விமல் வீரவங்ச

பா.உ வீரவங்ச செல்வத்திலுள்ள சமத்துவமின்மையை வருமான சமத்துவமின்மையாகக் குறிப்பிடுகிறார்

"

இலங்கையிலுள்ள 1% செல்வந்தர்கள் தேசிய வருமானத்தில் 31 % ஐ அனுபவிக்கிறார்கள். அதேபோன்று அந்த 1% உட்பட, சமூகத்தின் உயர்மட்டத்திலுள்ள 10 சதவீதமானவர்கள் தேசிய வருமானத்தின் 64 சதவீதத்தை அனுபவிக்கிறார்கள் […]. அதன் பிறகு கீழ் மட்டத்திலுள்ள 50 சதவீதமானவர்கள் தேசிய வருமானத்தின் 4 சதவீதத்தை அனுபவிக்கிறார்கள்.

விமல் வீரவங்சவின் யூடியூப் சேனல் | ஜனவரி 30, 2024

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

வரிச் சுமையைப் பகிர்ந்தளிப்பது குறித்து யோசிக்கும்போது, இலங்கை பிரஜைகள் மத்தியில் காணப்படும் பாரிய சமத்துவமின்மையை இலங்கையின் வரிக் கொள்கைகள் போதுமான அளவு கணக்கில் கொள்வதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஊடக சந்திப்பு ஒன்றில் வாதிட்டிருந்தார். இந்த வாதத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், சமத்துவமின்மையைக் காட்டும் மேற்குறிப்பிட்ட புள்ளிவிபரங்களை அவர் வழங்கியுள்ளார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, உலக சமத்துவமின்மை தரவுதளம் (WID) மற்றும் UNDPயின் 2019க்கான மனித அபிவிருத்தி அறிக்கை (HDR) ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது. மிகச் சமீபத்திய புள்ளிவிபரங்கள் 2022 ஆம் ஆண்டுக்கே கிடைக்கின்றன.

கிடைக்கும் தரவுகளுக்கு அமைய, இலங்கையில் தேசிய வருமானத்தின் பகிர்ந்தளிப்பு பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதிகளை விட வேறாக உள்ளது. வருமான சமத்துவமின்மை அவர் குறிப்பிடுவதை விட மிகக் குறைவாக உள்ளது. முதன்மையான 1% செல்வந்தர்கள், பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது போன்று மொத்த வருமானத்தில் 31 சதவீதத்தை அல்லாமல் 15 சதவீதத்தைப் பெறுவதாகப் பதிவாகியுள்ளது. அதேபோன்று முதல் 10 சதவீதமானவர்கள் வருமானத்தில் 64 சதவீதத்தை அன்றி 42 சதவீதத்தை மட்டுமே பெறுகிறார்கள். மற்றும் கீழ் மட்டத்திலுள்ள 50 சதவீதமானவர்கள் வருமானத்தில் 4 சதவீதத்தை அன்றி 16 சதவீதத்தைப் பெறுகிறார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் எவ்வாறு இந்தப் பெறுமதிகளைப் பெற்றுக்கொண்டார் என்பதைப் புரிந்துகொள்ள முயன்றபோது, அவர் வருமான சமத்துவமின்மைக்குப் பதிலாக இலங்கையில் செல்வத்திலுள்ள சமத்துவமின்மை பெறுமதிகளைக் குறிப்பிட்டிருப்பதை FactCheck.lk கண்டறிந்தது.

சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் வருமானம் அல்லது செல்வத்தின் அடிப்படையில் சமத்துவமின்மையை அளவிட முடியும். ஆனால் அவை இரண்டும் வெவ்வேறு அளவீடுகள்/புள்ளிவிபரங்களைக் கொண்டவை. HDR இன் பிரகாரம், வருமானமானது குறிப்பிட்ட காலத்தில் பெறப்படும் வேதனம், சம்பளம், இலாபங்கள் மற்றும் வருமானமாக உள்ளது. இதற்கு மாறாக செல்வம் என்பது தனிநபர்களால் சேர்க்கப்பட்ட சொத்துக்களின் (உதாரணம், சேமிப்புகள், சொத்துக்கள், முதலீடுகள்) தற்போதைய மொத்த மதிப்பிலிருந்து அனைத்துக் கடன்களையும் கழிப்பதன் மூலம் அளவிடப்படுகிறது.

ஒரு நபர் செல்வத்தில் பணக்காரராகவும் வருமானத்தில் ஏழையாகவும் இருக்க முடியும் (உதாரணம், மதிப்புமிக்க பரம்பரை சொத்தில் வாழும் அரசாங்க ஓய்வூதியம் பெறுபவர்). அதேபோன்று வருமானம் அதிகம் இருக்கும்போதும் செல்வம் இல்லாதவராகவும் இருக்க முடியும் (உதாரணம், எந்தவித நிலமோ வாகனங்களோ இல்லாத இளம் பங்குத் தரகர்).

பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதிகள் சமூகத்தின் மொத்த தனிநபர் செல்வத்துடன் பொருந்துகிறது. ஆனால் அவர் குறிப்பிடுவது போன்று தேசிய மொத்த வருமானத்தின் பகிர்ந்தளிப்புடன் பொருந்தவில்லை (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). ஒட்டுமொத்தமாக, சமூகத்தில் சமத்துவமின்மை உள்ளது என்பதை பாராளுமன்ற உறுப்பினர் முன்னிலைப்படுத்துவதுடன் பணக்காரர்களாக இருப்பவர்களிடம் இருந்து அதிக வரியும் மோசமான நிலையில் இருப்பவர்களிடம் இருந்து குறைவாகவும் வரி வசூலிக்க வேண்டும் என வாதிடுகிறார். அவர் சரியாக மேற்கோள் காட்டும் செல்வத்திலுள்ள சமத்துவமின்மை (அவர் அதை வருமான சமத்துவமின்மையாக தவறாகக் குறிப்பிட்டாலும்) சமத்துவமின்மைக்கான முக்கிய அளவீடாக உள்ளதுடன், வரிக் கொள்கை தொடர்பிலும் அவர் சரியாகக் கவனம் செலுத்துகிறார். “செல்வ” சமத்துவமின்மைக்கான புள்ளிவிபரங்களை “வருமான” சமத்துவமின்மை புள்ளிவிபரங்களாக பாராளுமன்ற உறுப்பினர் தவறாகக் குறிப்பிடுவதால் அவரது அறிக்கை தவறானது. எனினும் செல்வ சமத்துவமின்மை குறித்த புள்ளிவிபரம் எனச் சரியாகக் குறிப்பிட்டிருந்தால் அவர் குறிப்பிடும் வாதத்திற்கு வலுச் சேர்த்திருக்கும்.

எனவே பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கையை பகுதியளவு சரியானது என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.



மூலம்

உலக சமத்துவமின்மை தரவுதளம், https://wid.world/country/sri-lanka/. எனும் இணைப்பின் ஊடாகப் பெறப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன