ஹரின் பெர்னான்டோ

சீன சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து அமைச்சர் பெர்னாண்டோவின் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது

"

ஒவ்வொரு சீன சுற்றுலாப் பயணியும் 5,000 ஐ.அ.டொலரைச் செலவு செய்தால் அண்மையில் பெறப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவித்தொகைக்கு சமமான தொகையைப் பெற முடியும்… உண்மையில் இலங்கையை இந்த நெருக்கடியில் இருந்து சுற்றுலாத் துறையால் மீட்டெடுக்க முடியும்.

themorning.lk | மே 23, 2023

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானம் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுப்பதுடன் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்கும் உதவிக்கு மாற்றாக இருக்கும் என அமைச்சர் குறிப்பிடுகிறார். அவர் தனது கூற்றை விளக்குவதற்காக, ஒவ்வொரு சீன சுற்றுலாப் பயணியும் 5,000 ஐ.அ.டொலரைச் செலவழித்தால் அண்மையில் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய நிதியுதவிக்குச் சமமான தொகையைப் பெற முடியும் எனக் குறிப்பிடுகிறார் 

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, அவர்கள் தங்கியிருக்கும் சராசரி நாட்கள், சீன சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நாளொன்றுக்குச் செலவிடும் தொகை ஆகியவற்றைக் கண்டறிய இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கைகளை FactCheck.lk ஆராய்ந்தது. 

2016ம் ஆண்டில் சீன சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த சராசரி நாட்களின் எண்ணிக்கை 10.4 நாட்கள் என்ற உச்சத்தைத் தொட்டது. 2019 ஆம் ஆண்டில் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நாளொன்றுக்கு செலவிட்ட சராசரி தொகை ஐ.அ.டொ 181.2 என்ற உச்சத்தைத் தொட்டது. இந்த இரண்டுமே ஒரே ஆண்டில் எட்டப்பட்டாலும் கூட, ஒரு சீன சுற்றுலாப் பயணி இலங்கைக்கான வருகையின்போது மொத்தமாக 1,884 ஐ.அ.டொலரை மட்டுமே செலவு செய்வார் (10.4x181.2). ஆகவே சீன சுற்றுலாப் பயணி இலங்கைக்கான வருகையின்போது 5,000 ஐ.அ.டொலரைச் செலவு செய்வார் என்று அமைச்சர் முன்வைக்கும் கூற்று யதார்த்தமானது அல்ல. 

கடந்த காலத்தில் சீன சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தந்த எண்ணிக்கை 271,577 ஆகும் (2016 ஆம் ஆண்டில்). வருடாந்தம் இலங்கைக்கு வருகை தரும் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 500,000 ஆக அதிகரிக்கும் திட்டம் குறித்து அமைச்சர் முன்னிலைப்படுத்துகிறார். அவ்வாறு 500,000 பயணிகள் வருகை தந்து 1,884 ஐ.அ.டொலரைச் செலவு செய்தால் ஐ.அ.டொ 942 மில்லியன் கிடைக்கும். இந்தப் பெறுமதி சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்தத் திட்டத் தொகையான ஐ.அ.டொ 725 மில்லியனை விட அதிகமாகும். எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியானது ஏற்கனவே சீன சுற்றுலாப் பயணிகள் செலவு செய்யும் தொகையை விடக் கிடைக்கும் கூடுதல் உதவியாகும் என்பது கவனத்தில் கொள்ளப்படவில்லை. 

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த உதவிக்கு ஈடாக வருமானம் கிடைக்கும் வகையில் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட, இலங்கையைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்குப் மாற்றாக இது இருக்கும் என்பது தவறானது. மேம்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளுக்கான உறுதிப்பாடு, சர்வதேசத்தின் நம்பிக்கையைப் பெறுதல் மற்றும் தற்போதைய சூழலில் இலங்கையின் கடனை மறுசீரமைக்க சர்வதேச ஒப்பந்தத்திற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குதல் போன்றவற்றில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி முக்கியமாகச் செயற்படுகிறது. 

சீன சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து கிடைக்கக்கூடிய வருமானம் தொடர்பான அமைச்சரின் கூற்று யதார்த்தமானது அல்ல. எனினும் அமைச்சர் குறிப்பிடும் கணிப்பீடுகள் பகுதியளவு எட்டப்பட்டாலும் கூட அவர் குறிப்பிடும் பெறுமதிகள் கிடைக்கும். எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளுக்கு மாற்றாக சீன சுற்றுலா வருமானத்தைக் குறிப்பிடுவதும் இலங்கையைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒட்டுமொத்தப் பங்களிப்பிற்கு மாற்றாக அமைச்சர் அதனைக் குறிப்பிடுவதும் தவறாகும். ஆகவே நாங்கள் அவரது அறிக்கையை பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.   

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபை, வருடாந்த அறிக்கை (பல்வேறு ஆண்டுகள்), பார்வையிட: https://www.sltda.gov.lk/en/statistics [இறுதியாக அணுகியது: ஜுலை 2, 2023]  

வெரிட்டே ரிசர்ச், (2022). சுற்றுலாவால் இலங்கையின் வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறையைச் சரிசெய்ய முடியவில்லை. https://www.veriteresearch.org/wp-content/uploads/2022/09/VR_EN_Insights_Sep2022_Tourism-Could-Not-Have-Solved-Sri-Lankas-Foreign-Exchange-Problem.pdf [இறுதியாக அணுகியது: ஜுலை 2, 2023]  

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன