உண்மைச் சரிபார்ப்புகளும்
ஜனாதிபதி அவரது அறிக்கையில் முந்தைய அரசாங்கங்கள் பெற்ற பல்வேறு கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய சுமை தற்போதைய அரசாங்கம் மீது விழுந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். அதற்கு உதாரணமாக, 2015ம் ஆண்டுக்கு முன்னதாக இலங்கை ஐ.அ.டொ 5 பில்லியன் பெறுமதியான நாட்டிற்கான பன்னாட்டு முறிகளைப் பெற்றிருந்ததாகவும், 2015 – 2019 வரையில் ஆட்சியிலிருந்த அரசாங்கம் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் கடன்தொகையை ஐ.அ.டொ 15 பில்லியனாக உயர்த்தியது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, 2014 இறுதி முதல் 2019 இறுதி வரையான காலப்பகுதியில் மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் உள்ள வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கடன் பெறுமதிகளை FactCheck.lk ஆராய்ந்தது.
நாட்டின் மொத்தக் கடன் 42.8 சதவீதத்தால் அதிகரித்ததை அட்டவணை 1 காட்டுகிறது. இதில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் கடன்கள் உட்பட மொத்த வெளிநாட்டுக் கடன்கள் ஐ.அ.டொ 10 பில்லியன் அல்லது 35 சதவீதத்தால் (ஐ.அ.டொ 28.5 பில்லியனில் இருந்து ஐ.அ.டொ 38.6 பில்லியன்) அதிகரித்துள்ளன. இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம் நாட்டிற்கான பன்னாட்டு முறிகள். அதே காலப்பகுதியில் ஐ.அ.டொ 8.8 பில்லியனால் (ஐ.அ.டொ 5.3 பில்லியனில் இருந்து ஐ.அ.டொ 14.1 பில்லியன் – 167% அதிகரிப்பு) நாட்டிற்கான பன்னாட்டு முறிகள் அதிகரித்துள்ளன.
ஜனாதிபதி சுட்டிக்காட்டும் அதிகரிப்பு ஐ.அ.டொ 10 பில்லியன் ஆகும் (ஐ.அ.டொ 5 பில்லியனில் இருந்து 15 பில்லியன் – 200% அதிகரிப்பு). இது மத்திய வங்கியின் 2020 ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெறுமதியை விட குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகும். எனினும், நாட்டிற்கான பன்னாட்டு முறிகளுக்கான நிலுவைத் தொகையாக மத்திய வங்கி அதன் 2019 ஆண்டறிக்கையில் ஐ.அ.டொ 15.2 பில்லியனைத் தற்காலிகப் பெறுமதியாகக் குறிப்பிட்டிருந்தது. எனவே இந்தத் தற்காலிகப் பெறுமதிகளில் இருந்து ஜனாதிபதி அவர் குறிப்பிடும் இந்தப் பெறுமதியைப் பெற்றிருக்கக்கூடும்.
வெளிநாட்டுக் கடன்களின் அதிகரிப்புக்கு நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் கடன் அதிகரிப்பை ஜனாதிபதி உதாரணமாகக் காட்டுவது தவறானது. வெளிநாட்டுக் கடன்களில் ஏற்பட்ட மொத்த அதிகரிப்பு 35 சதவீதமே, அவர் உதாரணத்தில் குறிப்பிடுவது போன்று 200 சதவீதம் அல்ல. உதாரணத்தில் குறிப்பிடப்பட்ட அதிகரிப்பும் 167 சதவீதத்தால் மிகைப்படுத்திக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அவரது உதாரணத்தில் குறிப்பிடப்பட்ட பெறுமதிகள், மத்திய வங்கி வெளியிட்ட காலாவதியான தற்காலிகப் பெறுமதிகளுடன் பொருந்துவதால் அவரது அறிக்கையை நாங்கள் ‘பகுதியளவில் சரியானது’ என வகைப்படுத்துகிறோம்.
குறிப்பு: 2015 – 2019 வரையான காலப்பகுதியில் கடன்களில் ஏற்பட்ட மொத்த அதிகரிப்பில் 89.8 சதவீதமானது, முந்தைய அரசாங்கங்கள் பெற்றுக்கொண்ட கடன்களுக்கான வட்டிக் கொடுப்பனவுகள் என்பதை வெரிட்டே ரிசேர்ச்சின் ‘இலங்கையின் கடன் அதிகரிப்பை தெளிவுபடுத்துதல்’ என்னும் அறிக்கையில் பார்க்கலாம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் அரசாங்கத்தின் கடன் நிலுவை
மூலம்
இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கைகள், 2014 – 2019, பார்வையிட:
https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports
வெரிட்டே ரிசேர்ச், இலங்கையின் கடன் அதிகரிப்பைத் தெளிவாக்குதல், பார்வையிட: https://www.veriteresearch.org/wp-content/uploads/2022/03/VR_ENG_Insights_Feb2022_Demystifying-the-increase-in-Sri-Lankas-debt.pdf