வைத்தியர் சுதத் சமரவீர

இலங்கையில் கோவிட் – 19 பரவல் குறித்து சிரேஷ்ட தொற்றுநோயியல் நிபுணர் சமரவீர தவறாக வகைப்படுத்துகின்றார்.

"

யாரிடமிருந்து பரவியது என்பது தெரியாமல் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் கண்டறியப்பட்டால், அது சமூகப் பரவல் என அடையாளம் காணமுடியும்.

டெய்லி மிரர் | நவம்பர் 9, 2020

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

இலங்கையில் கோவிட் – 19 பரவல் இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை என சிரேஷ்ட தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார். உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களுக்கு யாரிடம் இருந்து பரவியது என அடையாளம் காணமுடியாத போது மாத்திரமே சமூகப் பரவல் நிகழ்ந்துள்ளது என நிறுவ முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்தக் கூற்றினை ஆராய்வதற்கு, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவினால் வெளியிடப்படும் நாளாந்த கோவிட் – 19 தரவுகள் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோவிட் – 19 தொடர்பான வரையறைகளை FactCheck ஆராய்ந்தது.

கோவிட் – 19 பரவல் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் நான்கு நிலைகளை வரையறுக்கின்றது: தொற்று இல்லை, இறக்குமதியான/ உள்ளூரில் கண்டறியப்பட்ட தொற்றுக்கள், தொற்று கொத்தணிகள் மற்றும் சமூகப் பரவல். இவற்றுக்கான வரையறைகளை அட்டவணை 1 காட்டுகின்றது. கண்டுபிடிக்கப்பட்ட தொற்றுக்கள் கால அளவு, புவியியல் அமைவிடம் மற்றும் பொதுவான வெளிப்பாடுகள் ஆகிய நன்கு வரையறுக்கப்பட்ட அளவுருக்களினால் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் போது கொத்தணிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கோவிட் – 19 பரவல் விவரிக்கப்படுகின்றது. தொற்றாளர் குறித்த கொத்தணியைச் சேர்ந்தவர் என வரையறுப்பதற்கு அந்தக் கொத்தணியுடன் நன்கு வரையறுக்கப்பட்ட (1) கால அளவு (2) புவியியல் அமைவிடம் மற்றும் (3) பொதுவான வெளிப்பாட்டினால் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையே இந்த வரையறை குறிப்பிடுகின்றது.

1 ஜுலை – 9 நொவம்பர் 2020 வரையான காலப்பகுதியில் (இந்த அறிக்கை தயாரான காலப்பகுதி) தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை அட்டவணை 2 காட்டுகின்றது. மினுவாங்கொடை/ பேலியகொடை (M/P) கொத்தணி 5 ஒக்டோபர் ஆரம்பமானது முதல் இந்தக் கூற்று வெளியிடப்பட்டது வரையில் அறிக்கையிடப்பட்ட புதிய தொற்றாளர்களில் 97% (அல்லது 10,533 தொற்றுக்களில் 10,446 தொற்றுக்கள்) இந்தக் கொத்தணியினால் ஏற்பட்டுள்ளதாக அவதானிக்கப்படுகின்றது. ஆகவே, இந்தக் கொத்தணியினால் ஏற்பட்ட பரவலுக்கான கால அளவு 37 நாட்களைத் தாண்டியுள்ளது (அதாவது அதிகபட்ச நோய்த்தொற்று வெளிப்படுவதற்கான காலத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும்). ஆகவே நன்கு வரையறுக்கப்பட்ட கால அளவு என்பதன் அடிப்படையில் மினுவாங்கொடை/பேலியகொடையை கொத்தணியாக வரையறுக்க முடியாது.

மற்றைய இரண்டு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்தால், மினுவாங்கொடை/பேலியகொடை கொத்தணியினால் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்ட தொற்றுக்கள் நாட்டின் 15 மாவட்டங்களில் கண்டறியப்பட்டன. ஆகவே நன்கு வரையறுக்கப்பட்ட புவியியல் அமைவிடத்தின் அடிப்படையிலும் M/P கொத்தணியை வரையறுக்க முடியாது.

கண்டறியப்பட்ட தொற்றுக்களின் பரவலுக்கான 37 நாட்கள் கால அளவு மற்றும் 15 மாவட்டங்களில் பரவியமை காரணமாக, நன்கு வரையறுக்கப்பட்ட ‘பொதுவான வெளிப்பாடு” என்ற வரையறையின் அடிப்படையிலும் M/P கொத்தணியை வரையறுக்க முடியாது.

ஆகவே, கண்டறியப்பட்ட தொற்றுக்களில் அநேகமானவையை M/P கொத்தணியினால் ஏற்பட்டது எனக் குறிப்பிடுவது, கொத்தணி என்பதை வரையறுப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்ட வரையறைகள் மூன்றிலும் தோல்வியடைந்துள்ளது.

எனவே, சிரேஷ்ட தொற்றுநோயியில் நிபுணரின் அறிக்கையை நாங்கள் “தவறானது” என வகைப்படுத்துகின்றோம்.

குறிப்பு: ஒவ்வொரு புதிய தொற்றையும் முன்னருள்ள தொற்றுடன் தொடர்புபடுத்துவதனால் உத்தியோகபூர்வ வகைப்படுத்தலில் தவறு ஏற்பட்டிருக்கலாம். மினுவாங்கொடை/பேலியகொடை புவியியல் அமைவிடத்தில் தோன்றிய தொற்றுடன் இந்த தொடர்புக்கான சாத்தியத்தை கண்டறியும் வரையில் இது மீண்டும் மீண்டும் தொடர்கின்றது. இந்த பிழையான அணுகுமுறை 100 சதவீதமான இலங்கையின் சனத்தொகை கோவிட் – 19 இனால் பாதிக்கப்படும் போதும், M/P கொத்தணிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வரையறுக்கப்படும்   நிலைமையை உருவாக்கும் – இது கொத்தணி என்ற கருத்தினை அர்த்தமற்றதாக்கும்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.

கொத்தணி என்பதற்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் வரையறையுடன் அரசாங்கத்தின் விளக்கம் எவ்வாறு மாறுபடுகின்றது என்பதை புரிந்துகொள்வதற்கு, கோவிட் – 19 தொற்றின் “தொடர்பு” என்பதற்கு காணப்படும் வரையறை மற்றும் இலங்கையில் இது எவ்வாறு அறிக்கையிடப்படுகின்றது என்பதைப் பார்ப்பது பயனுள்ளதாகும்.
உலக சுகாதார ஸ்தாபனம் தொடர்பு என்பதை கோவிட் – 19 தொற்றுடைய நபருடன் 2 நாட்களுக்கு முன்னதாகவும், தொற்று ஏற்பட்ட பின்னர் 14 நாட்களிலும் பின்வரும் வெளிப்பாடுகளைக் கொண்டுள்ள நபர்களைக் குறிப்பிடுகின்றது:
• கோவிட் – 19 தொற்றாளருடன் 15 நிமிடங்களுக்கு மேல் 1 மீற்றர் தூரத்திற்குள் இருப்பது
• கோவிட் – 19 தொற்றாளருடன் நேரடியான உடல் ரீதியான தொடர்பு
• கோவிட் – 19 பாதிக்கப்பட்ட நபருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் (PPE) இல்லாமல் நேரடிக் கவனிப்பை வழங்குதல்
• உள்ளூர் ஆபத்து மதிப்பீடுகளில் குறிப்பிட்டுள்ளவாறு பிற வரையறைகள் [மூடப்பட்ட வீட்டு அமைப்புக்கள், சுகாதார அமைப்புக்கள், பொதுவான/பகிரப்படும் போக்குவரத்துகள் உள்ளிட்ட வெவ்வேறு அமைப்புக்களுக்கான வரையறைகள் இதில் அடங்கும் மற்றும் பிற நன்கு வரையறுக்கப்பட்ட அமைப்புக்கள், வழிபாட்டுத்தலம், வேலையிடங்கள், பாடசாலைகள், தனியார் சமூக நிகழ்வுகள் என ஒன்றுகூடல்கள்].
‘நெருங்கிய தொடர்பு” என்பதற்கு “15 நிமிடங்களுக்கு அதிகமாக மூடப்பட்ட சூழலில் ஒரு நபர் இருத்தல் (ஒரே வீடு/வேலையிடம்/சமூக ஒன்றுகூடல்/ஒரே வாகனத்தில் பயணித்தல்) அல்லது நேரடியான உடல் ரீதியான தொடர்பினைக் கொண்டிருத்தல்” என சுகாதார அமைச்சு வரையறுக்கின்றது. ‘இரண்டாம் நிலை தொடர்பு” என்பதற்கு “அதிக மக்கள் தொகையைக் கொண்ட பகுதிகளிலுள்ள தொற்றாளர்கள்/ அதிக எண்ணிக்கையிலான மக்களுடன் தொடர்பினைக் கொண்டுள்ள தொற்றாளர்கள்/விடுதிகள், முகாம்கள், நிறுவன பராமரிப்பு நிலையம் போன்ற அமைப்புக்களில் வாழும் மக்கள் போன்ற பரவுவதற்கு அதிக ஆபத்து நிறைந்த சூழல்களில் இருந்து அடையாளம் காணப்பட்ட” தொடர்புகளை சுகாதார அமைச்சு வரையறுக்கின்றது.
கொத்தணியின் அங்கமாக நெருங்கிய தொடர்பு மற்றும் இரண்டாம் நிலைத் தொடர்புகளை சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது. அவ்வாறு குறிப்பிடுவதன் மூலமாக உலக சுகாதார ஸ்தாபனம் வரையறுக்கும் கொத்தணி என்பதற்கான வரையறையை சுகாதார அமைச்சு விரிவு படுத்துகின்றது. அதன் மூலமாக சமீபத்திய பரவலானது M/P கொத்தணிக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்ற கூற்றை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கின்றது.
குறிப்பாக, உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொத்தணிப் பரவல் என்பதற்கான வரையறை ‘கொத்தணியுடனான நெருக்கம் தவிர்க்கப்பட்டால் பொது சனங்களுக்கு குறைந்த ஆபத்தே காணப்படும்” எனக் குறிப்பிடுகின்றது. எனினும், நாட்டின் சில பகுதிகளை ‘அதிக ஆபத்து” என சுகாதார அமைச்சு தாமாக வகைப்படுத்துவதால், பரவலின் பண்புகள் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் சமூகப்பரவல் என்பதற்கான வரையறையுடன் பொருந்திப் போகின்றன.
பொறுப்புத்துறப்பு: உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள நான்கு தொற்று நிலைகளுக்கான வரையறைகளை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கூற்றின் மதிப்பீடு சரிபார்க்கப்படுகின்றது. சுகாதார அமைச்சின் தொற்று நிலைகளுக்கான மாற்று வரையறைகளை Factcheckனால் அடையாளம் காணமுடியவில்லை, சிரேஷ்ட தொற்றுநோயியல் நிபுணர் தனது கூற்றில் பயன்படுத்தியிருக்கலாம்.



