ஆட்சியில் இரண்டு ஆண்டுகள், சரிபார்க்கப்பட்ட மூன்று கூற்றுகள்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பேரணி உரை
தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, செப்டெம்பர் 6, 2026 அன்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றினார். அதன் போது ஜனாதிபதி முன்வைத்த மூன்று கூற்றுகளை FactCheck.lk சரிபார்த்தது.
கூற்று 1: “இதன் விளைவாக, 2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரசாங்கத்தின் மிக உயர்ந்த வருமானமான 16.7 சதவீதத்தை எங்களால் பதிவு செய்ய முடிந்தது. இது கடந்த 30 ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த வருமானமாகும்.”
உண்மைச் சரிபார்ப்பு: ஜனாதிபதி குறிப்பிட்ட இந்தத் தொகையானது, இலங்கை மத்திய வங்கியின் “வருமானமும் கொடைகளும்” என்னும் உப தலைப்பைக் குறிக்கின்றது. இது 2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.7% ஆகக் காணப்பட்டது. எனினும், கடந்த 30 ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த மட்டம் இதுவல்ல.
1996 முதல் 2025 வரையான 30 ஆண்டு காலப்பகுதியை எடுத்துக்கொண்டால், வருமானமும் கொடைகளும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.7 சதவீதத்தை விட ஒன்பது தடவைகள் அதிகமாக இருந்துள்ளன என்பதை மத்திய வங்கியின் ‘ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு 2025: சிறப்பு புள்ளிவிபரப் பின்னிணைப்பு’ காட்டுகின்றது. இதில் ஓர் ஆண்டைத் தவிர ஏனைய அனைத்து ஆண்டுகளிலும் இந்த விகிதம் 17% அல்லது அதற்கும் அதிகமாகவே காணப்பட்டதுடன், 1996 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 20.1% ஆகப் பதிவாகியிருந்தது.
இவ்வாறாக, 2025 ஆம் ஆண்டில் அரச வருமானமும் கொடைகளும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.7 சதவீதமாக அதிகரித்திருந்த போதிலும், அது கடந்த 30 ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த மட்டம் அல்ல. இந்த விகிதம் 2006 ஆம் ஆண்டிற்குப் பிறகான மிக உயர்ந்த மட்டமாக இருப்பதால், இக்கூற்றை மூன்று தசாப்தங்களுக்குப் பதிலாக, கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில் பதிவான மிக உயர்ந்த மட்டம் எனக் குறிப்பிட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும்.
முடிவு: தவறானது
மூலம்: இலங்கை மத்திய வங்கி (CBSL), ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு 2025: சிறப்பு புள்ளிவிபரப் பின்னிணைப்பு (https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-economic-review/annual-economic-review-2025/special-statistical-appendix)
கூற்று 2: “1957 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கையில் பதிவான மிகக் குறைந்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை நாம் 2025 ஆண்டில் பதிவு செய்துள்ளோம்.”
உண்மைச் சரிபார்ப்பு: 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் ஒட்டுமொத்த வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% என இலங்கை மத்திய வங்கியின் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு 2025: சிறப்பு புள்ளிவிபரப் பின்னிணைப்பு பதிவுசெய்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் கடந்த காலப் புள்ளிவிபரங்களின்படி, 1957 முதல் 2024 வரையான எந்தவொரு ஆண்டிலும் இதைவிடக் குறைந்த பற்றாக்குறை பதிவாகவில்லை. இதற்கு அடுத்தபடியாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3% என்னும் குறைந்த பற்றாக்குறை 1974 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்தது.
முடிவு: சரியானது
மூலம்: இலங்கை மத்திய வங்கி (CBSL), ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு 2025: சிறப்பு புள்ளிவிபரப் பின்னிணைப்பு (https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-economic-review/annual-economic-review-2025/special-statistical-appendix)
கூற்று 3: “அடுத்ததாக, மத்திய கிழக்கு யுத்தம் ஆரம்பித்தது… அதனால் ஏற்பட்ட எரிபொருள் விலையேற்றத்தை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எரிபொருள் மற்றும் மின்சார மானியங்களுக்காக நாம் ரூ.100 பில்லியனை ஒதுக்கினோம். இதில் ரூ.60 பில்லியன் எரிபொருள் மானியங்களுக்காக வழங்கப்பட்டது. அதாவது, உண்மையான விலையை விட ரூ.100 குறைவாக எரிபொருள் விற்பனை செய்யப்பட்டது. விற்பனை செய்யப்பட்ட ஒவ்வொரு லீற்றர் எரிபொருளுக்கும், அரசாங்கம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும் (CPC) அதேபோன்று IOC நிறுவனத்திற்கும் ரூ.100 ஐ வழங்கியது.”
உண்மைச் சரிபார்ப்பு: மத்திய கிழக்கு யுத்தம் வெடித்ததன் பின்னர் உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் மானியத்தையே ஜனாதிபதியின் கூற்று குறிப்பிடுகின்றது. லீற்றருக்கு ரூ.100 மானியம் என்பது ஒட்டோ டீசலுக்கு மாத்திரமே வழங்கப்பட்டதுடன், 92 ஒக்டேன் பெற்றோலுக்கு லீற்றருக்கு ரூ.20 என்ற குறைந்த மானியமே வழங்கப்பட்டது.
92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசலுக்கான மானியச் செலவு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் என்னவாக இருந்திருக்கும் என்பதை, அறிக்கையிடப்பட்ட விற்பனை அளவுகளைத் தொன்களிலிருந்து லீற்றர்களாக மாற்றி FactCheck.lk கணக்கிட்டது. இதன் அடிப்படையில், 92 ஒக்டேன் பெற்றோலுக்கான மானியச் செலவு ரூ.9.7 பில்லியனாகவும், ஒட்டோ டீசலுக்கான மானியச் செலவு ரூ.55.5 பில்லியனாகவும் அமைந்ததுடன், மொத்தமாக சுமார் ரூ.65.1 பில்லியனாக இருந்தது. மதிப்பிடப்பட்ட இந்த முழுத்தொகையும் விடுவிக்கப்பட்டதா என்பதை வெளிப்படையாகக் கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் FactCheck.lk இனால் உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும், மதிப்பிடப்பட்ட மானியமான ரூ.65.1 பில்லியன் என்பது, ஜனாதிபதி குறிப்பிட்ட ரூ.60 பில்லியனுக்கு நெருக்கமாகவே உள்ளது.
லங்கா IOC நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலாண்டு நிதி அறிக்கைகளிலும் இந்த மானியம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், குறைந்த விலையில் விற்பனை செய்த போதிலும் அந்நிறுவனம் இலாபத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது மானியத்தின் பெரும்பாலான பகுதி வழங்கப்பட்டதைக் காட்டுவதுடன், அரசாங்கம் லங்கா IOC நிறுவனத்திற்கும் மானியத்தை வழங்கியது என்ற ஜனாதிபதியின் கூற்றை உறுதிப்படுத்துகின்றது.
எனவே, மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாத காலப்பகுதியைக் கருத்தில் கொள்ளும்போது, அரசாங்கம் எரிபொருள் விலை மானியமாக சுமார் ரூ.60 பில்லியனை வழங்கியது என்ற ஜனாதிபதியின் கூற்று சரியானதாகும்.
முடிவு: சரியானது
மூலம்: அமைச்சரவை அலுவலகம், மார்ச் 30, 2026 திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம், “அரசாங்கத்தினால் சலுகைகளை வழங்குவதன் மூலம் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்துதல்” (https://www.cabinetoffice.gov.lk/cab/index.php?option=com_content&view=article&id=16&Itemid=49&lang=en&dID=13858);
இலங்கை மத்திய வங்கி (CBSL), மாதாந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள் (https://www.cbsl.gov.lk/en/statistics/economic-indicators/monthly-indicators);
லங்கா IOC PLC வருடாந்த அறிக்கை 2025/26, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை (https://www.cse.lk/company-profile?symbol=LIOC.N0000);
ஜுன் 30, 2026 உடன் முடிவடைந்த காலப்பகுதிக்கான லங்கா IOC PLC இடைக்கால நிதி அறிக்கைகள், கொழும்பு பங்குப் பரிவர்த்தனை (https://cdn.cse.lk/cmt/upload_report_file/729_1784289979695.pdf)
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
This post is also available in: