அசோக் அபேசிங்க

பாராளுமன்ற உறுப்பினர் அபேசிங்க இயற்கை விவசாயம் குறித்த புள்ளிவிபரங்களைச் சரியாகக் குறிப்பிடுகிறார்

"

”உலகில் 16 நாடுகள் மட்டுமே குறைந்தது 10% இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்ந்துள்ளன. அந்த 16 நாடுகளில் எந்த ஆசிய நாடும் இடம்பெறவில்லை”.

ஐக்கிய மக்கள் சக்தி உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கம் | அக்டோபர் 26, 2021

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

குறுகிய காலத்திற்குள் இலங்கை 100% இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்வது சாத்தியமில்லை என்பதை பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கை குறிப்பிடுகிறது.

பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றைச் சரிபார்ப்பதற்கு இயற்கை விவசாய ஆராய்ச்சி நிறுவனமான FiBL மற்றும் IFOAM – ஆர்கானிக்ஸ் இன்டர்நஷனல் வெளியிட்ட ”இயற்கை விவசாய உலகம் 2021 – புள்ளிவிபரங்கள் மற்றும் வளர்ந்துவரும் போக்குகள்” என்ற அறிக்கையை நாங்கள் ஆராய்ந்தோம். இந்த அறிக்கை உலகளவில் இயற்கை விவசாயத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய வளர்ச்சிகள் குறித்த விரிவான ஆய்வை வழங்குவதுடன் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் சர்வதேச வர்த்தக மையம் (ITC) போன்ற ஐக்கிய நாடுகளின் முகவரகங்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இயற்கை விவசாய இயக்கத்தின் சர்வதேசக் கூட்டமைப்பின் (IFOAM) 2008 பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயற்கை விவசாயம் என்பதற்கான வரைவிலக்கணத்தை இந்த அறிக்கை பயன்படுத்துகிறது. அதன் வரைவிலக்கணம் வருமாறு: “இயற்கை விவசாயம் என்பது மண், சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் நலத்தைப் பேணும் ஒரு உற்பத்தி முறையாகும். இது பாதிப்பான விளைவுகளைத் தரும் உள்ளீடுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக சுற்றுச்சூழல் செயல்முறைகள், பல்லுயிர் மற்றும் உள்ளுர் நிலைமைகளுக்கு ஏற்றவாறான சுழற்சிகளில் தங்கியிருக்கிறது…”

இயற்கை விவசாயம் என்பதற்கு அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட தரவு இயற்கை முகாமைத்துவத்தின் கீழ் வரும் அனைத்து நிலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதாவது ஏற்கனவே முழுமையாக மாற்றப்பட்ட இயற்கை நிலங்கள் மற்றும் இயற்கை விவசாயத்திற்கு மாறிவரும் நிலங்கள் என்பன இதில் அடங்கும்.

படம் 1 காட்டுவது போல் 16 நாடுகள் மட்டுமே மொத்த விவசாய நிலத்தில் இயற்கை முகாமைத்துவத்தின் கீழ் குறைந்தது 10 சதவீதத்தைக் கொண்டிருக்கின்றன. இந்தப் பட்டியலில் ஆசியப் பிராந்தியத்திலுள்ள எந்தவொரு நாடும் இடம்பெறவில்லை.

2019 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்த விவசாய நிலங்களில் இயற்கை விவசாயத்தின் பங்கு 2.5% என அறிக்கை மதிப்பிட்டுள்ளது. இயற்கை முகாமைத்துவத்தின் கீழுள்ள மொத்த நிலத்தின் அளவு 2018 ஆம் ஆண்டில் 77,169 ஹெக்டேரில் இருந்து 8.7% குறைந்து 2019 ஆம் ஆண்டில் 70,436 ஹெக்டேராகக் குறைந்துள்ளது.

ஆகவே கிடைக்கும் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கையை ‘சரியானது’ என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

மேலதிகக் குறிப்பு: இயற்கை விவசாய இயக்கத்திற்கான உலகளாவிய ஒருங்கிணைந்த நிறுவனமாக இயற்கை விவசாய இயக்கத்திற்கான சர்வதேசக் கூட்டமைப்பு விளங்குவதுடன், 117 நாடுகளில் சுமார் 800 துணை நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

**FactCheck.lk முடிவு பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கும் சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு சரிபார்ப்பையும் பொறுத்தவரையில் புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் FactCheck.lk மதிப்பீட்டை மீண்டும் சரிபார்க்கும்.

 மூலம்

வில்லர், ஹெல்கா, ஜான் ட்ராவெவ்னிசெஸ்க், கிளாடியா மெயர் & பெர்னாட் சலார்டர் (2021). இயற்கை விவசாய உலகம் 2021 – புள்ளிவிபரங்கள் மற்றும் வளர்ந்துவரும் போக்குகள். இயற்கை விவசாய ஆராய்ச்சி நிறுவனம் FiBL மற்றும் IFOAM – ஆர்கானிக்ஸ் இன்டர்நஷனல்.

https://www.fibl.org/fileadmin/documents/shop/1150-organic-world-2021.pdf

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது