பி.கே.ஜி. ஹரிச்சந்திர

ஒதுக்குகள் தொடர்பில் மத்திய வங்கி உதவி ஆளுநர் கருத்து வெளியிட்டுள்ளார்

"

“[…] கடந்த ஆண்டின் இறுதியில் ஒதுக்குகளை 4.4 பில்லியனாக எங்களால் அதிகரிக்க முடிந்தது.”

இலங்கை மத்திய வங்கியின் 2024 இன் 01 ஆம் இலக்க நாணயக் கொள்கை மீளாய்வு | ஜனவரி 23, 2024

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கியின் வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள், சர்வதேச நாணய நிதியத்தின் சென்மதி நிலுவை கையேட்டின் ஆறாவது பதிப்பு (BPM6) மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நாட்டின் அறிக்கை இல.23/12 ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

உதவி ஆளுநர் குறிப்பிடும் பெறுமதி மத்திய வங்கியின் வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகளுடன் பொருந்துகிறது. இது 2023 டிசம்பர் இறுதியில் அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொ 4.3 பில்லியன் எனக் குறிப்பிடுகிறது. எனினும் ஒதுக்குகளின் அறிக்கையிடல் தொடர்பில் கவனமாக ஆராய்ந்தால், இந்தப் பெறுமதி வித்தியாசப்படுகிறது.

மார்ச் 2021 முதல் சீன மக்கள் வங்கியுடன் (PBoC) ஆர்.எம்.பி 10 பில்லியன் (சுமார் ஐ.அ.டொ 1.4 பில்லியன்) பெறுமதியான பரஸ்பர பரிமாற்றல் வசதியை மத்திய வங்கி கொண்டிருந்தது. எனினும் நவம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரையான மத்திய வங்கியின் அறிக்கைகளின் அடிக்குறிப்புகளைக் கவனத்தில் கொள்ளும்போது, இந்தப் பரிமாற்றல் வசதியானது முன்னர் ஒதுக்குகள் என கணக்கில் கொள்ளப்படாத போதும், டிசம்பர் 2021 முதல் ஒதுக்குகளாகக் கணக்கிடப்படுவது தெரியவருகிறது. இந்தப் பரிமாற்றல் வசதியை காலம் தாழ்த்தி ஒதுக்குகளாகக் கணக்கிடுவதன் மூலம் ஒதுக்குகளை அறிக்கையிடுவதற்குப் பயன்படுத்தப்படும் அளவுகோல்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரியவருகிறது.

சர்வதேச தரங்களின் (BPM6) பிரகாரம், ஒதுக்குச் சொத்துகள் நாணய அதிகாரசபையின் நேரடி மற்றும் பயனுள்ள கட்டுப்பாட்டின் கீழ் வருவதுடன் எந்தவித நிபந்தனைகளும் இன்றி உடனடியாகக் கிடைக்க வேண்டும். எனினும் PBoC பரிமாற்றல் வசதி, இந்தத் தரங்களின் பிரகாரம் பல்வேறு நிபந்தனைகளை பூர்த்திசெய்யத் தவறுவதால் ஒதுக்குச் சொத்து எனத் தகுதிபெறவில்லை (மேலதிகக் குறிப்பு 1 ஐப் பார்க்கவும்).

அறிக்கையிடப்பட்ட மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் மற்றும் பயன்படுத்தக்கூடிய ஒதுக்குகளுக்கு இடையேயான வேறுபாட்டை எடுத்துக்காட்டுவதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய அலுவலர் அறிக்கை அவை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தை விளக்குகிறது. இது சீன மக்கள் வங்கியின் பரிமாற்றல் வசதியை பயன்படுத்தக்கூடிய ஒதுக்குகளாக அடையாளம் காணவில்லை. “பயன்படுத்த முடியாத ஒதுக்குகள்” என்பது BPM6 இன் ஒதுக்குச் சொத்து வரையறையின் அடிப்படையில் முரணாக உள்ளது. அதேபோன்று அரசாங்க அமைச்சர்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் 2022 ஏப்ரலில் ஒதுக்குகள் “பூச்சியத்திற்கு” அருகில் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தனர். அவ்வாறு குறிப்பிடும்போது, சர்வதேச தரத்தின் கீழ் (BPM6) சீன மக்கள் வங்கியின் பரிமாற்றல் வசதியை ஒதுக்குகளாகக் கருத முடியாது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே அவ்வாறான அறிக்கையிடல் தரங்களுக்கு அமைய இலங்கை மத்திய வங்கியின் ஒதுக்குச் சொத்துக்களின் பெறுமதியை மதிப்பிட்டால், அது வெறும் ஐ.அ.டொ 3.0 பில்லியன் மட்டுமே ஆகும். இது உதவி ஆளுநர் குறிப்பிடும் ஐ.அ.டொ 4.4 பில்லியன் என்பதை விட மிகக் குறைவாகும். உதவி ஆளுநர் மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அறிக்கையைக் குறிப்பிடுகிறார். எனினும் மேற்குறிப்பிட்ட பகுப்பாய்வின் பிரகாரம் அந்த அறிக்கையில் குறைகள் காணப்படுகின்றன.

எனவே நாங்கள் அவரது அறிக்கையை பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.

மேலதிகக் குறிப்பு 1:

ஒதுக்குச் சொத்துக்களுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் வரைவிலக்கணம்

“ஒதுக்குகள் என்பது சென்மதி நிலுவை கடனளிப்பு தேவைகளைப் பூர்த்தி செய்யவும், நாணய மாற்று விகிதத்தைக் கட்டுப்படுத்த பரிமாற்றுச் சந்தைகளில் தலையிடுவதற்கும், ஏனைய தொடர்புடைய நோக்கங்களுக்காகவும் (அதாவது நாணயம் மற்றும் பொருளாதாரத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதற்கான அடிப்படையாகத் திகழ்வதற்கும்) நாணய அதிகாரசபைகளால் கட்டுப்படுத்தப்படும் மற்றும் உடனடியாகக் கிடைக்கக்கூடிய வெளிநாட்டுச் சொத்துக்களைக் குறிக்கிறது.”

ஒதுக்குச் சொத்துக்களின் அடிப்படையானது நாணய அதிகாரசபைகளால் “கட்டுப்படுத்தக் கூடியது” மற்றும் “பயன்படுத்துவதற்கு உடனடியாகக் கிடைக்கக்கூடியது” ஆகியவற்றில் தங்கியுள்ளது.

ஒதுக்குச் சொத்து என ஒரு சொத்து வகைப்படுத்தப்படுவதற்குத் தகுதிபெற, அது:

  • வெளிநாட்டு உரிமைகோரலைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் அல்லது குறிப்பிடத்தக்க தூய்மையான தங்க வடிவில் இருக்க வேண்டும் (BPM6, பத்திகள்65 மற்றும் 6.78);
  • நாணய அதிகாரசபைகளுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் அல்லது அவற்றின் நேரடி மற்றும் பயனுள்ள கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் (BPM6 பத்தி67);
  • நிபந்தனையற்ற வடிவத்தில் உடனடியாகப் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் (அதாவது, உடனடியாக மாற்றக்கூடியது) (BPM6 பத்தி69);
  • சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றக்கூடிய வெளிநாட்டு நாணயங்களில் இருக்க வேண்டும் (BPM6 பத்தி72);
  • உயர் தரத்தில் இருக்க வேண்டும் (பொதுவாக) (BPM6 பத்தி70).


மூலம்

  1. இலங்கை மத்திய வங்கி. (2023). வாராந்தக் குறிகாட்டிகள். https://www.cbsl.gov.lk/en/statistics/economic-indicators/weekly-indicators
  2. சர்வதேச நாணய நிதியம். (2023). இலங்கை: நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் நீட்டிக்கப்பட்ட ஏற்பாட்டின் கீழான முதலாவது மீளாய்வு (IMF நாட்டின் அறிக்கை இல.23/12). https://www.imf.org/en/Publications/CR/Issues/2023/12/12/Sri-Lanka-First-Review-Under-the-Extended-Arrangement-Under-the-Extended-Fund-Facility-542441
  3. சர்வதேச நாணய நிதியம். (2009). சென்மதி நிலுவை மற்றும் சர்வதேச முதலீட்டு நிலை கையேடு (6வது பதிப்பு). https://www.imf.org/external/pubs/ft/bop/2007/bopman6.htm
  4. சர்வதேச நாணய நிதியம். (2023). SDR பிரிவில் IMF இன் ஒதுக்கு நிலை தொடர்பில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள். https://www.imf.org/external/np/sta/ir/IRProcessWeb/pdf/faqapp.pdf
  5. இலங்கை மத்திய வங்கி. (2023). இலங்கை மத்திய வங்கி சீன மக்கள் வங்கியுடன் பரஸ்பர நாணய பரிமாற்றல் ஒப்பந்தத்தில் ஈடுகிறது. https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/P.R_20210322_The%20Central%20Bank%20of%20Sri%20Lanka%20enters%20into%20a%20Bilateral%20Currency%20Swap%20Agreement_E.pdf
  6. மல்லவாராச்சி. பி (பெப்ரவரி 9, 2022). இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகள் வரலாறு காணாத வீழ்ச்சி, அரசியல் நெருக்கடி. AP நியூஸ் https://apnews.com/article/covid-business-health-economy-sri-lanka-a742a0ebe7a7e0734960d68e49bed69a

விக்கிரமசிங்க, ஆர். (2023). ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் விழாவில் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2023-02-08 அன்று சமர்ப்பித்த அரச கொள்கை தொடர்பான அறிக்கை. இலங்கைப் பாராளுமன்றம்.  https://parliament.lk/files/documents_news/2023/gov-policy-statement-en.pdf

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன