பந்துல குணவர்த்தன

அமைச்சர் பந்துல குணவர்தன கடனை ஒப்பிடுவதற்குத் தவறான கணக்கீட்டைப் பயன்படுத்துகிறார்

"

மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்ட போது கடன் 2 டிரில்லியனாகக் காணப்பட்டது. அவர் நாட்டைக் கையளித்தபோது கடனானது 7 டிரில்லியனாக இருந்தது. (அந்த) 10 ஆண்டுகளில் கடன் 5 டிரில்லியனால் மாத்திரம் அதிகரித்திருந்தது. (ஆனால்) நாட்டை எங்களிடம் மீளக்கையளித்தபோது கடன் 13 டிரில்லியனாகக் காணப்பட்டது.

பாராளுமன்ற ஹன்சாட் | நவம்பர் 13, 2021

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

2015 – 2019 வரையான ஐந்தாண்டு காலப்பகுதியுடன் அதற்கு முன்னரான 10 ஆண்டு காலப்பகுதியை ஒப்பிடும்போது, ஐந்தாண்டு காலப்பகுதியில் இலங்கையின் கடன் விரைவாக அதிகரித்துள்ளது என்பதே அமைச்சரின் முக்கிய கூற்றாக உள்ளது.

அமைச்சரால் குறிப்பிடப்பட்ட பெறுமதிகளை மதிப்பிடுவதற்கு 2004 – 2020 வரையான மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகள், நிதியமைச்சின் ஆண்டறிக்கைகள் ஆகியவற்றிலுள்ள தரவையும் இரண்டு காலப்பகுதிகளுக்கு இடையேயான கடன் அதிகரிப்பைக் கணக்கிடுவதற்கான முறைகளைக் குறிப்பிடும் வெரிட்டே ரிசர்ச்சின் ‘இலங்கையின் கடன் அதிகரிப்பைத் தெளிவுபடுத்துதல்’ என்னும் அறிக்கையையும் FactCheck.lk ஆராய்ந்தது.

அமைச்சர் குறிப்பிடும் பெறுமதிகள் பின்வருமாறு மாற்றப்படுகின்றன: 2005 முதல் 2014 ஆம் ஆண்டு இறுதிவரை நாட்டின் கடன் 13.3% வருடாந்த வளர்ச்சி வீதத்தில் அதிகரித்தது. 2015 – 2019 காலப்பகுதியில் ஒரளவு குறைவான 13.2% என்ற வருடாந்த வளர்ச்சி வீதத்தில் அதிகரித்தது. அமைச்சரது அறிக்கை அவர் குறிப்பிடும் பெறுமதிகளில் முரணாக உள்ளது மாத்திரமன்றி, அவர் பயன்படுத்தும் பெறுமதிகளும் ஒப்பிடுவதற்குப் பொருத்தமானதாக இல்லை. (வெரிட்டே ரிசர்ச்சின் ‘இலங்கையின் கடன் அதிகரிப்பைத் தெளிவுபடுத்துதல்’ என்னும் அறிக்கையைப் பார்க்கவும்).

கடனை இலங்கை ரூபாயிலும் வெளிநாட்டு நாணயங்களிலும் பெற்றிருப்பதால் கடன் அதிகரிப்பைச் சரியாகக் கணக்கிடுவதற்கு, கடன் அதிகரிப்பை இலங்கை மற்றும் வெளிநாட்டு நாணயங்களில் தனித்தனியாகக் குறிப்பிடுவது அவசியம் ஆகும். அதன் பிறகு ஒப்பிடும் திகதிக்கான நாணய மாற்று வீதத்தின் அடிப்படையில் கடன் அதிகரிப்பை இலங்கை ரூபாய் அல்லது ஐ.அ.டொலர் தொகைக்கு மாற்ற வேண்டும். அமைச்சரின் கூற்றின் அடிப்படையில் 2019 ஆண்டிறுதியை ஒப்பிடும் திகதியாகக் கொண்டு அட்டவணை 1 பெறுமதிகளைத் தருகிறது.

2005 – 2014 காலப்பகுதியில் கடன் அதிகரிப்பு 2019 ஆம் ஆண்டுக்கு மாற்றப்படும்போது ரூ.5,812,368 மில்லியன் அல்லது ஐ.அ.டொ 32,000 மில்லியனுக்குச் சமமாக உள்ளது. 2015 – 2019 காலப்பகுதியில் கடன் அதிகரிப்பு ரூ.4,105,553 மில்லியன் அல்லது ஐ.அ.டொ 22,603 மில்லியனாகக் காணப்படுவதை அட்டவணை 1 காட்டுகிறது. ஆகவே அமைச்சர் குறிப்பிடும் பெறுமதிகளுக்கு மாறாக, கடனில் ஏற்பட்ட அதிகரிப்பு 2015 – 2019 காலப்பகுதியை விட 2005 – 2014 காலப்பகுதியில் அதிகமாகும். (குறிப்பு: 2005 – 2014 என்பது நீண்ட காலம் ஆகும்).

கடனின் சரியான வருடாந்த வளர்ச்சி வீதமும் 2005 – 2014 காலப்பகுதியில் அதிகம் ஆகும். 2015 – 2019 காலப்பகுதியின் 7.87% என்னும் வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிடுகையில் இது 11.13% ஆகும்.

அமைச்சரின் கூற்று இரண்டு காரணங்களால் தவறு ஆகும்: முதலாவது, அவர் குறிப்பிடும் பெறுமதிகளே அவரது கூற்றுக்கு முரணாக உள்ளன. இரண்டாவது ஒப்பீட்டு நோக்கத்திற்காகக் குறிப்பிடும் பெறுமதிகளும் தவறானவை. 2004 – 2014 காலப்பகுதியை விட 2015 – 2019 காலப்பகுதியில் இலங்கையின் கடன் மெதுவாகவே அதிகரித்துள்ளது என்பதைச் சரிசெய்யப்பட்ட பெறுமதிகள் காட்டுகின்றன.

ஆகவே அமைச்சரின் கூற்றை நாங்கள் ‘தவறானது’ என வகைப்படுத்துகிறோம்.

**பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

இலங்கை மத்திய வங்கியின் 2004 – 2020 வரையிலான ஆண்டறிக்கைகளின் பல்வேறு பதிப்புகள்

நிதியமைச்சின் 2004 – 2020 வரையிலான ஆண்டறிக்கைகளின் பல்வேறு பதிப்புகள்

வெரிட்டே ரிசர்ச்சின் ‘இலங்கையின் கடன் அதிகரிப்பைத் தெளிவுபடுத்துதல்’, பார்வையிட: https://www.dailymirror.lk/other/Demystifying-increase-in-Sri-Lankas-debt/117-226501 [இறுதியாக அணுகியது ஜனவரி 19, 2022]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன