சுனந்த மத்தும பண்டார

வர்த்தகப் பற்றாக்குறை தொடர்பில் சுனந்த மத்தும பண்டார கருத்து தெரிவித்துள்ளார்

"

[…] சமீப காலத்தில் வாகன இறக்குமதியைத் தவிர அனைத்து இறக்குமதித் தடைகளையும் நாடு நீக்கியதன் காரணமாக ஏற்றுமதி வருமானங்களுக்கும் இறக்குமதிச் செலவினங்களுக்கும் இடையிலான இடைவெளி படிப்படியாக அதிகரித்து வருகின்றது. […]

லங்காதீப | நவம்பர் 11, 2024

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

(தொடர்ச்சி)”… இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்கான வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஆண்டை விட ஐ.அ.டொ 1,141 மில்லியன் அதிகமாகும்.”

அண்மையில் இறக்குமதித் தடைகள் (வாகனங்கள் தவிர்த்து) தளர்த்தப்பட்டதே வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்பதற்கான காரணம் என முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் சுனந்த மத்தும பண்டார தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூற்றைச் சரிபார்ப்பதற்கு, இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வெளிநாட்டுத் துறை தரவுகளை FactCheck.lk ஆராய்ந்தது.

இந்தக் கூற்றை FactCheck.lk மூன்று வழிகளில் மதிப்பிட்டது.

  • அவர் குறிப்பிடுவது போன்று வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதா?

2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை ஐ.அ.டொ 859 மில்லியன் அதிகரித்துள்ளதை இலங்கை மத்திய வங்கியின் தரவு உறுதிப்படுத்துகின்றது. எனினும் இந்தப் பெறுமதி முன்னாள் ஆலோசகர் குறிப்பிடும் ஐ.அ.டொ 1,141 மில்லியனை விட ஐ.அ.டொ 282 மில்லியன் குறைவாகும்.

 

  • இந்த அதிகரிப்புக்கு காரணம் ஏற்றுமதி குறைவதா அல்லது இறக்குமதி அதிகரிப்பதா?

இறக்குமதிகளிலிருந்து ஏற்றுமதிகளைக் கழிப்பதன் மூலம் வர்த்தகப் பற்றாக்குறை கணக்கிடப்படுகின்றது. 2024 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் ஏற்றுமதிகள் 2023 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொ 536 மில்லியனால் அதிகரித்து ஐ.அ.டொ 9,518 மில்லியனை எட்டியுள்ளது என இலங்கை மத்திய வங்கி தரவு காட்டுகின்றது. இந்த அதிகரிப்பு வர்த்தகப் பற்றாக்குறை குறைவதற்கு உதவியுள்ளது. எனினும் இறக்குமதிகள் வர்த்தகப் பற்றாக்குறையை அதிகரித்துள்ளன. அதே காலப்பகுதியில் இறக்குமதிகள் ஐ.அ.டொ 1,395 மில்லியனால் அதிகரித்து ஐ.அ.டொ 13,718 மில்லியனாக உள்ளன.

 

  • கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதியால் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதா?

இறக்குமதிகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பிற்கு கட்டுப்பாடுகளை நீக்கியது முதன்மையாக காரணமாக இல்லை. ஒருபோதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத அல்லது இதுவரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாத ஏனைய பொருட்களின் இறக்குமதி காரணமாக ஐ.அ.டொ 724 மில்லியன் (60%) அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தரவை அடிப்படையாகக் கொண்ட ஒரு FactCheck.lk மதிப்பீடு காட்டுகின்றது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பின்னர் அவை நீக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதி மூலம் ஐ.அ.டொ 479 மில்லியன் அதிகரிப்பு (40%) மட்டுமே ஏற்பட்டுள்ளது.

 

முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் அவரது அறிக்கையில் இரண்டு தவறுகளைச் செய்கின்றார்: (1) வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட அதிகரிப்பை 30 சதவீதத்திற்கும் அதிகமாக மிகைப்படுத்தியுள்ளார் (2) இதற்குக் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பொருட்களின் இறக்குமதியில் ஏற்பட்ட அதிகரிப்பைக் குறிப்பிடுகின்றார். ஆனால் பெரும்பாலான இறக்குமதி அதிகரிப்பிற்கு ஏனைய பொருட்களே காரணமாக உள்ளன. அவை இல்லாமல் வர்த்தகப் பற்றாக்குறையில் எந்த அதிகரிப்பும் ஏற்பட்டிருக்காது.

எனவே முன்னாள் ஜனாதிபதி ஆலோசகரின் கூற்றை தவறானது என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.

 

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

 

மேலதிகக் குறிப்பு 1: இறக்குமதி மீதான தடைகளை நீக்குவதன் மூலம் ஏற்படும் தாக்கத்தை சிறப்பாக மதிப்பிடுவதற்கு 2023 மற்றும் 2024 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் இறக்குமதிச் செலவினத்தை 8 இலக்கங்களைக் கொண்ட HS குறியீட்டு* மட்டத்தில் நாங்கள் ஆராய்ந்தோம். பொருட்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

  1. 2020 – 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையே சில வகையான கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு (இறக்குமதித் தடைகள், தற்காலிக இடைநிறுத்தல்கள், இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமங்கள் மற்றும் கடன் அடிப்படை ஆகியவை உட்பட) பின்னர் அவை நீக்கப்பட்ட தயாரிப்புகள்

 

  1. ஏனைய தயாரிப்புகள் (எந்தவகையான கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்படாத அல்லது அவற்றின் தடைகள் இதுவரை நீக்கப்படாத பொருட்கள்)

 

*HS குறியீடு என்பது சர்வதேச வர்த்தகத்தில் தயாரிப்புகளை அடையாளம் காண்பதற்குப் பயன்படுத்தப்படும் நிலையான குறியீடு ஆகும். இது உலக சுங்க நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவதுடன் தயாரிப்புகளைத் தொடர்ந்து வகைப்படுத்துவதற்கும் விபரிப்பதற்கும் உலகளவில் பயன்படுத்தப்படுகின்றது.

அட்டவணை 1இறக்குமதி வளர்ச்சிக்குப் பங்களிப்பு

*இலங்கை மத்திய வங்கியால் அறிக்கையிடப்பட்ட இறக்குமதிப் பெறுமதிகள் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையால் வழங்கப்பட்ட தரவுகளுடன் ஒத்துப்போகவில்லை.



மூலம்

இலங்கை மத்திய வங்கியால் அறிக்கை 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன