ரணில் விக்கிரமசிங்க

நடைமுறைக் கணக்கு மிகை தொடர்பில் ஜனாதிபதி விக்கிரமசிங்க சரியாகக் குறிப்பிடுகிறார்

"

“2022 ஆம் ஆண்டின் இறுதியில் சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1.9 சதவீதமாக இருந்தது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில் சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கில் நாங்கள் மிகையைப் பதிவுசெய்துள்ளோம். (தொடர்ச்சி)

பாராளுமன்றம் | பிப்ரவரி 7, 2024

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

தொடர்ச்சி: “…1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கில் மிகை பதிவானமை இதுவே முதன் முறையாகும்.”

 

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வின் தொடக்க நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொள்கை அறிக்கை தொடர்பான அவரது உரையில் சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கு தொடர்பில் இரண்டு கூற்றுக்களை முன்வைத்துள்ளார்: (அ) 2022 ஆம் ஆண்டில் சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை மொ.உ.உற்பத்தியின் 1.9% (ஆ) 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக 2023 ஆம் ஆண்டில் சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்கில் மிகை பதிவாகியுள்ளது.

இந்தக் கூற்றுக்களைச் சரிபார்ப்பதற்கு, இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆண்டறிக்கை மற்றும் இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுத்துறை செயலாற்றம் ஊடக அறிக்கை – டிசம்பர் 2023 ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

நடைமுறைக் கணக்கு நிலுவை என்பது பொருட்கள் மற்றும் சேவைகளின் வர்த்தகம், வருமானம் மற்றும் ஏனைய நிதிப் பரிமாற்றல்கள் (மூலதன மாற்றல்கள் தவிர்த்து) மூலம் நாட்டின் உள்ளேயும் வெளியேயும் இடம்பெறும் நாணய உட்பாய்ச்சல்கள் மற்றும் வெளிப்பாய்ச்சல்களுக்கு இடையேயான வித்தியாசம் ஆகும். மேலே குறிப்பிடப்பட்டவற்றின் மூலம் கிடைக்கும் உட்பாய்ச்சல்கள் வெளிப்பாய்ச்சல்களை விட அதிகமாக இருந்தால் அது நடைமுறைக் கணக்கு மிகையாக இருக்கும்.

கூற்று (அ) – 2022 ஆம் ஆண்டில் உண்மையான நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1.9% என இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது. இது ஜனாதிபதி குறிப்பிடும் பெறுமதியுடன் பொருந்துகிறது.

கூற்று (ஆ) – 2023 ஆம் ஆண்டுக்கான சரியான நடைமுறைக் கணக்கு நிலுவை இதுவரையில் வெளியிடப்படவில்லை என்ற போதும், வர்த்தக நிலுவை, சுற்றுலா வருமானங்கள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் உள்ளிட்ட நடைமுறைக் கணக்கின் முக்கியமான கூறுகளுக்கான பெறுமதிகள் கிடைக்கின்றன. 2022 ஆம் ஆண்டில் நடைமுறைக் கணக்கு நிலுவை ஐ.அ.டொ 1,453 மில்லியன் பற்றாக்குறையாகப் பதிவாகியிருந்தது. 2023 ஆம் ஆண்டில் நடைமுறைக் கணக்கின் மேலே குறிப்பிடப்பட்ட முக்கிய கூறுகள், அட்டவணை 1 இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஐ.அ.டொ 3,398 மில்லியனால் மேம்பட்டுள்ளன. 2023 ஆம் ஆண்டுக்கான நடைமுறைக் கணக்கு நிலுவை மிகையாகப் பதிவாகியுள்ளது என்பதை இது காட்டுகிறது.

1977 ஆம் ஆண்டு நடைமுறைக் கணக்கு மிகை மொ.உ.உற்பத்தியின் 3.5 சதவீதமாக இருந்தது. அதன் பின்னர் மிகை பதிவாகவில்லை என்பதை இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கையின் விசேட புள்ளிவிபரப் பின்னிணைப்பிலுள்ள கடந்த காலத் தரவுகள் காட்டுகின்றன (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்). இதற்கு முன்னர் நிகழ்ந்த மோசமான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரான ஆண்டு இதுவாகும் – மேலதிகக் குறிப்பு 1 ஐப் பார்க்கவும்.

ஆகவே நாங்கள் ஜனாதிபதியின் அறிக்கையை சரியானது என வகைப்படுத்துகிறோம்.

மேலதிகக் குறிப்பு 1: இலங்கையில் 1977 ஆம் ஆண்டுக்கு முன்னரான ஆறாண்டு காலப்பகுதியில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி போன்ற நிலைமை காணப்பட்டது: சுதந்திரம் அடைந்ததிலிருந்து 1970 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் காணப்பட்ட சராசரி வளர்ச்சி 4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் சராசரி உண்மையான மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சி 2.7% என மிகக் குறைவாகக் காணப்பட்டது. அரிசி, கோதுமை மா மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிகளில் கடுமையான தட்டுப்பாட்டையும் இலங்கை எதிர்கொண்டது.

மேலதிகக் குறிப்பு 2: ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அவரது உரையில் “ගෙවුම් ශේෂයේ ජංගම ගිණුමේ හිඟය” (“சென்மதி நிலுவையின் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை” என சரியாக மொழிபெயர்க்கலாம்) எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதே இணையத்தளத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அட்டவணை 1: 2022 மற்றும் 2023 முழு ஆண்டுக்குமான சென்மதி நிலுவையின் கூறுகள்

அட்டவணை 2: நடைமுறைக் கணக்கு நிலுவையின் கூறுகள் (மொ.உ.உற்பத்தியின் பங்கு), 1959 முதல் 2023

 



மூலம்

 

  1. இலங்கை மத்திய வங்கி. “புள்ளிவிபரப் பின்னிணைப்பு.” ஆண்டறிக்கை 2022. 2022, https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2022/en/16_S_Appendix.pdf [இறுதியாக அணுகியது: 11 மார்ச் 2023].
  2. இலங்கை மத்திய வங்கி. “ஊடக அறிக்கை: வெளிநாட்டுத்துறை செயலாற்றம் – டிசம்பர் 2023.” 31 ஜனவரி 2024, https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20240131_external_sector_performance_2023_december_e.pdf [இறுதியாக அணுகியது: 11 மார்ச் 2023].
  1. பாலகிருஷ்ணன், என். (1975). 1974ல் இலங்கை: பொருளாதார பிழைப்பிற்கான யுத்தம். ஏசியன் சர்வே, 15(2), 102–109. https://doi.org/10.2307/2643320
  1. விஜேவர்த்தன, டபிள்யூ.ஏ. “சிக்கலில் இலங்கையின் பொருளாதாரம்: 1972-76 ஐந்தாண்டுத் திட்டம் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைக் கண்டறிதல்.” டெய்லி FT, 10 டிசம்பர் 2018, https://www.ft.lk/columns/Sri-Lanka-s-economy-at-crossroads-The-1972-76-Five-Year-Plan-and-its-diagnosis-of-economic-ailments/4-668469.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன