உண்மைச் சரிபார்ப்புகளும்
2024 வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போது, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க: (அ) “வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களிடம் இருந்து கிடைத்த (குறைந்த) பணவனுப்பல்கள்” மற்றும் (ஆ) “சுற்றுலா மூலம் கிடைத்த (குறைந்த) வருமானம்” ஆகிய இரண்டும் இலங்கையில் 2022 ஆம் ஆண்டின் “வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடிக்கு” பங்களித்துள்ள இரண்டு “முக்கிய காரணிகள்” எனக் குறிப்பிடுகிறார்.
இந்தக் கூற்றை ஆராய்வதற்கு, நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் 2017 முதல் 2022 வரையான அறிக்கைகளை FactCheck.lk ஆராய்ந்தது.
இராஜாங்க அமைச்சர் வெளிநாட்டுச் செலாவணி திரவத்தன்மை நெருக்கடியைக் குறிப்பிடுகிறார் என FactCheck.lk விளங்கிக் கொள்கிறது. இது ஒரு நாட்டிடம் வெளிநாட்டு நாணய வெளிப்பாய்ச்சல்களுக்குப் போதுமான வெளிநாட்டு நாணயம் (வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள் மூலமாகவோ மேலதிக வெளிநாட்டு நாணய ஒதுக்குகள் மூலமாகவோ) இல்லாதபோது ஏற்படும் நிலை ஆகும்.
இலங்கைக்கான வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களுக்கான முக்கிய மூலங்களாக வெளிநாட்டுக் கடன் (கடன்கள்) உட்பாய்ச்சல்கள், ஏற்றுமதிகள் மூலமான வருமானங்கள், வெளிநாட்டு பணவனுப்பல்கள், சுற்றுலா மூலமான வருமானங்கள் ஆகியன உள்ளன. வெளிநாட்டு நாணய வெளிப்பாய்ச்சல்களுக்கான முக்கிய காரணிகளாக வெளிநாட்டுக் கடன் மீள்கொடுப்பனவுகள், இறக்குமதிகளுக்கான செலவுகள் என்பன காணப்படுகின்றன.
இராஜாங்க அமைச்சரின் கூற்றை மதிப்பிடுவதற்கு, வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடியின்போது (2020 – 2022 – கோவிட் -19 மற்றும் பொருளாதார நெருக்கடி ஆண்டுகள்) வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள் மற்றும் வெளிநாட்டு நாணய வெளிப்பாய்ச்சல்களில் ஏற்பட்ட மாற்றங்களை அதற்கு முன்னரான ஆண்டுகளுடன் (2017 – 2019) FactCheck.lk ஒப்பிட்டது. வெளிநாட்டுச் செலாவணி திரவத்தன்மை நெருக்கடிக்கு வழிவகுத்த வெளிநாட்டு நாணயப் பாய்ச்சல்களில் ஏற்பட்ட மாற்றங்களை அட்டவணை 1 காட்டுகிறது. இந்த நெருக்கடிக்கு வர்த்தக நிலுவை ஒரு காரணியாக உள்ளடக்கப்படவில்லை. ஏனெனில் இந்த நெருக்கடி காலப்பகுதியில் இது வீழ்ச்சியடையாமல் (வர்த்தகப் பற்றாக்குறை குறைந்துள்ளது) மேம்பட்டுள்ளது.
வெளிநாட்டுச் செலாவணி திரவத்தன்மை நெருக்கடிக்கு முதன்மையான ஒரே காரணியாக வெளிநாட்டுக் கடன் உட்பாய்ச்சல்களில் ஏற்பட்ட வீழ்ச்சி (வெளிநாட்டுக் கடன்களின் உட்பாய்ச்சல்களில் இருந்து 2022 நெருக்கடி காரணமாக செலுத்தவேண்டிய ஆனால் செலுத்த முடியாமல்போன கொடுப்பனவுகள் உட்பட மீள்கொடுப்பனவுகளைக் கழித்தால்) உள்ளதை அட்டவணை 1 காட்டுகிறது. சுற்றுலா, பணவனுப்பல்கள் மற்றும் மொத்த வெளிநாட்டுக் கடன் உட்பாய்ச்சல்களின் வீழ்ச்சியால் ஏற்பட்ட மொத்த பாதிப்பைக் கவனத்தில் கொள்ளும்போது, வெளிநாட்டுக் கடன் உட்பாய்ச்சல்களில் ஏற்பட்ட வீழ்ச்சியே அதிகம் பங்களித்துள்ளது. இது மொத்த வெளிநாட்டுச் செலாவணி திரவத்தன்மையில் 49% வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணவனுப்பல்கள், சுற்றுலா மூலமான வருமானம் ஆகியவற்றில் ஏற்பட்ட வீழ்ச்சி 2022 வெளிநாட்டுச் செலாவணி திரவத்தன்மை நெருக்கடிக்கு குறிப்பிடத்தக்க பங்களித்துள்ளன (இந்தக் காலப்பகுதியில் 16% மற்றும் 35% வீழ்ச்சிக்குப் பங்களித்துள்ளன) என்பதில் பாராளுமன்ற உறுப்பினர் சரியாக உள்ளார். எனினும் இந்த வெளிநாட்டுச் செலாவணி திரவத்தன்மை நெருக்கடிக்கான மிக முக்கிய காரணத்தை தவிர்த்து விட்டு நெருக்கடிக்கான காரணங்களை பாராளுமன்ற உறுப்பினர் தவறாகக் கண்டறிகிறார். இந்த மூன்று காரணிகளில் வெளிநாட்டுச் செலாவணி வீழ்ச்சிக்கு தேறிய வெளிநாட்டுக் கடன் உட்பாய்ச்சல்களில் ஏற்பட்ட வீழ்ச்சியே பாதியளவுக்கு (49%) பங்களித்துள்ளது.
எனவே நாங்கள் இராஜாங்க அமைச்சரின் அறிக்கையைப் பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.
அட்டவணை 1: 2017 – 19 மற்றும் 2020 – 22 இடையே வெளிநாட்டு நாணயப் பாய்ச்சல்களில் ஏற்பட்ட மாற்றங்கள் (ஐ.அ.டொ மில்லியனில்)
*குறிப்பு: கடன் மீள்கொடுப்பனவில் மூலதனம் மற்றும் வெளிநாட்டு நாணயக் கடன் மீள்கொடுப்பனவுகளின் வட்டி என்பன அடங்கும். 2022 மொத்த வெளிநாட்டுக் கடன் மீள்கொடுப்பனவுகளில், ஏப்ரல் 2022ல் வெளிநாட்டுக் கடன் சேவை நிறுத்தப்பட்டதன் காரணமாக செலுத்தப்படாத திட்டமிடப்பட்ட கொடுப்பனவுகளும் அடங்குகின்றன.
மேலதிகக் குறிப்பு 1 – 2020–2022 காலப்பகுதியில் இலங்கைக்கான பணவனுப்பல்கள் குறைவடைந்ததற்கு அரச கொள்கைகளைக் காரணமாகக் குறிப்பிடலாம். குறிப்பாக 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு ஐ.அ.டொலருக்கான இலங்கை ரூபாயை 200 என செலாவணி வீதத்தை செயற்கையாகப் பேணியதைக் குறிப்பிடலாம். இந்தக் கொள்கையினால் நாணய மாற்றுக்கு “கள்ளச் சந்தை” உருவாகியது. இதில் உத்தியோகபூர்வ வங்கித்தொழில்கள் வழங்கிய உத்தியோகபூர்வ சந்தைப் பெறுமதியிலிருந்து 20% அதிக பெறுமதி வழங்கப்பட்டது. இது இலங்கைக்கு வெளிநாட்டுப் பணவனுப்பல்களைக் குறையச் செய்ததுடன் உத்தியோகபூர்வ வழிகளுக்கு அனுப்புவதில் இருந்து விலகச் செய்தது. இது தொடர்பான தகவல்கள் இலங்கையின் கொள்கை கற்கைகளுக்கான நிலையத்தின் பின்வரும் கட்டுரையில் கிடைக்கிறது.
மூலம்
வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள், இலங்கை மத்திய வங்கி, ஏப்ரல் 2022. https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/wei/WEI_20220401_e.pdf
ஆண்டறிக்கைகள் (2017 – 2022), நிதி அமைச்சு, https://www.treasury.gov.lk/web/annual-reports
ஆண்டறிக்கைகள் (2017 – 2022), இலங்கை மத்திய வங்கி, https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports