மஹிந்த ராஜபக்ஷ

கடந்த காலத்தில் கடன் சுமை குறைந்தது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ தவறாகக் குறிப்பிடுகிறார்

"

2005 ஆம் ஆண்டின் இறுதியில் 90 சதவீதமாகக் காணப்பட்ட மொ.உ.உற்பத்தியில் கடன் விகிதத்தை 2014 ஆம் ஆண்டின் இறுதியில் 69 சதவீதமாக எமது அரசாங்கம் குறைத்துள்ளது.

NewsFirst.lk | டிசம்பர் 20, 2023

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இலங்கையின் மொ.உ.உற்பத்தியில் கடனின் விகிதம் 2005 ஆம் ஆண்டின் இறுதியில் 90 சதவீதத்திலிருந்து 2014 ஆம் ஆண்டு இறுதியில் 69 சதவீதமாகக் குறைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அவரது அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

இந்தக் கூற்றை ஆராய்வதற்காக, இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகள் மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

தேசியக் கடன் என்பது (1) மத்திய அரசாங்கத்தின் கடன் – அரச திறைசேரியின் கடன்களை மட்டும் கொண்டது (2) பொதுப் படுகடன் – மத்திய அரசாங்கத்தின் கடனுடன் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் (SOE) புத்தகங்களிலுள்ள கடன்களையும் கொண்டது. ஒரு நாட்டின் கடன் சுமை பொதுப் படுகடனை அடிப்படையாகக் கொண்டே சர்வதேச நாணய நிதியம் உட்பட உலகம் முழுவதும் மதிப்பிடப்படுகிறது. மத்திய அரசாங்கத்தின் கடனைக் கொண்டு மதிப்பிடப்படுவதில்லை. ஏனெனில் பொதுப் படுகடன் நாட்டின் கடன் பொறுப்புகள் தொடர்பில் முழுமையான கணக்கீட்டைத் தருகிறது.

2005 ஆம் ஆண்டின் இறுதியில் மொ.உ.உற்பத்தியில் பொதுப் படுகடன் விகிதம் 92.1 சதவீதமாக இருந்தது. இது 2014 ஆம் ஆண்டின் இறுதியில் 76.5 சதவீதமாகும். இது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதிகளுடன் பொருந்தவில்லை. எனினும், அவர் குறிப்பிடும் பெறுமதிகள் மொ.உ.உற்பத்தியில் மத்திய அரசாங்கத்தின் கடன் பெறுமதிகளுடன் பொருந்துகின்றன. இது 2005 இல் 90.8 சதவீதமாகவும் 2014 ஆம் ஆண்டில் 69.5 சதவீதமாகவும் உள்ளது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).

மத்திய அரசாங்கத்தின் கடனை மட்டும் குறிப்பிடுவதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் (அ) 2014 இல் ஒட்டுமொத்தக் கடனையும் தவறாகக் குறிப்பிடுகிறார் (ஆ) பொதுப் படுகடன் உண்மையில் 15.6 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ள நிலையில், அவர் 2005 ஆம் ஆண்டிலிருந்து மொ.உ.உற்பத்தியில் கடன் விகிதம் (21.3 சதவீதப் புள்ளிகள்) அதிகளவு குறைந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகத்தில் மத்திய அரசாங்கத்தின் கடனை அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் (SOE) கணக்குகளுக்கு மாற்றி மத்திய அரசாங்கத்தின் கடனைக் குறைத்துக் காட்டியது கண்டறியப்பட்டதால் பாராளுமன்ற உறுப்பினர் மத்திய அரசாங்கத்தின் கடனைப் பயன்படுத்துவது மேலும் தவறாக வழிநடத்துகிறது.  இந்தத் தவறான கணக்கீட்டு நடவடிக்கை பொதுப் படுகடனில் எந்தக் குறைவும் ஏற்படாமல், அறிக்கையிடப்பட்ட மத்திய அரசாங்கத்தின் கடனை செயற்கையாகக் குறையச் செய்தது. உதாரணமாக, 2014 ஆம் ஆண்டில் புத்தளம் நிலக்கரி மின் உற்பத்தி நிலையம், அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி மற்றும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையம் ஆகியவற்றின் கடன் நிலுவைகளான ரூ. 309 பில்லியன் (அல்லது 2014 ஆம் ஆண்டில் மொ.உ.உற்பத்தியில் 3%), மத்திய அரசாங்கத்தின் கடன் புத்தகங்களில் இருந்து அகற்றப்பட்டு பல்வேறு அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் (SOE) புத்தகங்களுக்கு மாற்றப்பட்டன (மேலதிகக் குறிப்பைப் பார்க்கவும்).

மொ.உ.உற்பத்தியின் கடன் விகிதம் குறைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதிகள், பொதுப் படுகடனுக்குப் பதிலாக மத்திய அரசாங்கத்தின் கடன் பெறுமதிகளை மட்டும் மொத்தக் கடனாகக் குறிப்பிடுகிறது. அது மாத்திரமன்றி 2014 ஆம் ஆண்டில் மத்திய அரசாங்கத்தின் கடன் பெறுமதியைக் குறைத்துக் காட்டுவதற்காக அவரது ஆட்சிக்காலத்தில் தவறாகக் கணக்கிடப்பட்ட பெறுமதியை அவர் குறிப்பிடுகிறார். குறித்த காலப்பகுதியில் மொ.உ.உற்பத்தியில் கடன் விகிதத்தில் ஏற்பட்ட உண்மையான வீழ்ச்சியானது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவதை விட மிகக் குறைவாகும் (சதவீதப் புள்ளிகளில் நான்கில் மூன்று பங்கிற்கும் குறைவாகும்). எனினும் குறித்த காலப்பகுதியில் மொ.உ.உற்பத்தியில் பொதுப் படுகடன் 15.6 சதவீதப் புள்ளிகளால் குறைந்தது, மொ.உ.உற்பத்தியில் கடன் விகிதத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காணப்பட்டது என்ற பாராளுமன்ற உறுப்பினரின் முக்கியமான கூற்றை ஆதரிக்கிறது.

ஆகவே பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை நாங்கள் பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.

மேலதிகக் குறிப்பு: தவறான கடன் அறிக்கையிடல் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு வெரிட்டே ரிசர்ச், ‘இலங்கையின் கடனை வழிநடத்துதல்: சிறந்த அறிக்கையிடல் உதவும் – சீனாவின் கடன் குறித்த விடய ஆய்வு’, 2021, ப.5 ஐப் பார்க்கவும்.

அட்டவணை 1: மத்திய அரசாங்கத்தின் கடன் VS பொதுப் படுகடன்



மூலம்

இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கைகள், பார்வையிட, https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports.

நிதி அமைச்சு, ஆண்டறிக்கை 2014, பார்வையிட, https://www.treasury.gov.lk/api/file/33f4533e-3106-4496-86b3-73f696652e05.

வெரிட்டே ரிசேர்ச், ‘இலங்கையின் கடனை வழிநடத்துதல்: சிறந்த அறிக்கையிடல் உதவும் – சீனாவின் கடன் குறித்த விடய ஆய்வு’, பெப்ரவரி 2021, பார்வையிட, https://www.Veritéresearch.org/publication/briefing-note-navigating-srilankas-debt/.

சர்வதேச நாணய நிதியம், ‘IMF அறிக்கை இல. 23/116, இலங்கை’, மார்ச் 2023, பார்வையிட, https://www.imf.org/-/media/Files/Publications/CR/2023/English/1LKAEA2023001.ashx.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன