பாட்டலி சம்பிக்க ரணவக்க

பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க இலங்கையின் கடனில் மறைக்கப்பட்ட ஒரு அம்சத்தை குறிப்பிடுகிறார்

"

பொதுத்துறைக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 109.7% என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வரலாற்றிலேயே இதுதான் மிக அதிகமானது. பன்னாட்டு முறிகளை அரசாங்கம் குறைமதிப்பிட்டதை நாங்கள் புறக்கணித்தால் இந்தப் பெறுமதி மொ.உ.உற்பத்தியின் 113 சதவீதத்தைத் தாண்டும்.

தினமின | ஜூன் 2, 2021

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினர் அவரது கூற்றில் (1) 2020 ஆம் ஆண்டில் பொதுத் துறைக் கடன் மொ.உ.உற்பத்தியின் 109.7% (2) இலங்கையின் வரலாற்றிலேயே இதுதான் மிக உயர்ந்த பொதுப்படுகடன் (3) பன்னாட்டு முறிகளை குறைமதிப்பிடாவிட்டால் பொதுப்படுகடன் மொ.உ.உற்பத்தியின் 113 சதவீதத்தைத் தாண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

இந்தக் கூற்றை ஆராய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகளை FactCheck.lk ஆராய்ந்தது.

கூற்று 1: இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை 2020இன் பிரகாரம் 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசாங்கத்தின் கடன் மொ.உ.உற்பத்தியின் 101% ஆகும். அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் வெளிநாட்டுத் திட்டக் கடன்கள் (மொ.உ.உற்பத்தியின் 2.1%) மற்றும் அரசாங்கம் உத்தரவாதம் அளித்த கடன்கள் (மொ.உ.உற்பத்தியின் 6.6%) ஆகியவற்றை ஒன்று சேர்த்தால் மொத்த பொதுத் துறைக் கடன் மொ.உ.உற்பத்தியின் 109.7 சதவீதமாக இருக்கும். இது பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை உறுதிப்படுத்துகிறது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).

கூற்று 2: இலங்கை மத்திய அரசாங்கத்தின் கடன் மொ.உ.உற்பத்தியின் 100 சதவீதத்தைத் தாண்டிய அனைத்து வருடங்களுக்குமான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகளை FactCheck.lk ஆராய்ந்தது. மத்திய அரசாங்கத்தின் கடன் மொ.உ.உற்பத்தியின் 100 சதவீதத்தைத் தாண்டிய 7 சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்). 2000 ஆம் ஆண்டுக்கு முன்னரான மொத்தப் பொதுப்படு கடன் தொடர்பான தரவுகள் ஆண்டறிக்கைகளில் வெளியிடப்படவில்லை. பொதுப்படு கடன் தொடர்பில் வெளியிடப்பட்ட தரவுகளின் பிரகாரம் இலங்கையில் சுதந்திரத்திற்குப் பின்னர் 2020 ஆம் ஆண்டிலேயே மொ.உ.உற்பத்தியின் 109.7% என்ற உயர் மட்டத்தில் கடன் காணப்படுகிறது. இதுவும் பாராளுமன்ற உறுப்பினரின் இரண்டாவது கூற்றை உறுதிப்படுத்துகிறது.

கூற்று 3: இலங்கையின் பன்னாட்டு முறிகளுக்கான வெளிநாட்டுக் கடன் பொறுப்பின் நிலுவையைக் கணக்கிடும் போது இலங்கை மத்திய வங்கி சந்தைப் பெறுமதியைப் பயன்படுத்துவதை பாராளுமன்ற உறுப்பினர் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் பொதுப்படு கடனில் மொத்த பன்னாட்டு முறிகள் பொறுப்பு (சந்தைப் பெறுமதியில்) ஐ.அ.டொ 11,868 மில்லியன் ஆகும். எனினும், கடன் வழங்குவர்களுக்கு இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டிய உண்மையான தொகை பன்னாட்டு முறிகளின் முகப்புப் பெறுமதியை அடிப்படையாகக் கொண்டது. இது ஐ.அ.டொ 14,050 மில்லியன் (2020 ஆம் ஆண்டின் இறுதியில்). பன்னாட்டு முறிகளின் முகப் பெறுமதியை (தற்போதைய சந்தைப் பெறுமதிக்குப் பதிலாக) கருத்தில் கொண்டிருந்தால் இலங்கையின் மொத்தக் கடனானது மொ.உ.உற்பத்தியில் 2.7 சதவீதத்தால் உயர்ந்திருக்கும். இதன் விளைவாக மொத்தக் கடன் பெறுமதி மொ.உ.உற்பத்தியின் 112.4 சதவீதமாக உயர்ந்திருக்கும் (அட்டவணை 4). பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட 113% என்பது இந்தப் பெறுமதியுடன் நெருங்கியிருக்கிறது.

ஆகவே அவரது அறிக்கையை நாங்கள் ‘சரியானது’ என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

மேலதிகக் குறிப்புகள்:

வதியாதோர் (வெளிநாட்டுக் கடன்) கொண்டுள்ள பன்னாட்டு சர்வதேச முறிகளுக்கு மத்திய வங்கி சந்தைப் பெறுமதியைப் பயன்படுத்தும் அதேநேரம், இலங்கையில் வதிவோர்களின் (உள்நாட்டுக் கடன்) பன்னாட்டு முறிகளுக்கு முகப் பெறுமதியைப் பயன்படுத்துகிறது.
மத்திய வங்கியின் 2020 புள்ளிவிபரப் பின்னிணைப்பின் அட்டவணை 103ல் பன்னாட்டு முறிகளின் வெளிநாட்டுக் கடன் கூறுகள் பெறுமதி ரூ.1,796.6 பில்லியன் (ஐ.அ.டொ 9,638 மில்லியன்). இது பக்கம் 142ல் உள்ள அட்டவணை 5.12 இலுள்ள பன்னாட்டு முறிகளின் வெளிநாட்டுக் கடன் கூறுகளுடன் பொருந்த வேண்டும். எனினும் இரண்டாவதாகக் குறிப்பிட்ட அட்டவணையிலுள்ள பெறுமதி ஐ.அ.டொ 7,555 மில்லியன். இதன் மூலம் கணக்கில் காட்டமுடியாத ஐ.அ.டொ 2,083 மில்லியன் தவறு ஏற்படுகிறது.Additional Note

`


மூலம்

இலங்கை மத்திய வங்கி, மத்திய வங்கி ஆண்டறிக்கை 2020, அட்டவணை 5.12, ப. 142, பார்வையிட:

https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports/annual-report-2020.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது