சனத் நிஷாந்த

சீனா மற்றும் இலங்கையின் கடந்த கால மொ.உ.உ தரவரிசை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் நிஷாந்த தவறாகக் குறிப்பிடுகிறார்.

"

நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்திடம் நாட்டைக் கையளித்த போது உலகளவில் மிக உயர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை சீனா கொண்டிருந்தது, இரண்டாவதாக இலங்கை காணப்பட்டது.

லங்காதீப | ஜூலை 30, 2021

blatantly_false

Blatantly False

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றை மதிப்பிடுவதற்கு மொ.உ.உ வளர்ச்சி குறித்த உலக வங்கி தேசியக் கணக்குகள் தரவை FactCheck.lk ஆராய்ந்தது. FactCheck.lk இதை இரண்டு அளவீடுகளின் அடிப்படையில் மதிப்பிட்டது: அ) 2014 ஆம் ஆண்டில் மொ.உ.உ வளர்ச்சி ஆ) 2010 முதல் 2014 வரையிலான ஐந்தாண்டு சராசரி வளர்ச்சி.

2014 ஆம் ஆண்டில் இலங்கையின் வளர்ச்சி வீதம் 4.96% என்பதுடன், 2010 – 2014 காலப்பகுதிக்கான சராசரி 6.78% என உலக வங்கியின் தரவு காட்டுகிறது. சீனாவின் வளர்ச்சி 2014 ஆம் ஆண்டில் 7.43 சதவீதமாகக் காணப்பட்டதுடன், 2010 – 2014 காலப்பகுதிக்கான சராசரி 8.65% ஆகும்.

இரண்டு அளவீடுகளிலும் பொருளாதார வளர்ச்சி வீதத்தில் இலங்கை இரண்டாவதாக தரவரிசைப்படுத்தப்படவில்லை. உண்மையில் 2014 ஆம் ஆண்டில் இலங்கை 56 ஆவதாக தரவரிசைப்படுத்தப்பட்டிருந்தது. அந்த ஆண்டு இலங்கை 55 நாடுகளுக்குப் பின்னால் இருந்தது. இந்தியா (7.41%), பங்களாதேஷ் (6.06%), நேபாளம் (6.01%) மற்றும் மலேசியா (6.01%) உள்ளிட்ட பல்வேறு ஆசிய நாடுகளுக்குப் பின்னால் இலங்கை இருந்தது. 2010 – 2014 சராசரியிலும் இலங்கையின் வளர்ச்சி வீதம் மியான்மர் (7.80%), கம்போடியா (6.97%) மற்றும் சிங்கப்பூர் (6.82%) உள்ளிட்ட 25 நாடுகளுக்குப் பின்னாலே இருந்தது.

உலகளவில் பொருளாதார வளர்ச்சி வீதத்தில் இரண்டு அளவீடுகளிலும் சீனாவும் முதலிடத்தில் இருக்கவில்லை. 2014 ஆம் ஆண்டில் சீனாவின் வளர்ச்சியை விட 10க்கும் அதிகமான நாடுகளின் வளர்ச்சி அதிகமாக இருந்தது. 2010 – 2014 சராசரியிலும் சீனாவின் வளர்ச்சி வீதத்தை விட 7 நாடுகள் முன்னிலையில் இருந்தன.

உலகளவில் இலங்கை மற்றும் சீனாவின் தரவரிசை, சீனாவுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் தரவரிசை மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்கு முன்னர் மொ.உ.உ வளர்ச்சி வீதம் ஆகியவை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தவறாகக் குறிப்பிடுகிறார். ஆகவே அவரது அறிக்கையை ‘முற்றிலும் தவறானது’ என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

உலக வங்கி, தரவு, மொ.உ.உ வளர்ச்சி (வருடாந்த %), பார்வையிட: https://data.worldbank.org/indicator/NY.GDP.MKTP.KD.ZG [last accessed: 12 August 2021]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன