நாமல் ராஜபக்ஷ

அரசாங்க முதற்கோலாசான் தேவை குறித்து நாமல் தவறாகக் குறிப்பிடுகிறார்

"

நாங்கள் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு, அரசாங்க முதற்கோலாசானும் ஏனைய முக்கியப் பதவிகளும் அந்தப் பொறுப்புகளில் நீடிக்க வேண்டுமானால் அமைச்சரவை அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும்.

டெய்லி மிரர் ஒன்லைன் | ஏப்ரல் 5, 2022

blatantly_false

Blatantly False

உண்மைச் சரிபார்ப்புகளும்

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பர்னாந்து ஏன் ‘புதிய’ அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டார் என எழுந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அரசாங்க முதற்கோலாசான் மற்றும் சபைத் தலைவர் அமைச்சரவை அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்யாவிட்டால் பாராளுமன்றத்தைக் கூட்ட முடியாது என்ற அடிப்படையில் அவர் தனது வாதத்தை நியாயப்படுத்துகிறார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க அரசியலமைப்பின் விதிகளையும் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளையும் FactCheck.lk ஆராய்ந்தது.

பாராளுமன்றமானது தீர்மானத்தின் மூலம் அல்லது நிலையியற் கட்டளை மூலம் தனது அலுவல்களை ஒழுங்குபடுத்தலாம் என அரசியலமைப்பின் உறுப்புரை 74(1)(ii) குறிப்பிடுகிறது.

சபாநாயகர், பிரதிச் சபாநாயகர் அல்லது குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகிய முக்கிய பதவிகளில் வெற்றிடம் ஏற்படும்போது, அத்தகைய வெற்றிடம் ஏற்பட்டதன் பின்னர் பாராளுமன்றம் முதன்முறையாகக் கூடும்போது அந்தப் பதவிகளுக்கு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதே அரசியலமைப்பின் ஒரே தேவையாக உள்ளது. (உறுப்புரை 64(3)). பாராளுமன்றத்தின் தற்போதைய நிலையியற் கட்டளைகளிலும் இதுவே குறிப்பிடப்பட்டுள்ளது (நிலையியற் கட்டளைகள் 2 மற்றும் 6 (1)). பாராளுமன்றத்தின் அலுவல்களை முன்னெடுப்பதற்கு முதற்கோலாசானுக்கான பதவி நிரப்பப்பட வேண்டும் என அரசியலமைப்போ நிலையியற் கட்டளைகளோ குறிப்பிடவில்லை.

மேலும் முதற்கோலாசான் (அல்லது சபைத் தலைவர்) அமைச்சரவை அமைச்சராக இருக்க வேண்டும் என நிலையியற் கட்டளைகளில் குறிப்பிடப்படவில்லை. கடந்த காலங்களில் முதற்கோலாசான்கள் அமைச்சரவை அமைச்சர்களாக இருக்காத சந்தர்ப்பங்களை பாராளுமன்ற இணையதளத்தில் கிடைக்கும் தகவல்கள் காட்டுகின்றன.

(அ) முதற்கோலாசான் இல்லாமல் பாராளுமன்றத்தைக் கூட்ட முடியாது (ஆ) முதற்கோலாசான் அமைச்சரவை அமைச்சராக இருக்க வேண்டும் என்ற பாராளுமன்ற உறுப்பினரின் இரண்டு கூற்றுக்களும் தவறானவை. எனவே அவரது அறிக்கையை முற்றிலும் தவறானது என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

 

பொருத்தமான சட்டம்

அரசியலமைப்பு

  1. (3) சபாநாயகரின், பிரதிச் சபாநாயகரின் அல்லது குழுக்களின் பிரதித் தவிசாளரின் பதவியானது பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் விளைவாக வல்லாது வேறுவிதமாக வறிதாகின்றவிடத்து, பாராளுமன்றமானது அத்தகைய வெற்றிடம் ஏற்பட்டதன் பின்னர் கூடும் முதற்கூட்டத்தின்போது, விடயத்திற்கேற்ப, சபாநாயகராக, பிரதிச் சபாநாயகராக அல்லது குழுக்களின் பிரதித் தவிசாளராக இருப்பதற்கென வேறோர் உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
  2. (1) அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கமைய, பாராளுமன்றமானது தீர்மானத்தின் மூலம் அல்லது நிலையியற் கட்டளை மூலம் பின்வருவனவற்றிற்கு ஏற்பாடு செய்யலாம் –

(i) சபாநாயகர், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுத்தலும் அவர்கள் ஓய்வு பெறுதலும்

(ii) பாராளுமன்றத்தின் அலுவல்களை ஒழுங்குபடுத்துதல் அதன் கூட்டங்களின்போது ஒழுங்கை நிலைநாட்டுதல் அத்துடன் ஏற்பாடு செய்யப்படவேண்டுமென அரசியமைப்பினால் தேவைப்படுத்தப்பட்ட அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வேறேதேனும் கருமம்

நிலையியற் கட்டளைகள்

  1. சபாநாயகரின் பதவியில் வெற்றிடமொன்று ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் அவ்வெற்றிடம் ஏற்பட்டதன் பின்னர் கூடும் முதலாவது கூட்டத்தில் பாராளுமன்றம் சபாநாயகர் ஒருவரைத் தேர்வு செய்வதற்கு முற்பட வேண்டும்.
  2. (1) ஓராம் நிலையியற் கட்டளையில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம், புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின்போது அல்லது பிரதிச் சபாநாயகர் அல்லது குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவியில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டதன் பின்னர் நிகழும் முதலாவது கூட்டத்தின் பொது அலுவல் ஆரம்பத்தின்போது, சந்தர்ப்பத்திற்கமைய, பிரதிச் சபாநாயகர் ஒருவரை அல்லது குழுக்களின் பிரதித் தவிசாளர் ஒருவரை தேர்வுசெய்வதற்குப் பாராளுமன்றம் முற்படும்.

 

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு

  1. சபாநாயகர் (இவர் தலைவராகச் செயற்படுவார்) பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்ற சபைத் தலைவர், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்தின் முதற்கோலாசான், எதிர்கட்சி முதற்கோலாசான், தெரிவுக் குழுவால் நியமிக்கப்பட்ட எட்டு பிற உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட பாராளுமன்ற அலுவல்களைக் கவனிப்பதற்கான குழு ஒன்று இருக்கும். சபாநாயகர் பாராளுமன்ற சபைத் தலைவருடன் ஆலோசித்து பாராளுமன்றத்தின் அலுவல்கள் மற்றும் ஏனைய விடயங்களை விவாதிப்பதற்குத் தேவையான நேரத்தைப் பரிசீலித்து தீர்மானிப்பது பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கடமை ஆகும். பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்ட அறிக்கை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும்.

 மூலம்

இலங்கை அரசியலமைப்புச் சட்டம் https://www.parliament.lk/files/pdf/constitution.pdf.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் https://parliament.lk/files/pdf/standing-orders-en.pdf

பாராளுமன்ற இணையதளம் ‘அரசாங்க முதற்கோலாசான்’ https://www.parliament.lk/chief-government-whips.