லக்ஷ்மன் கிரியெல்ல

பிணை முறி பரிவர்த்தனைகளினால் ஏற்பட்ட இழப்பினை மீட்டெடுப்பது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கிரியெல்ல மிகைப்படுத்துகின்றார்.

"

பிணை முறிகளினால் ஐக்கிய தேசியக்கட்சி 10 பில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதே குற்றச்சாட்டு. பெர்ப்பச்சுவல் ரெசரிஸின் 12 பில்லியன் ரூபா சொத்துக்களை

லங்காதீப | பிப்ரவரி 2, 2020

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பின்னர் இடம்பெற்ற முறையற்ற பிணை முறி பரிவர்த்தனைகளின் மூலம் ஏற்பட்ட சுமார் 10 பில்லியன் ரூபா நட்டத்தினை இழப்பாகக் கருதக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பதாக லங்காதீப 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது. விசாரணைகளுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பின் 12 பில்லியன் ரூபா சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு அவருடைய வாதம் அமைந்திருந்தது.  2002 – 2015 காலப்பகுதியில் ஏற்பட்ட இழப்புக்களின் போது அவற்றை சரிசெய்வதற்காக எந்த சொத்துக்களும் முடக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை இரண்டு கட்டங்களாக FactCheck ஆராய்ந்தது. முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட தொகையின் மதிப்பு மற்றும் அவரால் முன்வைக்கப்பட்ட தகவல்களை ஆராய்ந்தது. இரண்டாவது அதன் மூலம் அவர் பெற்றுக்கொண்ட முடிவினை ஆராய்ந்தது.

முதலாவதாக நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட தொகைகளை ஆராய்ந்தோம்.  2015 ஜனவரிக்குப் பின்னர் முறிகள் பரிவர்த்தனைகளின் மூலம் ஏற்பட்ட அதிகபட்ச நட்டம் 9.68 பில்லியன் ரூபா என மத்திய வங்கியின் தடயவியல் அறிக்கை 4 – அட்டவணை 89 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் மட்டம் தட்டி 10 பில்லியன் ரூபா இழப்பு என குறிப்பிட்டுள்ளார்.

2002 – 2015 காலப்பகுதியில் வழங்கப்பட்ட 5,600 பில்லியன் ரூபா பெறுமதியான பிணை முறிகளால் ஏற்பட்ட நட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார். 5,600 பில்லியன் ரூபா பெறுமதியான பிணை முறிகள் நேரடியாக வழங்கப்பட்டதை தடயவியல் அறிக்கை 1 – அட்டவணை 18 உறுதிசெய்கின்றது. அத்துடன் இதன் மூலம் ஏற்பட்ட இழப்பு 10.47 பில்லியன் ரூபா என்பதை அட்டவணை 58 சுட்டிக்காட்டுகின்றது. எனவே, 2002 – 2015 காலப்பகுதியில் இடம்பெற்ற முறிகள் விற்பனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று சரியானது.

பெர்ப்பச்சுவல் ரெசரிஸின் 12 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசாங்கம் முடக்கியதையும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார். 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற முறையற்ற பிணை முறி விற்பனை தொடர்பில் மத்திய வங்கி தனது விசாரணைகளின் பின்னரும், பிற விசாரணைகளின் முடிவுகளை அடிப்படையாகவும் கொண்டு பெர்ப்பச்சுவல் ரெசரிஸின் சொத்துக்களை மூன்றாவது நபருக்கு மாற்றுவதற்கு 2016 நொவம்பர் 7 ஆம் திகதி தடை விதித்தது. 12.5 பில்லியன் ரூபா மதிப்புடைய சொத்துக்களைக் கொண்ட இரண்டு கணக்குகள் உட்பட வங்கிக் கணக்குகளை பின்னர் முடக்கியது.  2018 ஜனவரி 24 ஆம் திகதி, 28 பெர்ப்பச்சுவல் குழும நிறுவனங்களின் சொத்துக்களையும் மத்திய வங்கி முடக்கியது. பின்னர் 2018 பெப்ரவரி முதலாம் திகதி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய கொழும்பு உயர்நீதிமன்றம் இந்த சொத்து முடக்கத்தினை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற முறையற்ற முறி பரிவர்த்தனை தொடர்பிலான சொத்துக்களை மாற்றுவதை தடுப்பதற்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2002 – 2015 காலப்பகுதியில் வழங்கப்பட்ட 5,600 பில்லியன் ரூபா பெறுமதியான பிணை முறிகளினால் ஏற்பட்ட 10.47 பில்லியன் ரூபா நட்டம் தொடர்பில் இவ்வாறான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை.

எனவே, பிணை முறி வழங்கல், அதனால் ஏற்பட்ட நட்டம் மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டது, மத்திய வங்கியின் தடயவியல் அறிக்கை மற்றும் பொதுவெளியில் கிடைக்கும் ஆதாரங்களுடன் ஒத்துப்போகின்றது.

இந்த தகவல்கள் மூலமாக 2015 ஜனவரிக்கு பின்னரான பரிவர்த்தனைகளின் மூலம் எந்த இழப்பும் ஏற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் முடிவுக்கு வருவதை நாங்கள் பார்க்கின்றோம்.  அரசாங்க பொறுப்பு முயற்சிகள் (கோப்) ஆணைக்குழு மற்றும் கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம், ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றின் விசாரணைகளில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, இழப்புக்களை மீட்டெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் மாத்திரமே தற்போது உள்ளன. எனவே, இழப்புக்கள் ஏற்படவில்லை என்ற பாராளுமன்ற உறுப்பினரின் வாதம் மிகைப்படுத்தப்பட்டதாகும்.

பிணை முறி பரிவர்த்தனைகள் மற்றும் இழப்புக்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று சரியானதாகும். ஆனால் 2015 ஜனவரிக்குப் பின்னரான பிணை முறி பரிவர்த்தனைகளினால் இழப்புக்கள் ஏற்படவில்லை என்ற அவரது வாதம், இதுவரை சொத்துக்கள் மீட்கப்படவில்லை என்பதனால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

எனவே, நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை ‘பகுதியளவில் உண்மை’ என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

  • BDO இந்தியா, இலங்கை மத்திய வங்கி, அறிக்கை 1 – 2002 ஜனவரி 1 முதல் 2015 பெப்ரவரி 18 வரை பொது நிதித்துறையினால் வழங்கப்பட்ட பிணை முறிகள் தொடர்பிலான விசாரணை (நொவம்பர் 2019) பக்கம் 74, 148, click here to access the report [last accessed 10 March 2020].
  • BDO இந்தியா, இலங்கை மத்திய வங்கி, அறிக்கை 4 – 2015 பெப்ரவரி 1 முதல் 2016 மார்ச் 31 வரை திறைசேரிக்கு வழங்கப்பட்ட பிணை முறிகள் மற்றும் நிதி பரிமாற்றம் தொடர்பிலான விசாரணை (நொவம்பர் 2019) பக்கம் 211, click here to access the report [last accessed 10 March 2020].
  • இலங்கை மத்திய வங்கி, ‘இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கை’ பார்வையிட: https://www.cbsl.gov.lk/ta/node/2627 [last accessed 10 March 2020].
  • நாமினி விஜேதாஸ, ‘28 PTL நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கம்’, தி சன்டே டைம்ஸ் (28 ஜனவரி 2018), பார்வையிட: http://dbsjeyaraj.com/dbsj/archives/57393 [last accessed 10 March 2020].
  • ‘பெர்ப்பச்சுவல் றெசரிஸின் சொத்துக்கள் முடக்கம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது’, டெய்லி FT (02 பெப்ரவரி 2018), பார்வையிட: http://www.ft.lk/financial-services/Freeze-of-Perpetual-Treasuries-assets-further-extended/42-648634 [last accessed 10 March 2020].
  • அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை, 2015 பெப்ரவரி முதல் 2016 மே வரையான காலத்தில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட திறைசேரி முறிகள் வழங்கல் தொடர்பில் இடம்பெற்றுள்ள நிதிசார் முறைகேடுகளைப் பற்றி ஆராய்வதற்கான விசேட குழுவாகச் செயலாற்றிய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை, பாராளுமன்ற வெளியீட்டுத் தொடர் இல109 (ஒக்டோபர் 2016), பக்கம் 48, பார்வையிட: https://www.parliament.lk/uploads/comreports/1478667396060758.pdf [last accessed 10 March 2020].
  • கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம், இலங்கை மத்திய வங்கியின் அரசாங்க பொதுப்படுகடன் திணைக்களத்தினால் 2015 பெப்ரவரி மாதம் முதல் 2016 மே மாதம் வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த திறைசேரி முறிகள் வழங்கல் தொடர்பில் 2016 ஜுன் 29 ஆம் திகதி விசேட கணக்காய்வு அறிக்கை வழங்கப்பட்ட பின்னர் 2016 செப்டெம்பர் 23 ஆம் திகதி வரையான காலத்தில் பொதுமுயற்சிகள் குழுவினாலும், கணக்காய்வாளர் தலைமை அதிபதியினாலும் வெளிப்படுத்தப்பட்டிருந்த தகவல்களுக்கு அமைய அந்த அறிக்கைக்கு மேற்கொள்ளப்பட்ட நாளதுவரையாக்கல்களை உள்ளடக்கிய அறிக்கை, பக்கம் 53, பார்வையிட: http://www.auditorgeneral.gov.lk/web/images/special_report/Bond_report/tamil.pdf [last accessed 10 March 2020].
  • கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம், 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் (2008 – 2016) பிரிவு 43(2) க்கு அமைய நிதி அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கை, பார்வையிட: http://www.auditorgeneral.gov.lk/web/images/special_report/Bond_report/direct_placement/Bond-Report-on-direct-placement-ceylon-bank-of-srilanka.pdf [last accessed 10 March 2020].
  • ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை, 2015 பெப்ரவரி 1 முதல் 2016 மார்ச் 31 வரையில் திறைசேரி முறி வழங்கல் தொடர்பில் விசாரணை செய்யவும், அறிக்கை வழங்கவும் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, பக்கம் 931, click here to access the report [last accessed 10 March 2020].