உண்மைச் சரிபார்ப்புகளும்
… முதலாவதாக நீங்கள் அனைவரும் அனுப்பும் அந்நியச் செலாவணியாலும், இரண்டாவதாக நாங்கள் (தற்சமயம்) கடனைத் திருப்பிச் செலுத்தாததன் காரணமாகவும் எங்கள் நாட்டில் எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்துகள் கிடைக்கின்றன.
ஜப்பானில் நடைபெற்ற சந்திப்பொன்றில், (1) தொழிலாளர் பணவனுப்பல்களின் உட்பாய்ச்சல் (2) கடன் மீள்கொடுப்பனவுகளின் இடைநிறுத்தம் காரணமாகக் கிடைக்கும் அந்நியச் செலாவணியால் எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடிவதாக பாராளுமன்ற உறுப்பினர் திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கியின் வருடாந்தப் பொருளாதார மீளாய்வு 2023, வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள் மற்றும் நிதி அமைச்சின் 2023 ஆண்டறிக்கை ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.
கூற்றை மதிப்பிடுவதற்கு, கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கு முன்னரான பற்றாக்குறைக் காலப்பகுதியை (மே 2021 முதல் ஏப்ரல் 2022) அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு செலாவணி கிடைத்த காலப்பகுதியுடன் (2023 ஆம் ஆண்டு) முதலில் நாங்கள் ஒப்பிட்டோம். வெளிநாட்டு நாணயங்களில் மாற்றம் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகள் (1) இறக்குமதிகளில் குறைப்பு (2) கடன் மீள்கொடுப்பனவுகளில் குறைப்பு (3) தொழிலாளர் பணவனுப்பல்களில் ஏற்பட்ட அதிகரிப்பு என்னும் வரிசையில் உள்ளதை அட்டவணை 1 காட்டுகின்றது.
ஆகவே, அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குக் கிடைத்த வெளிநாட்டுச் செலாவணியில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு ஒட்டுமொத்த இறக்குமதிக்கான தேவையின் குறைவு முதன்மையாக உள்ளதுடன், அதனைத் தொடர்ந்து அநேகமான வெளிநாட்டுக் கடன் மீள்கொடுப்பனவுகளின் இடைநிறுத்தம் காரணமாக உள்ளது. பணவனுப்பல்களில் ஏற்பட்ட அதிகரிப்பு இந்த இரண்டையும் விடக் குறைவான பங்களிப்பையே வழங்கியுள்ளது. எனினும் வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களுக்கான முக்கிய பங்களிப்பில் பணவனுப்பல்கள் ஐ.அ.டொ 497 மில்லியனாக உள்ளதுடன், தேறிய கடன் உட்பாய்ச்சல்களை விட அதிகமாகவும் ஏற்றுமதிகள் (ஆடை ஏற்றுமதியைப் போலவே, ஏற்றுமதி சராசரியாக சுமார் 50 சதவீதமான இறக்குமதிப் பங்கைக் கொண்டுள்ளது என அனுமானிக்கலாம்) மூலமான தேறிய பங்களிப்பிற்குப் போட்டியாகவும் உள்ளது.
இது அட்டவணை 2 இல் மேலும் நிரூபிக்கப்படுகின்றது. கடன் மீள்கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டதன் பின்னர் ஐ.அ.டொ 11.9 பில்லியன் பெறுமதியான தொழிலாளர் பணவனுப்பல்கள் கிடைக்கப்பெற்றதுடன், இது இலங்கையின் வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களில் அதிகூடிய பங்களிப்பைக் குறிக்கின்றது.
மொத்தத்தில், தொழிலாளர் பணவனுப்பல்களில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் வெளிநாட்டுக் கடன் மீள்கொடுப்பனவுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பன வெளிநாட்டு ஒதுக்குகளில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு இரண்டு முக்கிய காரணங்கள் என்பதை பாராளுமன்ற உறுப்பினர் சரியாக அடையாளம் காண்கிறார். பணவனுப்பல்களில் ஏற்பட்ட அதிகரிப்பு மட்டுமே பற்றாக்குறைக்கு முன்னரும் பின்னரும் வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களில் ஏற்பட்ட மாற்றத்திற்கான முக்கிய காரணம் இல்லை என்ற போதும், பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவதைப் போன்று பணவனுப்பல்கள் அத்தியாவசிய இறக்குமதிகளுக்குக் கிடைத்த வெளிநாட்டு நாணயத்திற்கு முக்கிய பங்களித்துள்ளன.
எனவே பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றைச் சரியானது என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.
அட்டவணை 1: வெளிநாட்டு ஒதுக்குகளின் மாற்றத்திற்குப் பங்களித்தவை
அட்டவணை 2: வெளிநாட்டு ஒதுக்குகளில் ஏற்பட்ட அதிகரிப்பிற்குப் பங்களித்தவை (மே 22 – ஜுன் 24)
*குறிப்பு: இந்த உண்மைச் சரிபார்ப்பைத் தயார் செய்யும்போது, தரவுகள் கிடைக்காத காரணத்தால் தேறிய கடன் உட்பாய்ச்சல்களில் 2024 மே மற்றும் ஜுன் மாதங்களுக்கான தேறிய உட்பாய்ச்சல்கள் உள்ளடக்கப்படவில்லை.
மூலம்
மூலம்: இலங்கை மத்திய வங்கியின் வருடாந்தப் பொருளாதார மீளாய்வு 2023, வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள் மற்றும் நிதி அமைச்சின் 2023 ஆண்டறிக்கை