பவித்ரா வன்னிஆரச்சி

பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னிஆரச்சி மின்சாரக் கட்டணம் தொடர்பில் தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறார்

"

2014ம் ஆண்டில்… நாங்கள் பல பணிகளை முன்னெடுத்து மின்சாரக் கட்டணத்தை 25 சதவீதத்தால் குறைத்தோம்.

டெய்லி நியூஸ் | மார்ச் 14, 2022

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றை மதிப்பிடுவதற்கு, இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL – Public Utilities Commission of Sri Lanka) ஆவணங்களையும் அறிவித்தல்களையும், இலங்கை மின்சார சபையின் ஆண்டறிக்கைகளையும் FactCheck.lk ஆராய்ந்தது. மாதாந்த பாவனையின் அளவைப் பொறுத்தே மின்சாரக் கட்டணம் அறவிடப்படுவதால் கட்டணத்தின் ஆறு பிரிவுகளிலும் FactCheck.lk மதிப்பீடுகளை முன்னெடுத்தது.

2013ம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னிஆரச்சி மின் வலு சக்தி அமைச்சராக வருவதற்கு முன்னர், சர்வதேச சந்தையில் எண்ணெயின் விலை பீப்பாய்க்கு ஐ.அ.டொ 110க்கு மேலே உயர்ந்ததால், எரிபொருள் சரிக்கட்டல் கட்டணமானது மின்சாரக் கட்டணத்துடன் கூடுதலாகச் சேர்க்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்த காலத்தில் மின்சாரக் கட்டணத்தில் இரண்டு முறை மாற்றங்கள் செய்யப்பட்டன. 2013ம் ஆண்டு முதலில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை ஐ.அ.டொ 100க்குக் கீழே குறைந்ததால் 2014ம் ஆண்டில் எரிபொருள் சரிக்கட்டல் கட்டணம் அகற்றப்பட்டு மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டது.

இரண்டாவதாக முன்னெடுக்கப்பட்ட கட்டணக் குறைப்பினால், ஆறு பிரிவுகளில் ஐந்து பிரிவுகளுக்கான கட்டணங்கள் 24.6% முதல் 26.3% வரை குறைந்ததையும் அதிகூடிய பிரிவிற்கான கட்டணம் 10.2 சதவீதத்தால் குறைந்ததையும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஆவணங்கள் காட்டுகின்றன. எனினும் இந்தக் கட்டணக் குறைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் பதவிக் காலத்தில் முதலில் அதிகரிக்கப்பட்ட கட்டணத்துடன் தொடர்புடையது. உண்மையில் 2013 முதல் பாராளுமன்ற உறுப்பினரின் பதவிக்காலத்தில் ஆறில் நான்கு பிரிவுகளுக்கான கட்டணங்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தன (எரிபொருள் சரிக்கட்டலுக்கான கட்டணம் அகற்றப்பட்டதன் பின்னரும் கூட). குறைந்த பாவனையைக் கொண்ட இரண்டு பிரிவுகளுக்கு மாத்திரமே அவர் குறிப்பிடும் சதவீதத்தால் கட்டணங்கள் குறைந்தன. சர்வதேசச் சந்தையில் எண்ணெயின் விலை குறைந்ததால் எரிபொருள் சரிக்கட்டல் கட்டணம் அகற்றப்பட்டதன் காரணமாக குறைந்த பாவனையைக் கொண்ட இரண்டு பிரிவுகளிலும் கட்டணங்கள் குறைந்தன.

 

ஆகவே மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டது தனது பதவிக் காலத்தின் வெற்றி எனத் தவறாகக் குறிப்பிட்டு, அதற்கான பாராட்டைப் பெற்றுக்கொள்ள அவர் முனைகிறார். அவரது பதவிக் காலத்தில் முதலில் அதிகரிக்கப்பட்ட கட்டணம் பின்னர் மீண்டும் குறைக்கப்பட்டதையே அவர் கட்டணக் குறைப்பாக முன்வைக்கிறார். எரிபொருள் சரிக்கட்டல் கட்டணம் அகற்றப்பட்டதன் காரணமாகவே இரண்டு பிரிவுகளுக்கும் 25 சதவீதக் குறைப்பு கிடைக்கப்பெற்றதாக இலங்கை மின்சாரசபையின் தரவும் குறிப்பிடுகிறது. இந்த இரண்டு பிரிவுகளிலும் நாட்டில் 58.7% பாவனையாளர்கள் உள்ளனர்.

தேவையில்லாத பாராட்டை வழங்கினாலும் கூட, பில்லிங் அலகுகளில் பெரும்பாலானவை பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது போன்ற கட்டணக் குறைப்பைப் பெற்றிருக்கின்றன. எனவே அவரது அறிக்கையை ‘பகுதியளவில் சரியானது’ என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

மசகு எண்ணெய் விலைகள், அவர் வேர்ல்ட் இன் டேட்டா (Our World in Data), பார்வையிட: https://ourworldindata.org/grapher/crude-oil-prices?time=2010..latest, [ இறுதியாக அணுகியது : 18th மே 2022].

இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மின்சாரக் கட்டணம் தொடர்பான முடிவு 2011

இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மின்சாரக் கட்டணம் தொடர்பான முடிவு 2013

இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு உள்நாட்டு பின்னிணைப்பு, கட்டணங்கள் 2014

2012ல் இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பொதுமக்களுக்கான அறிவித்தல்

இலங்கை மின்சார சபை ஆண்டறிக்கை 2014

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன