பசில் ராஜபக்ஷ

2021 ஆம் ஆண்டு வருமானத்தில் ஏற்பட்ட குறைவு தொடர்பில் நிதியமைச்சர் மிகைப்படுத்துகிறார்

"

விசேடமாக கோவிட் – 19 பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டில் மாத்திரம் நாங்கள் பெற்றிருக்கக்கூடிய வருமானத்தில் ரூ.1,500- 1,600 பில்லியன் குறைவு ஏற்பட்டுள்ளது. நாங்கள் நிச்சயமாக ஈட்டுவோம் என மதிப்பிட்ட வருமானத்தை விடவும் இது மிக அதிகமாகும்

பாராளுமன்ற ஹன்சாட் | செப்டம்பர் 7, 2021

blatantly_false

Blatantly False

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றை ஆராய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள் மற்றும் நிதியமைச்சின் ஆண்டறிக்கையை FactCheck.lk ஆராய்ந்தது.

ஹன்சாட் மொழிபெயர்ப்பையும் அவரது உரையின் வீடியோவையும் (இணையதளத்தில் மேலதிகக் குறிப்பைப் பார்க்கவும்) ஒப்பிடுவதில் காணப்படும் தெளிவின்மை காரணமாக அமைச்சர் முன்வைத்த வருமானக் குறைவு ஒப்பீட்டை சாத்தியமான இரண்டு வித விளக்கங்களுடன் FactCheck.lk மதிப்பிட்டது:

(அ) 2021 வருமானத்தில் ஏற்பட்ட குறைவு கோவிட் – 19க்கு முன்னரான அதே காலப்பகுதியில் அரசாங்கத்தின் வருமானத்துடன் ஒப்பீடு

(ஆ) 2021 வருமானத்தில் ஏற்பட்ட குறைவு 2021 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வருமான மதிப்பீட்டுடன் ஒப்பீடு

(அ) 2021 ஆம் ஆண்டின் வருமானம் கோவிட்டுக்கு முன்னரான வருமானத்துடன் ஒப்பிடப்படுகிறது: அரசாங்கத்தின் வருமானத்துக்கான தரவு ஜனவரி முதல் ஜுலை வரையான காலப்பகுதிக்குக் கிடைக்கிறது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் அரச வருமானம் ரூ. 799.8 பில்லியன். கோவிட்டுக்கு முன்னரான காலப்பகுதியில் அதிகூடிய வருமானம் 2018 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளது. ஜனவரி – ஜுலை 2021 வரையிலான வருமானம் 2018 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியை விட ரூ.285.2 பில்லியன் குறைவாகும்.

கோவிட்டுக்கு முன்னரான காலப்பகுதியில் அதிகூடிய வருமானத்துடன் ஒப்பிட்டாலும் 2021 ஆம் ஆண்டில் வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி நிதியமைச்சர் குறிப்பிடும் ரூ.1,600 பில்லியன் என்பதை விடக் குறைவாகும். இந்த அடிப்படையில் கணக்கிடப்பட்ட பெறுமதியை விட அமைச்சர் குறிப்பிடும் பெறுமதி ஐந்து மடங்கை விட அதிகமாகும்.

(ஆ) 2021 ஆம் ஆண்டின் வருமானம் மதிப்பிடப்பட்ட வருமானத்துடன் ஒப்பிடப்படுகிறது: 2021 முழு ஆண்டுக்கும் நிதியமைச்சின் 2020 ஆண்டறிக்கை எதிர்வுகூறிய வருமானம் ரூ.1,961 பில்லியன். இந்தப் பெறுமதியை 7 மாதங்களுக்குப் பங்கிடும்போது ஜனவரி முதல் ஜுலை 2021 வரையான காலப்பகுதிக்கான எதிர்வுகூறப்பட்ட வருமானம் ரூ.1,144 பில்லியன் ஆகும். ஜனவரி – ஜுலை 2021 வரையான காலப்பகுதியில் உண்மையான வருமானம் எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தை விட ரூ.344.2 பில்லியனால் குறைவாகும்.

ஆண்டின் தொடக்கம் முதல் தற்போது வரையான எதிர்வுகூறப்பட்ட வருமானத்துடன் (ஜுலை மாத இறுதியில்) உண்மையான 2021 ஆம் ஆண்டின் வருமானத்தை ஒப்பிடுகையில் வீழ்ச்சியானது நிதியமைச்சர் குறிப்பிடும் பெறுமதியை விட மிகக் குறைவாக உள்ளது.

அமைச்சர் குறிப்பிடும் வருமானக் குறைவு என்பதற்கான இரண்டு விளக்கங்களிலும் அவர் குறிப்பிடும் பெறுமதிக்கும் உண்மையான பெறுமதிக்கும் இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது. எனவே நாங்கள் நிதியமைச்சரின் அறிக்கையை ‘முற்றிலும் தவறானது’ என வகைப்படுத்துகிறோம்.

**FactCheck.lk முடிவு பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கும் சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு சரிபார்ப்பையும் பொறுத்தவரையில் புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் FactCheck.lk மதிப்பீட்டை மீண்டும் சரிபார்க்கும்.

மேலதிகக் குறிப்பு:

ஹன்சாட்டில் வழங்கப்பட்டுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அறிக்கைக்கும் பாராளுமன்றத்தில் அமைச்சரால் வழங்கப்பட்ட உண்மையான உரைக்கும் இடையில் முரண்பாடு உள்ளதை FactCheck.lk கவனிக்கிறது. ஹன்சாட்டிலுள்ள அறிக்கையைப் பின்வருமாறு மொழிபெயர்க்க முடியும்: ”விசேடமாக கோவிட் – 19 பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டில் மாத்திரம் நாங்கள் பெற்றிருக்கக்கூடிய வருமானத்தில் ரூ.1,500- 1,600 பில்லியன் குறைவு ஏற்பட்டுள்ளது. நாங்கள் நிச்சயமாக ஈட்டுவோம் என மதிப்பிட்ட வருமானத்தை விடவும் இது மிக அதிகமாகும்”. எனினும் அமைச்சர் பாராளுமன்றத்தில் வழங்கிய உரையைப் பின்வருமாறு மொழிபெயர்க்க முடியும், ”விசேடமாக இந்தப் பெருந்தொற்றுக் காலப்பகுதியில் இந்த ஆண்டில் மாத்திரம் நாங்கள் பெற்றிருக்க வேண்டிய வருமானத்தில் தற்போது வரை ரூ.1,500 – 1, 600 பில்லியன் குறைந்துள்ளது. இந்தத் தொகை (குறைவு) நாங்கள் மதிப்பிட்ட தொகையுடன் ஒப்பிடப்படுகிறது”.



மூலம்

இலங்கை மத்திய வங்கி, வாராந்த பொருளாதாரக் குறிகாட்டிகள், பார்வையிட: https://www.cbsl.gov.lk/en/statistics/economic-indicators/weekly-indicators [last accessed: 10 November 2021]

நிதியமைச்சு, ஆண்டறிக்கை (2020), பார்வையிட: https://www.treasury.gov.lk/api/file/0b7d1935-6235-4156-97b6-752d6a8039d0 [last accessed: 10 November 2021]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன