட்டிக் கொடுப்பனவைத் தவிர்த்து வரும் தொகையை நான்கால் வகுப்பதன் மூலம் காலாண்டுக்கு எதிர்பார்க்கப்படும் வட்டிக் கொடுப்பனவு (ரூ.500 பில்லியனுக்கும் குறைவானது) பெறப்பட்டுள்ளது. 



மூலம்

நிதி அமைச்சு ஆண்டறிக்கை 2022: https://www.treasury.gov.lk/api/file/0a9e89e6-1b9a-497d-bde2-9c7965b4bf81 

நிதி அமைச்சு பொதுப் படுகடன் சுருக்கம் 2022: https://www.treasury.gov.lk/api/file/a969a81b-13d9-4337-a5b7-858d31eb3715#:~:text=As%20at%20end%202022%2C%20Sri,and%20USD%203.1bn%2C%20respectively 

சர்வதேச நாணய நிதியம், “இலங்கை: விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் விரிவாக்கப்பட்ட ஏற்பாட்டுக்கான கோரிக்கைஊடக வெளியீடு; ஊழியர் அறிக்கை; மற்றும் இலங்கைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளரின் அறிக்கை“, மார்ச் 20, 2023: https://www.imf.org/en/Publications/CR/Issues/2023/03/20/Sri-Lanka-Request-for-an-Extended-Arrangement-Under-the-Extended-Fund-Facility-Press-531191 

இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2022: https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports/annual-report-2022  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன