நாமல் ராஜபக்ஷ

கோவிட் – 19 முகாமைத்துவம் தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ: தெற்காசியாவில் வெற்றியை முன்னதாகவே பிரகடனப்படுத்துகிறார்

"

தெற்காசியப் பிராந்தியத்தில் பெருந்தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய நாடு இலங்கை.

மவ்பிம | ஜூலை 12, 2021

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றை மதிப்பிடுவதற்கு, நாடுகளுக்கு இடையிலான ஒப்பீட்டை இலகுவாக்க அவர் வேர்ல்ட் இன் டேட்டா (OWID – Our World in Data) புள்ளிவிபரங்களை FactCheck.lk ஆராய்ந்தது (10 ஜுலை வரை). அமைச்சர் வெற்றிக்கான அளவீடுகளைக் குறிப்பிடவில்லை. இந்தக் கூற்றை பின்வரும் மூன்று அளவுகோல்களைக் கொண்டு FactCheck.lk மதிப்பிடுகிறது: (1) ஒரு மில்லியனுக்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை (2) ஆயிரத்துக்குப் பரிசோதனைகளின் எண்ணிக்கை மற்றும் தொற்று உள்ளவர்களின் வீதம் (3) தடுப்பூசி செலுத்தப்பட்ட சனத்தொகையின் வீதம்.

அளவுகோல் 1: இலங்கையில் கோவிட் – 19 தொற்றினால் ஒரு மில்லியனுக்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 161.9 ஆகும். இது ஆப்கானிஸ்தான் (142.9), பங்களாதேஷ் (98.3), பூட்டான் (1.3) மற்றும் பாகிஸ்தான் (102.2) ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

அளவுகோல் 2: இலங்கையில் ஆயிரம் பேரில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 195.5 ஆகும். இது இந்தியா (310.9), மாலைதீவு (1989.9) ஆகிய நாடுகளை விடக் குறைவாகும். அதேவேளை இந்தியா (0.023) மற்றும் மாலைதீவு (0.022) ஆகிய நாடுகளை விட இலங்கையில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் வீதமும் (0.119) அதிகமாகும்.

அளவுகோல் 3: நுாற்றுக்கு முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மாலைதீவுக்கு (40.88) அடுத்ததாகவே இலங்கை உள்ளது (6.4). நூற்றில் குறைந்தது ஒரு டோஸையாவது பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும் போதும் மாலைதீவு (58.86) மற்றும் இந்தியா (21.97) ஆகிய நாடுகளை விட இலங்கை (17.53) பின்தங்கியுள்ளது.

கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் இந்தக் கூற்று வெளியிடப்பட்ட போது, இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்கு நாங்கள் பயன்படுத்திய மூன்று அளவுகோல்களிலும் தெற்காசியாவில் இலங்கை சிறந்த பெறுபேறுகளைப் பெறவில்லை. இரண்டு அளவுகோல்களில் இந்தியா மற்றும் மாலைதீவை விட இலங்கை பின்தங்கிக் காணப்படுகிறது. ஆகவே அமைச்சரின் கூற்றை நாங்கள் ‘தவறானது’ என வகைப்படுத்துகிறோம்.

 

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

குறிப்பு: அண்மையில் இலங்கை தடுப்பூசிகள் செலுத்துவதை விரைவுபடுத்தியுள்ளது. ஜுலை 10 முதல் 20 ஆம் திகதி வரையில் இலங்கையில் நாளொன்றுக்குச் சராசரியாக 243,379 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதே வேகம் தொடர்ந்தால் ஒக்டோபர் 18, 2021க்குள் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முழுமையாகத் தடுப்பூசி செலுத்தி முடிக்கலாம் என வெரிட்டே ரிசேர்ச்சின் FactCheck.lk தடுப்பூசி விபரங்கள் காட்டுகின்றன (www.veriteresearch.org).



மூலம்

அவர் வேர்ல்ட் இன் டேட்டா, புள்ளிவிவரம் மற்றும் ஆராய்ச்சி, கொரோனா வைரஸ், தரவு COVID-19 தரவுத்தொகுப்பில் முழுமையான அவர் வேர்ல்ட் இன் டேட்டா, பார்வையிட:   https://github.com/owid/covid-19-data/tree/master/public/data [இறுதியாக அணுகப்பட்டது 20 ஜூலை 2021]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன