உண்மைச் சரிபார்ப்புகளும்
நாட்டில் உள்ள சவாலான வாழ்வாதார நிலைமைகள் காரணமாக வெளிநாட்டுக்குச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அபேசிங்ஹ கருத்தொன்றை முன்வைக்கிறார். இந்தக் கூற்றுக்கு வலுச்சேர்க்கும் வகையில், நாளாந்தம் 500 பேரும், மாதாந்தம் 180,000 – 200,000 பேரும் வெளிநாடு செல்வதாக அவர் குறிப்பிடுகிறார். “வெளிநாட்டுக்குச் செல்பவர்கள்” என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவதை வேலைக்காக (சிறந்த வாய்ப்புகளுக்காக) இலங்கையர்கள் வெளிநாட்டுக்குப் புலம்பெயர்வதாக FactCheck.lk விளங்கிக் கொள்கிறது.
இந்தக் கூற்றுகளைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கியின் பொருளாதாரத் தரவு நூலகம், இலங்கை மத்திய வங்கியின் தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் தொழிலாளர் புலம்பெயர்தல் பற்றிய காலாண்டு திரட்டு அறிக்கைகள் ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.
வெளிநாட்டிற்கு வேலைக்காகச் செல்பவர்கள் தொடர்பாகக் கிடைக்கும் சமீபத்திய பகிரங்கமான தரவு 2023 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான 9 மாத காலத்திற்கு உரியதாகும். வேலைக்காக வெளிநாட்டிற்கு நாளாந்தம் சராசரியாக 824 பேர் செல்வதாக அந்தத் தரவு குறிப்பிடுகிறது. இது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் எண்ணிக்கையை விட குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகும்.
நாளொன்றுக்கு 500 என்ற பாராளுமன்ற உறுப்பினரின் மதிப்பீடு, வருடத்திற்கு 180,000 ஆக உள்ளது. அவர் குறிப்பிடுவது போன்று இது ஒரு மாதத்திற்கு உரியது அல்ல. எனவே பாராளுமன்ற உறுப்பினர் தவறாகக் குறிப்பிட்டுள்ளார் எனவும் அவர் எண்ணிக்கையைக் குறிப்பிடும்போது மாதாந்த புறப்படுகைகளுக்குப் பதிலாக வருடாந்த புறப்படுகைகளைக் குறிப்பிட்டுள்ளார் எனவும் FactCheck.lk அனுமானிக்கிறது. ஒன்பது மாத சராசரிக்குச் சமமான வருடாந்திரத் தொகை 300,767 ஆக இருக்கும். இது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் 180,000 – 200,000 என்பதை விட அதிகமாகும்.
வெளிநாட்டு வேலைகளுக்காகச் செல்பவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பதே பாராளுமன்ற உறுப்பினரின் முதன்மையான வாதமாக உள்ளது. எனினும் அவரது வாதத்திற்கு ஆதரவாக அவர் குறிப்பிடும் பெறுமதிகள் (நாளாந்தம் 500 புறப்படுகைகள்) கோவிட் அல்லாத ஆண்டுகளின் புறப்படுகைகளின் மிகக் குறைந்த விகிதத்திற்கு அருகிலேயே உள்ளது – அதாவது 2019 ஆம் ஆண்டில் நாளாந்தப் புறப்படுகைகள் சராசரியாக 556 ஆக இருந்தன (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). உண்மையில், தற்போதைய நாளாந்தப் புறப்படுகைகளின் விகிதம் கடந்த காலங்களை விட அதிகமாக உள்ளது (2014 மற்றும் 2022 ஆண்டுகளில் மட்டுமே அதிகமாக இருந்தது). பாராளுமன்ற உறுப்பினர் தவறான பெறுமதிகளைக் குறிப்பிட்டிருந்தாலும், வேலைக்காக வெளிநாடு செல்வது வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உள்ளது என்ற அவரின் வாதத்திற்கு தரவுகள் வலுச்சேர்க்கின்றன.
எனவே அவரது ஒட்டுமொத்த வாதத்தைக் கவனத்தில் கொண்டு, பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கையை நாங்கள் பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.
அட்டவணை 1: வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான புறப்படுகைகள் (2010 – 2022)
https://www.cbsl.lk/eresearch/
அட்டவணை 2: வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான காலாண்டு புறப்படுகைகள் (ஜனவரி, ஜுன், மற்றும் செப்டெம்பர்)
மூலம்
பொருளாதாரத் தரவு நூலகம், இலங்கை மத்திய வங்கி. https://www.cbsl.lk/eresearch/
தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் தொழிலாளர் புலம்பெயர்தல் பற்றிய காலாண்டு திரட்டு (மார்ச்), இலங்கை மத்திய வங்கி. https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/workers_remittances_and_labour_migration_bulletin_2023_q1_e.pdf
தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் தொழிலாளர் புலம்பெயர்தல் பற்றிய காலாண்டு திரட்டு (ஜுன்), இலங்கை மத்திய வங்கி. https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/workers_remittances_and_labour_migration_bulletin_2023_q2_e.pdf
தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் தொழிலாளர் புலம்பெயர்தல் பற்றிய காலாண்டு திரட்டு (செப்டெம்பர்), இலங்கை மத்திய வங்கி. https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/workers_remittances_and_labour_migration_bulletin_2023_q3_e.pdf