உண்மைச் சரிபார்ப்புகளும்
(தொடர்ச்சி…)
“…இன்று இந்தப் பணவனுப்பல்கள் ஐ.அ.டொ 3.7 பில்லியனாகக் குறைந்துள்ளன.”
ஐக்கிய மக்கள் சக்தி ஊடக சந்திப்பொன்றின் போது பணவனுப்பல்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பா.உ விக்கிரமரத்ன இரண்டு கூற்றுகளை முன்வைத்துள்ளார். (1) 2016 – 2018 காலப்பகுதியில் அதிகூடிய பெறுமதியிலான பணவனுப்பல்கள் கிடைத்துள்ளன (2) 2020 ஆம் ஆண்டு முதல் பணவனுப்பல்கள் குறைவடைந்துள்ளன, தற்போது ஐ.அ.டொ 3.7 பில்லியனாகக் குறைந்துள்ளது.
இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கியின் பல்வேறு ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகள் (CBSL1) மற்றும் இலங்கை மத்திய வங்கியின் 2023 ஆம் ஆண்டுக்கான மாதாந்த பொருளாதாரக் குறிகாட்டிகள் (CBSL2) ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.
பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை அட்டவணை 1 உறுதிப்படுத்துகிறது. 2016 – 2018 காலப்பகுதியில் பணவனுப்பல்கள் அதிகபட்சமாக இருந்ததைக் காட்டுகிறது. இந்தக் காலப்பகுதியில் தொடர்ச்சியாக ஐ.அ.டொ 7 பில்லியனை விட அதிகமாக இருந்துள்ளது. இதே பெறுமதி 2020 ஆம் ஆண்டிலும் எட்டப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினரின் இரண்டாவது கூற்றை ஆதரிக்கும் விதமாக இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை (CBSL1) உள்ளது. அதாவது 2020 முதல் 2022 வரையில் பணவனுப்பல்கள் தொடர்ச்சியாகக் குறைவடைந்துள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் ”இன்று” எனக் குறிப்பிடும்போது 2023 ஆம் ஆண்டில் பணவனுப்பல்களின் தற்போதைய நிலை எனக் கருத முடியும். ஆனால் அவர் கிடைக்கும் சமீபத்திய ஆண்டான 2022 ஆம் ஆண்டின் தரவைக் குறிப்பிடுகிறார். இதில் பணவனுப்பல்களின் மொத்தப் பெறுமதி ஐ.அ.டொ 3.7 பில்லியன் மட்டுமே ஆகும்.
எனினும் அதை விடச் சமீபத்திய தகவல்கள் கிடைக்கின்றன. அது பாராளுமன்ற உறுப்பினரின் இரண்டாவது கூற்றுடன் பொருந்திப் போகவில்லை. ஜனவரி முதல் ஆகஸ்ட் 2023 வரை பணவனுப்பல்கள் ஐ.அ.டொ 3.8 பில்லியனை விட அதிகம் என்பதுடன் 2022 ஆம் ஆண்டின் மொத்த பணவனுப்பல்களை விட அதிகம் என CBSL2 தரவு குறிப்பிடுகிறது. மாதாந்த சராசரி கணக்கிடப்பட்டால், 2023 ஆம் ஆண்டில் மொத்த பணவனுப்பல்கள் ஐ.அ.டொ 5.8 பில்லியனாக இருக்கும்.
சுருக்கமாகக் குறிப்பிடுவதானால், அதிகூடிய பணவனுப்பல்கள் கிடைத்த காலப்பகுதி மற்றும் 2020 ஆம் ஆண்டின் பின்னர் அதன் வீழ்ச்சி ஆகியவற்றை பாராளுமன்ற உறுப்பினர் சரியாகக் குறிப்பிடும்போதும், 2022 ஆம் ஆண்டின் இறுதியில் ஐ.அ.டொ 3.7 பில்லியனாகக் காணப்பட்ட மொத்தப் பணவனுப்பல்களை தற்போதைய நிலவரமாகக் குறிப்பிடுகிறார். எனினும் 2023 ஆம் ஆண்டில் பணவனுப்பல்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை மாதாந்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
எனவே அவரது அறிக்கையை நாங்கள் பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: 2003 ஆம் ஆண்டு முதல் தொழிலாளர் பணவனுப்பல்கள்
அட்டவணை 2: 2023 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் பணவனுப்பல்களின் மாதாந்தப் பெறுமதி
மூலம்
இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை (பல்வேறு ஆண்டுகளுக்கானவை), பார்வையிட:
https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports [இறுதியாக அணுகியது: செப்டெம்பர் 30, 2023]
இலங்கை மத்திய வங்கி, தரவு நூலகம், பார்வையிட:
https://www.cbsl.lk/eresearch/ [இறுதியாக அணுகியது: செப்டெம்பர் 30, 2023]
இலங்கை மத்திய வங்கி, மாதாந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள், பார்வையிட: https://www.cbsl.gov.lk/statistics/economic-indicators/monthly-indicators [இறுதியாக அணுகியது: அக்டோபர் 11, 2023]