மூலம்

உலக சுகாதார ஸ்தாபனம், கோவிட் – 19 இடைக்கால வழிகாட்டுதல்களுக்கான அவசரகால தயார்நிலை, தயார்நிலை மற்றும் பதில் நடவடிக்கைகள், 4 நொவம்பர் 2020, பார்வையிட: : https://www.who.int/publications/i/item/critical-preparedness-readiness-and-response-actions-for-covid-19

உலக சுகாதார ஸ்தாபனம், கோவிட் – 19 இடைக்கால வழிகாட்டுதல் பின்னணியில் தொடர்பு தடமறிதல், 10 மே 2020, பார்வையிட: https://apps.who.int/iris/bitstream/handle/10665/332049/WHO-2019-nCoV-Contact_Tracing-2020.1-eng.pdf?sequence=1&isAllowed=y

சுகாதார அமைச்சு மற்றும் சுதேச மருத்துவ சேவைகள், கோவிட் – 19 க்கான புதுப்பிக்கப்பட்ட இடைக்கால தொற்று வரையறைகள் மற்றும் தொற்றாளர்களின் ஆரம்ப முகாமைத்துவம் தொடர்பான ஆலோசனை (பதிப்பு திகதி 04.04.20) பார்வையிட: https://drive.google.com/drive/folders/1nGVulFdN_WSIEFH8cdYolpAHt05uXoiJ

தொற்றுநோயியல் பிரிவு, சுகாதார அமைச்சு மற்றும் சுதேச மருத்துவ சேவைகள், இலங்கையில் கோவிட் – 19 ஆய்வக பரிசோதனை உத்தி பதிப்பு 02, 30 மே 2020, பார்வையிட: http://www.epid.gov.lk/web/images/pdf/Circulars/Corona_virus/final_draft_of_testing_strategy_v_2.pdf

தொற்றுநோயியல் பிரிவு, சுகாதார அமைச்சு, உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் – 19 தொற்றாளர்களின் மாவட்ட மற்றும் MOH/QC வாரியான வகைப்படுத்தல், பார்வையிட: http://www.epid.gov.lk/web/images/pdf/Circulars/Corona_virus/moh_2020_28.pdf

தொற்றுநோயியல் பிரிவு, சுகாதார அமைச்சு, கோவிட் – 19 நாளாந்த நிலை அறிக்கைகள், பார்வையிட: http://www.epid.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=225&lang=en

லான்செட் கோவிட் – 19 ஆணையர், பணிக் குழு மற்றும் ஆணைய செயலகம், ஐநா பொதுச் சபையின் 75 ஆவது அமர்வில் லான்செட் கோவிட் – 19 ஆணைய அறிக்கை, 14 செப்டெம்பர் 2020, லான்செட் 2020; 396:1102-24, பார்வையிட: https://www.thelancet.com/action/showPdf?pii=S0140-6736%2820%2931927-9