தயாசிறி ஜயசேக்கர

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத்தொழில் துறையின் பங்கு குறித்து அமைச்சர் ஜயசேகர தவறாகக் குறிப்பிடுகிறார்

"

கைத்தொழில் துறை தற்போது பாரிய நெருக்கடியில் உள்ளது. 77ம் ஆண்டுக்குப் பின்னர் ஆட்சியிலிருந்த ஒவ்வொரு அரசாங்கமும் இதற்குப் பொறுப்பு… எப்போதும் 54 சதவீதமாகக் காணப்பட்ட கைத்தொழில் துறை 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.

அத தெரண | பிப்ரவரி 4, 2022

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

அமைச்சர் அவரது அறிக்கையில், (1) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத்தொழில் துறையின் பங்கு 54 சதவீதத்தில் இருந்து சடுதியாக 27 சதவீதமாகக் குறைந்துள்ளது (2) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத்தொழில் துறையின் பங்களிப்பு 1977ம் ஆண்டுக்குப் பின்னரே வீழ்ச்சியடைந்துள்ளது எனக் குறிப்பிடுகிறார்.

அமைச்சரின் கூற்றைச் சரிபார்க்க, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத்தொழில் துறையின் பங்களிப்புத் தொடர்பான இலங்கை மத்திய வங்கியின் தரவை FactCheck.lk ஆராய்ந்தது.

முதலாவது கூற்றைப் பொறுத்த வரையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத்தொழில் துறையின் பங்களிப்பு எப்போதும் 30.6 சதவீதத்தைத் தாண்டியதில்லை என்பதை அட்டவணை 1 காட்டுகிறது. 2019ம் ஆண்டில் இது 27.4 சதவீதமாகக் காணப்பட்டது. அமைச்சர் குறிப்பிடுவது போன்று சடுதியான வீழ்ச்சியை (54 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக) இது காட்டவில்லை.

இரண்டாவது கூற்றைப் பொறுத்த வரையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத்தொழில் துறையின் பங்களிப்பு 1968ம் ஆண்டிலிருந்து அதிகரித்து வந்தது. 1974ம் ஆண்டுக்குப் பிறகு 25% – 31% என்ற வரம்புக்குள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. 1977ம் ஆண்டின் கைத்தொழில் துறையின் பங்களிப்பு வீதத்தைவிட அடுத்துவந்த 8 ஆண்டுகளில் பங்களிப்பு வீதம் அதிகமாகக் காணப்பட்டது: 1980, 2005, 2006, 2007, 2008, 2009, 2012 மற்றும் 2013. 2006ம் ஆண்டில் இது அதிகபட்சமாக 30.6 சதவீதத்தை எட்டியது. 2019ம் ஆண்டின் பங்களிப்பு வீதம் 1977ம் ஆண்டின் பங்களிப்பு வீதத்தை விட 1.3% மட்டுமே குறைவாகும்.

அமைச்சர் குறிப்பிடுவது போன்று கைத்தொழில் துறையின் பங்களிப்பு எப்பொழுதும் 54 சதவீதத்தை எட்டியதில்லை. அதேபோன்று சடுதியான வீழ்ச்சியையும் சந்திக்கவில்லை. மற்றும் 1977ம் ஆண்டிலிருந்து வீழ்ச்சிப் போக்கும் காணப்படவில்லை. ஆகவே அவரது அறிக்கையை நாங்கள் ‘தவறானது’ என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

இலங்கை மத்திய வங்கி, வருடாந்த அறிக்கைகள், பார்ப்பதற்கு: https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports/annual-report-2020.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன