விமலவீர திசாநாயக்க

இலங்கையின் சுகாதார சேவைகளின் தரம் குறித்து பா.உ திசாநாயக்க ஓரளவு சரியாகக் குறிப்பிடுகிறார்

"

நெருக்கடி நிலைக்கு மத்தியிலும், தெற்காசியாவில் இலங்கையின் சுகாதார சேவை சிறப்பாக உள்ளது.

தி லைஃவ் ட்ராவல்லர் | ஜூலை 19, 2023

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை ஆராய்வதற்கு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு (OECD) மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) சுகாதாரம் ஒரு பார்வை: ஆசியா/பசிபிக் 2022 அறிக்கை (மேலதிகக் குறிப்பு 1 ஐப் பார்க்கவும்), நியூகிளியர் திரெட் இனிசியேட்டிவ் (NTI) மற்றும் சுகாதாரப் பாதுகாப்பிற்கான ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் நிலையத்தால் உருவாக்கப்பட்ட உலக சுகாதாரப் பாதுகாப்பு (GHS) குறிகாட்டி (மேலதிகக் குறிப்பு 2 ஐப் பார்க்கவும்) ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

சுகாதாரம் ஒரு பார்வை (HG) அறிக்கை தெற்காசியாவின் ஐந்து நாடுகளை மட்டுமே ஆராய்வதுடன் 3 நாடுகளில் (பூட்டான், மாலைதீவு மற்றும் ஆப்கானிஸ்தான்) கவனம் செலுத்தவில்லை. இந்த அறிக்கை ஒட்டுமொத்த தரப்படுத்தலை வழங்கவில்லை என்றபோதும், இது நான்கு வகைகளில் 19 குறிகாட்டிகளை மதிப்பாய்வு செய்கிறது. ‘சுகாதார நிலை’ மற்றும் ‘சுகாதார வளங்கள்’ ஆகியவற்றில், இலங்கை அனைத்துக் குறிகாட்டிகளிலும் முதலிடத்தில் உள்ளது. எனினும் ‘பராமரிப்பின் தரம்’ எனும் வகைப்படுத்தலில் 4 குறிகாட்டிகளில் ஒன்றில் மட்டுமே இலங்கை முதலிடத்தில் உள்ளது. ‘ஆபத்து குறிகாட்டிகள்’ வகைப்படுத்தலில் 5 குறிகாட்டிகளில் இரண்டில் மட்டுமே இலங்கை முதலிடத்தில் உள்ளது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).

தெற்காசிய நாடுகள் அனைத்திற்குமான தரவுகளை வழங்குவதுடன் ஒட்டுமொத்த தரப்படுத்தலையும் வழங்கும் ஒரே மதிப்பீடு GHS குறிகாட்டி ஆகும். இது 6 வகைகளில் 37 குறிகாட்டிகளில் 195 நாடுகளின் சுகாதாரப் பாதுகாப்பை மதிப்பிடுகிறது.

சமீபத்திய 2021 அறிக்கையில், தெற்காசிய நாடுகளில் இலங்கையை நான்காவதாக GHS குறிகாட்டி நிரல்படுத்தியுள்ளது. இது ஐந்தாவது இடத்திலுள்ள நேபாளத்தை விட 0.1 புள்ளி அதிகமாகும் (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்). உலகளாவிய நிரல்படுத்தலில் இலங்கை 105 இடத்தில் உள்ளது (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்).

GHS உபகுறிகாட்டிகளில் இலங்கை தெற்காசிய நாடுகளில் ‘ஆபத்து சூழல்’ எனும் குறிகாட்டியில் மட்டுமே முதலிடத்தில் உள்ளது. ‘சுகாதார அமைப்பு’ என்பதில் தெற்காசிய நாடுகளில் இலங்கை இறுதியில் உள்ளது. ‘நோய்த்தடுப்பு’, ‘சர்வதேச தரநிலைகளுடன் இணக்கம்’ மற்றும் ‘விரைவான பதில் நடவடிக்கை’ ஆகிய குறிகாட்டிகளில் இலங்கை கீழ் பாதியில் உள்ளது. அதாவது 6 குறிகாட்டிகளில் நான்கில் இலங்கை கீழ் பாதியில் உள்ளது (அட்டவணை 3 ஐப் பார்க்கவும்).

தெற்காசிய நாடுகள் அனைத்திற்குமான சுகாதாரத் துறை மதிப்பீட்டில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. எனினும், தெற்காசியாவிலுள்ள ஐந்து நாடுகளைக் கொண்ட மற்றொரு மதிப்பீட்டில் அநேகமானவற்றில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.

இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கையை நாங்கள் பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

மேலதிகக் குறிப்பு 1:

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு (OECD) மற்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO) பின்வரும் நான்கு வகைகளைக் கவனத்தில் கொள்கிறது:

  1. சுகாதார நிலை: ஆண்கள் மற்றும் பெண்களின் பிறப்பின்போது எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம், ஆண்கள் மற்றும் பெண்கள் 65 வயது வரை உயிர்வாழ்வது மற்றும் 5 வயதிற்குட்பட்ட இறப்பு வீதம்.
  1. ஆரோக்கியத்திற்கான ஆபத்துக் காரணிகள்: 15 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களின் நாளாந்த புகையிலைப் பயன்பாடு, கிராமப் புறங்களில் அடிப்படை சுகாதாரம் மற்றும் குடிநீருக்கான அணுகல் மற்றும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் அதிக எடை விகிதம்.
  2. பராமரிப்பின் தரம்: மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் இறப்பு வீதங்கள், DTP3 மற்றும் தட்டம்மைக்கான முதல் டோஸ் ஆகியவற்றுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட சனத்தொகையின் அளவு.
  1. சுகாதார வளங்கள்: தனிநபர் சுகாதார செலவினம், சிகிச்சைகளுக்கு தனிநபர் செலுத்தும் தொகை, ஆயிரம் பேருக்கான வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை படுக்கைகள்.

மேலதிகக் குறிப்பு 2:

தெற்காசிய நாடுகள் அனைத்திற்குமான தரவைக் கொண்ட ஒரே குறிகாட்டியான GHS குறிகாட்டி பின்வரும் ஆறு வகைகளைக் கவனத்தில் கொள்கிறது:

  1. நோய்த்தடுப்பு: நோய்க்கிருமிகளின் தோற்றம் மற்றும் பரவலைத் தடுத்தல்.
  1. கண்டறிதல் மற்றும் அறிக்கையிடுதல்: சர்வதேச ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான பெருந்தொற்றுகளை ஆரம்பத்திலேயே அறிவதுடன் அறிக்கையிடுதல்.
  1. விரைவான பதில் நடவடிக்கை: பெருந்தொற்றின்போது அதன் பரவலைத் தடுப்பதற்கு விரைவான நடவடிக்கை எடுத்தல்.
  1. சுகாதார அமைப்பு: நோய்வாய்ப்பட்டவர்களைப் பராமரிப்பதற்கும் சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கும் போதுமான மற்றும் வலுவான சுகாதார அமைப்பு.
  1. சர்வதேச தரநிலைகளுடன் இணங்குதல்: தேசிய திறனை மேம்படுத்துவதற்கான கடமைப்பாடுகள் மற்றும் குறைபாடுகளை அடையாளம் காண்பதற்கான நிதித் திட்டமிடல்கள்.
  1. ஆபத்து சூழல்: உயிரியல் அச்சுறுத்தல்களுக்கான ஒட்டுமொத்த ஆபத்து சூழல் மற்றும் நாடு பாதிக்கப்படக்கூடிய நிலை.

அட்டவணை 1: HG குறிகாட்டிகள்

அட்டவணை 2: 2021க்கான தெற்காசிய நாடுகளுடன் GHS குறிகாட்டி ஒப்பீடு

அட்டவணை 3: 2021க்கான தெற்காசிய நாடுகளுடனான GHS குறிகாட்டி உபகுறிகாட்டிகளின் புள்ளி ஒப்பீடு

 மூலம்

அறிமுகம், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு (GHS) குறிகாட்டி, பார்வையிட; https://www.ghsindex.org/about/ [இறுதியாக அணுகியது: 28 ஆகஸ்ட் 2023]

இலங்கைக்கான 2021 GHS குறிகாட்டி விபரம், பார்வையிட; https://www.ghsindex.org/country/sri-lanka/ [இறுதியாக அணுகியது: 28 ஆகஸ்ட் 2023]

உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு (GHS) குறிகாட்டி 2021, உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் கூட்டு நடவடிக்கை மற்றும் பொறுப்புக்கூறுதலை மேம்படுத்துதல், பார்வையிட; https://www.ghsindex.org/wp-content/uploads/2021/12/2021_GHSindexFullReport_Final.pdf [இறுதியாக அணுகியது: 28 ஆகஸ்ட் 2023]

சுகாதாரம் ஒரு பார்வை: ஆசியா/பசிபிக் 2022 அனைவருக்கும் கிடைக்கக்கூடிய மருத்துவ வசதியின் முன்னேற்றத்தை அளவிடுதல், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு (OECD) மற்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO) 2022, பார்வையிட; https://www.oecd-ilibrary.org/deliver/c7467f62-en.pdf?itemId=/content/publication/c7467f62-en&mimeType=pdf [இறுதியாக அணுகியது: 28 ஆகஸ்ட் 2023]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன