உண்மைச் சரிபார்ப்புகளும்
இந்தக் கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு நாங்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் இளங்கலை அனுமதி தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 2018 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்களை ஆராய்ந்தோம். இலங்கையில் உயர்கல்வியை கட்டுப்படுத்தும் முக்கிய சட்டமான 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இல. பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் பதிவான கல்வி நிலையங்களின் புள்ளிவிபரங்கள் மாத்திரமே இதில் கிடைக்கின்றது.
இந்த சட்டத்தின் கீழ் உள்வாங்கப்படாத தனியார் மற்றும் அரச கல்வி நிறுவனங்கள் பல உள்ளன. இவை ஒவ்வொன்றும் தரநிலைகளை அங்கீகரித்தல், அங்கீகாரம் வழங்குதல், நிறுவுதல் மற்றும் பராமரித்தலுக்கு சொந்த செயல்முறைகளைக் கொண்டுள்ளன. (கீழேயுள்ள மேலதிகக் குறிப்புக்களைப் பார்க்கவும்). பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புள்ளிவிபரங்களில் 2018 ஆம் ஆண்டில் உயர்கல்வி நிறுவனங்களில் அனுமதிபெற்ற 97,815 பேரில் 62,907 பேர் பெண்கள் – இது 64.3 சதவீதமாகும். பெண்களின் சேர்க்கை 50 சதவீதத்திற்கும் அதிகம் என பிரதமர் சொல்வது, பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் உள்ள நிறுவனங்களின் பிரகாரம் சரியானதாகும்.
பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் வராத பல்கலைக்கழகங்கள்/உயர்கல்வி நிலையங்களில் அனுமதிபெற்றவர்களின் புள்ளிவிபரங்களை FactCheck இனால் கண்டறிய முடியவில்லை. இலங்கையின் தொழிற்படை புள்ளிவிபரங்களைப் பயன்படுத்தி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புள்ளிவிபரங்களை சரிபார்க்க FactCheck முயற்சித்தது. தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய 2017/2018 கணக்கெடுப்பு புள்ளிவிபரங்கள் கிடைக்காத காரணத்தினால், 2014 ஆம் ஆண்டுக்குரிய தொழிற்படை புள்ளிவிபரங்களை FactCheck ஆராய்ந்தது. 2014 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்ற பெண்களின் வீதம் 57 சதவீதத்தை விட அதிகமாகும். பாடசாலைகள், பிற கல்வி நிலையங்கள் அல்லது தொழில்/தொழில்நுட்ப நிறுவனங்களில் அனுமதிபெற்றவர்கள் இந்த புள்ளிவிபரங்களில் உள்ளடக்கப்படவில்லை. 2018 ஆம் ஆண்டில் அனைத்து கல்வி நிலையங்களையும் உள்ளடக்கிய உறுதியான தரவு காணப்படாத போதும், சரிபார்க்கப்பட்ட தரவுகள் பிரதமரின் கூற்று உண்மையானது என்ற முடிவுக்கு வர அனுமதிக்கின்றது.
எனவே, நாங்கள் பிரதமரின் கூற்றினை ‘சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.
இலங்கையின் உயர்கல்வித்துறையில் உள்ள கல்வி நிறுவனங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
அ) உயர்கல்வி நிறுவனங்கள் (அரச பல்கலைக்கழகங்கள்): மொத்தமாக 15 அரச பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன.
ஆ) உயர் கல்வி நிறுவனங்கள் (அரசுடன் இணைந்த நிறுவனங்கள்): இந்த நிறுவனங்கள் தங்களது தாய் பல்கலைக்கழகங்களில் இருந்து சான்றிதழ்கள், டிப்ளோமாக்கள் மற்றும் பட்டங்களை வழங்குகின்றன. இவ்வாறான குறைந்தது 9 நிறுவனங்கள் உள்ளன. சுதேச மருத்துவ கல்வி நிறுவகம், கொழும்பு பல்கலைக்கழக கணினி கற்கைகள் நிறுவகம், கம்பஹா விக்ரமாராய்ச்சி ஆயுர்வேத நிறுவகம் மற்றும் மொறட்டுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப நிறுவகம் என்பன இந்தப் பிரிவில் அடங்கும்.
இ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் வராத அரச கல்வி நிறுவனங்கள்: அரசாங்கத்தினால் நடாத்தப்படும் அனைத்து கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதாவது உயர்கல்வி அமைச்சின் கீழ் வருவதில்லை. இந்த கல்வி நிறுவனங்கள் நேரடியாக அந்தந்த அமைச்சின் கீழ் வருகின்றன. உதாரணமாக ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (பாதுகாப்பு அமைச்சினால் நிர்வகிக்கப்படுகின்றது). இவ்வாறான சுமார் 9 கல்வி நிறுவனங்கள் உள்ளன.
ஈ) பட்டம் வழங்கும் அந்தஸ்துள்ள தனியார் கல்வி நிறுவனங்கள்: இவை இலங்கையில் பட்டம் வழங்கும் அந்தஸ்தைக் கொண்ட தனியார் கல்வி நிறுவனங்கள். சட்டத்தின் பிரிவு 25ஏ விதிகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது (1985 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டது). உதாரணம்: இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதி பெற்ற தனியாரால் நிர்வகிக்கப்படும் பட்டம் வழங்கும் நிறுவனம்). இவ்வாறான 20 கல்வி நிறுவனங்கள் காணப்படுகின்றன.
உ) வெளிநாட்டு பட்டங்களை வழங்கும் கல்வி நிறுவனங்கள்: இதில் ‘பல்கலைக்கழக பங்காளராக’ சல்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டப் படிப்புக்களை வழங்கும் இம்பீரியல் இன்ஸ்டிடியூட் அடங்கும். சல்ஃபோர்ட் பல்கலைக்கழக பட்டத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு மாணவர்கள் தங்களை பதிவுசெய்ய வேண்டும். வெளிநாட்டுப் பட்டத்தினைப் பெற்றுக்கொள்ள மாணவர்களுக்கு உதவுவதற்காக சேவைகளை வழங்கும் அதேவேளை, மாணவர்கள் வருகை தரவேண்டிய அவசியம் இல்லாத கல்வி நிறுவனங்களும் உள்ளன. உதாரணம்: றோயல் இன்ஸ்டிடியூட், இங்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு கற்கைகளுக்கு கல்வி உதவி வழங்கப்படுகின்றது.
உயர் கல்வித்துறையிலுள்ள கற்கை நிறுவனங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் Verité Research வெளியிட்ட இலங்கையில் உயர்கல்வியில் தனியார் துறையின் பங்களிப்பு: தகவல்கள் மற்றும் தரவுகளின் மீளாய்வு (2017) அறிக்கையில் கிடைக்கும்: பார்வையிட: https://www.veriteresearch.org/publication/private-sector-participation-in-sri-lankas-tertiary-education/
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
Additional Note
மூலம்
- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, புள்ளிவிபர அறிக்கை 2018 – மாணவர்கள் சேர்க்கை, பார்வையிட: https://www.ugc.ac.lk/downloads/statistics/stat_2018/Chapter3.pdf
- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பிற அரசாங்க பல்கலைக்கழகங்கள், பார்வையிட: https://www.ugc.ac.lk/en/universities-and-institutes/other-government-universities.html
- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பிற அங்கீகரிக்கப்பட்ட பட்டங்கள், பார்வையிட: https://www.ugc.ac.lk/en/universities-and-institutes/other-recognized-degrees.html
- அசல் அறிக்கைக்கு, திவயின 2 செப்டெம்பர் 2019, பார்வையிட: http://epaper.divaina.com/index.php?option=com_flippingbook&view=book&id=5391
- சல்ஃபோர்ட் பல்கலைக்கழகம், மன்செஸ்டர், இளங்கலை பங்காளர்கள், பார்வையிட: http://www.salford.ac.uk/international/educationipartners/undergraduateipartners
- லண்டன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச கற்கைகள், மாணவர்களுக்கான தகவல்கள், பார்வையிட: http://www.londoninternational.ac.uk/teachingiinstitutions
- லண்டன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச கற்கைகள், கற்பிக்கும் நிறுவனங்களின் தொகுப்பு, பார்வையிட: http://www.londoninternational.ac.uk/onlinesearch/institutions