ரன்ஜித் சியம்பலாபிடிய

அரசாங்கத்தால் மாதாந்தக் கொடுப்பனவு பெறும் 4 மில்லியன் மக்கள் குறித்து இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய குறிப்பிடுகிறார்

"

4 மில்லியன் மக்கள் (குழு) அரசாங்கத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர்களில் 2 மில்லியன் ஊதியங்களில் உயர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஒய்வூதியக்காரர்கள். மீதமுள்ள 2 மில்லியன் மக்கள் அஸ்வெசும ஊடாக சமூக நலன்புரித் திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்கள்.

ரன்ஜித் சியம்பலாபிடிய ஃபேஸ்புக் பக்கம் | நவம்பர் 8, 2023

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய குறிப்பிடும் இந்தக் கூற்று பத்திரிகைகளில் வேறு விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சமூக ஊடகத்தில் இடப்பட்ட அவருடைய பதிவை மட்டுமே FactCheck.lk ஆராய்கிறது (முக்கியக் குறிப்பைப் பார்க்கவும்). 2024 ஆம் ஆண்டில் 4 மில்லியன் தனிநபர்கள் அரசாங்கத்திடம் இருந்து மாதாந்தக் கொடுப்பனவைப் பெறுவார்கள் என அவர் குறிப்பிடுவதாகப் புரிந்துகொள்ள முடியும். அவர் இந்தப் பெறுமதியை இரண்டு குழுக்களாகக் குறிப்பிடுகிறார்: (1) 2 மில்லியன் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வூதியக்காரர்கள் (2) மாதாந்த நலன்புரிக் கொடுப்பனவுகளைப் பெறும் 2 மில்லியன் மக்கள்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, நலன்புரி நன்மைகள் சபையின் வலைதளம், நிதி அமைச்சின் 2022 ஆண்டறிக்கை, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

குழு 1: 2022 ஆம் ஆண்டுக்கான பொதுத் துறை உத்தியோகத்தர்கள் (1,393,883) மற்றும் ஓய்வூதியக்காரர்களின் (676,430) மொத்த எண்ணிக்கை இராஜாங்க அமைச்சர் குறிப்பிடும் குழு 1க்கான பெறுமதியுடன் பொருந்துகிறது (மேலதிகக் குறிப்பு 1 ஐப் பார்க்கவும்).

குழு 2: இராஜாங்க அமைச்சர் அஸ்வெசும திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்களைக் குறிப்பிடுகிறார். அஸ்வெசும திட்டத்திற்குக் கிடைக்கும் ஒரேயொரு தரவு, 2023 இல் 1,792,265 தகுதியான பயனாளர்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறது. ஆனால் இது பயன்பெறுபவர்களின் உண்மையான எண்ணிக்கையைச் சரியாகப் பிரதிபலிக்காமல் இருக்கலாம்.

இருந்தபோதும் 2024 வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளின் பிரகாரம், அரசாங்கம் 2 மில்லியன் குடும்பங்களுக்கு அஸ்வெசும திட்டத்தை வழங்க ‘எதிர்பார்த்துள்ளது’. குழு இரண்டுக்காக இராஜாங்க அமைச்சர் குறிப்பிடும் பெறுமதிக்கு இது அடிப்படையாக இருக்கலாம்.

அரசாங்கத்திடமிருந்து மாதாந்தம் கொடுப்பனவுகளை 4 மில்லியன் மக்கள் பெறுவார்கள் என்ற இராஜாங்க அமைச்சரின் மதிப்பீடு அரசாங்கத்தின் தரவு மற்றும் வரவுசெலவுத்திட்ட எதிர்வுகூறல்களுடன் பொருந்துகிறது.

ஆகவே இராஜாங்க அமைச்சரின் கூற்று சரியானது என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

முக்கியக் குறிப்பு: இராஜாங்க அமைச்சரின் இந்தக் கூற்று சிலுமின பத்திரிகையில் நவம்பர், 19 2023 அன்று 4 மில்லியன் குடும்பங்கள் வரவு செலவுத்திட்டத்தில் இருந்து நேரடியான நிவாரணத்தை எதிர்பார்ப்பதாக அறிக்கையிடப்பட்டிருந்தது.

“அரசாங்கத்திடமிருந்து தற்போது நலன்புரி உதவிகளைப் பெறும் குழு 2 மில்லியன் ஆகும். அரசாங்க உத்தியோகத்தர்கள், ஓய்வூதிய வயதில் இருப்பவர்கள் மற்றும் ஓய்வூதியக்காரர்கள் அடங்கிய குழுவில் 2 மில்லியன் உள்ளனர். தனியார் துறை உத்தியோகத்தர்களையும் சேர்த்து நாட்டிலுள்ள 5.5 – 6 மில்லியன் குடும்பங்களில் 4 மில்லியன் குடும்பங்கள் வரவு செலவுத்திட்டத்திலிருந்து நேரடியான நிவாரணத்தை எதிர்பார்த்துள்ளன”.

இந்தப் பெறுமதியை அவர் இரண்டு குழுக்களுக்கு அடிப்படையாகக் கொண்டுள்ளார்: (1) தற்போது அரசாங்கத்திடமிருந்து நலன்புரி உதவிகளைப் பெறும் 2 மில்லியன் மக்கள் (2) 2 மில்லியன் அரச உத்தியோகத்தர்கள் அல்லது ஓய்வூதியத்தைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள்.

அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஓய்வூதியக்காரர்கள் தொடர்பில் பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட பெறுமதி உத்தியோகபூர்வ தரவுடன் பொருந்தினாலும், இந்தக் குழுவை வரவு செலவுத்திட்டத்தில் இருந்து ‘நிவாரணத்தை’ எதிர்பார்க்கும் ‘குடும்பங்கள்’ எனக் குறிப்பிடுவது மூன்று காரணங்களால் தவறானது.

நலன்புரி என்பது தேவை அடிப்படையிலான அளவுகோல்களின் அடிப்படையில் வழங்கப்படும் உதவி அல்லது பொருட்களின் வழங்கலைக் குறிக்கிறது. எனவே முதலாவதாக அரச உத்தியோகத்தர்களின் ஊதியத்தை நலன்புரி எனக் கருதமுடியாது. இரண்டாவதாக, முந்தைய உத்தியோகத்தின் அடிப்படையிலான உரிமையின் ஒரு வடிவமாக வழங்கப்படும் ஓய்வூதியத்தையும் நலன்புரியாகக் கருதமுடியாது. மூன்றாவதாக இந்தக் குழுவில் அடையாளம் காணப்பட்ட 2 மில்லியன் தனிநபர்களை 2 மில்லியன் குடும்பங்களாகக் கருதமுடியாது.

மேலதிகக் குறிப்பு 1 – மொத்தத்தில் தேசிய மட்டத்தில் (783,238), மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மட்டத்தில் (398,528) மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் (212,117) அரச உத்தியோகத்தர்கள் உள்ளனர்.

மேலதிகக் குறிப்பு 2 – வரவு செலவுத்திட்டத்தில் ஓய்வூதியக்காரர்கள் ‘மாற்றல்கள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். ஓய்வூதியத்தை அரச உதவியாக இராஜாங்க அமைச்சர் வகைப்படுத்துவது வரவு செலவுத்திட்ட கணக்கீட்டு நடைமுறைகளுடன் பொருந்துகிறது.



மூலம்

நலன்புரி நன்மைகள் சபை வலைதளம், https://www.wbb.gov.lk/#

நிதி அமைச்சு, ஆண்டறிக்கை 2022. https://www.treasury.gov.lk/api/file/39a16e61-7659-476b-8f18-d969c7a69733

நிதி அமைச்சு, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கைகள், வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் 2024: தொகுதி 1. https://www.treasury.gov.lk/api/file/91e9918b-f6cd-486d-8f3a-fd87e5fcb091

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன