உண்மைச் சரிபார்ப்புகளும்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்த்தன தனது அறிக்கையில், 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுகாதார நெருக்கடி நிலைமையின் போது 2021 ஆம் ஆண்டுக்கு சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.20 பில்லியனால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார். இந்தக் கூற்றினை ஆராய்வதற்கு publicfinance.lk மற்றும் வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளை FactCheck ஆராய்ந்தது.
2019 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.188.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் முறையே ரூ.159.5 பில்லியன் மற்றும் ரூ.159.6 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதை வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.
எனினும், இலங்கை அரசாங்கம் அமைச்சுக்களின் அமைப்பை மாத்திரமல்லாமல், ஒவ்வொரு அமைச்சின் கீழுள்ள வர்த்தமானப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் நிறுவனங்களையும் அடிக்கடி மாற்றுவது குறிப்பிடத்தக்கது. ஆகவே, குறிப்பிட்ட ஒரு அமைச்சின் தலைப்பின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஒதுக்கப்படும் தொகை ஆண்டு தோறும் மாற்றங்களுக்கு உட்படும். குறிப்பிட்ட விடயம் ஒன்றின் செயற்பாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் உள்ள மாற்றங்களை கண்டறிவது சாத்தியம் என்றாலும், இது மிகவும் கடினமானது. ஏனென்றால் விடயத்தின் தலைப்பில் அன்றி அமைச்சின் தலைப்பின் கீழேயே வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன.
சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி இந்தப் பிரச்சினைக்கு ஒரு உதாரணம். சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைந்தது ரூ.20 பில்லியனால் – துல்லியமாகக் குறிப்பிட வேண்டுமென்றால் ரூ.29.1 பில்லியனால் குறைந்துள்ளது என்பதை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரியாகத் தெரிவித்துள்ளார். எனினும், செப்டெம்பர் 2020 இல் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட பின்னர் மருந்துகளின் உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல்களுக்காக தனியான இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டதுடன், வரவு செலவுத்திட்டத்தில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டில் இந்த செயற்பாடுகளுக்கும் சுகாதார அமைச்சின் கீழேயே நிதி ஒதுக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் இந்த இரண்டு அமைச்சுக்களுக்கும் ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ரூ.220.6 பில்லியன் ஆகும்.
ஆகவே, சுகாதார செலவினங்களுக்கு முன்னுரிமை வழங்கும் பொருட்டு, குறைந்த பட்சம் இந்த இரண்டு அமைச்சுக்கள் மற்றும் அதன் செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் ரூ.32 பில்லியன் அதிகரிப்பு காணப்படுகின்றது. ‘சுகாதார அமைச்சு’ என்ற தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.20 பில்லியன் குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரியாகத் தெரிவிக்கின்றார். ஆயினும், இதற்கு முன்னரான சுகாதார ஒதுக்கீடுகள் தற்போது வெவ்வேறு அமைச்சுக்களாக பிரிக்கப்பட்டுள்ளதனால், சுகாதார செலவினங்களுக்கான தாக்கங்களை கண்டறிய இதனைப் பயன்படுத்த முடியாது.
ஆகவே, இந்தக் கூற்றினை நாங்கள் பகுதியளவில் சரியானது என வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.