தயாசிறி ஜயசேகர

சுற்றுலாத்துறை மூலமான வருமானத்தின் வீழ்ச்சி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர சரியாகக் குறிப்பிடுகிறார்

"

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினாலும் கோவிட் – 19 பெருந்தொற்றினாலும் சுற்றுலாத் துறை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையின் வீழ்ச்சியினால் ஆண்டொன்றுக்கு இலங்கைக்குக் கிடைத்திருக்க வேண்டிய வருமானம் ஐ.அ.டொலர் 5 பில்லியனை இழந்திருக்கிறோம்.

டெய்லி மிரர் ஒன்லைன் | ஜூலை 13, 2021

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் கோவிட் – 19 பெருந்தொற்று ஆகியவற்றின் பின்னர் இலங்கையின் சுற்றுலாத் துறை பாதிப்படைந்துள்ளது என்ற கூற்றை ஆராய்வதற்கு, கடந்த காலப் பெறுமதிகளுடன் ஏப்ரல் 2019 மற்றும் மார்ச் 2020க்குப் பின்னரான (கோவிட் – 19 கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன) சுற்றுலாத் துறை வருமானங்களின் மாற்றங்களை FactCheck.lk ஒப்பிட்டது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் வெளிநாட்டுத் துறை புள்ளிவிபரங்களை FactCheck.lk ஆராய்ந்தது.

2018 ஆம் ஆண்டில் சுற்றுலாவினால் பெறப்பட்ட வருமானம் ஐ.அ.டொலர் 4,380.6 மில்லியன். 2019 ஆம் ஆண்டில் வருமானம் ஐ.அ.டொலர் 773.7 மில்லியனால் குறைந்து ஐ.அ.டொலர் 3,606.9 மில்லியனாகக் காணப்பட்டது (17.7% வீழ்ச்சி). இந்த அனைத்து வீழ்ச்சிகளும் (மேலும் பல) ஏப்ரல் 2019க்குப் பின்னரே நிகழ்ந்தன. 2019 மே முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி 2018 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 816.8 மில்லியன் ஆகும் (அட்டவணை 1 மற்றும் 2 ஐப் பார்க்கவும்).

2020 ஆம் ஆண்டில் சுற்றுலா மூலமான வருமானம் மேலும் குறைந்து ஐ.அ.டொலர் 682.4 மில்லியானக் காணப்பட்டது (2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 84.4% வீழ்ச்சி). வருமானத்தில் அநேகமானவை 2020 ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதிக்கு உரியவை. அதன் பின்னரான 9 மாதங்களில் வருமானம் ஐ.அ.டொலர் 1 மில்லியனை விடக் குறைவாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினாலும் கோவிட் – 19 பெருந்தொற்றினாலும் சுற்றலாத் துறை பாதிக்கப்பட்டுள்ளது என்ற இராஜாங்க அமைச்சரின் கூற்றுக்கு இந்தப் புள்ளிவிபரங்கள் ஆதரவளிக்கின்றன.

இரண்டு ஆண்டுகளின் நட்டத்தின் சராசரி ஐ.அ.டொலர் 5 பில்லியன் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிடுகிறார். 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் சுற்றுலாத் துறை வருமானத்தின் வருடாந்த வளர்ச்சி வீதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாகும். வளர்ச்சி வீதம் 10 சதவீதமாக இருந்தால் கூட சுற்றுலாத் துறை வருமானம் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் முறையே ஐ.அ.டொலர் 4,818.7 மில்லியன் மற்றும் ஐ.அ.டொலர் 5,300.6 மில்லியனாக இருந்திருக்க வேண்டும். இது ஆண்டுக்குச் சராசரியாக ஐ.அ.டொலர் 5 பில்லியனுக்குச் சற்று அதிகமாகும்.

எனவே (அ) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் கோவிட் – 19 பெருந்தொற்று ஆகியவற்றினால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளது (ஆ) ஐ.அ.டொலர் 5 பில்லியன் வருமான இழப்பு ஆகிய இராஜாங்க அமைச்சரின் இரண்டு கூற்றுகளும் தரவுகளால் உறுதிப்படுத்தப்படுகின்றன. ஆகவே அவரது அறிக்கையை ‘சரியானது’ என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

இலங்கை மத்திய வங்கி, புள்ளிவிபரங்கள், புள்ளிவிபர அட்டவணை, வெளிநாட்டுத் துறை, சுற்றுலா மூலமான வருமானம் (2009 ஜனவரியிலிருந்து இன்று வரை), அட்டவணை, பார்வையிடhttps://www.cbsl.gov.lk/en/statistics/statistical-tables/external-sector [last accessed 19 July 2021]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன