உண்மைச் சரிபார்ப்புகளும்
தனது கூற்றுக்கு ஆதரவாக 2016 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்களை இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தனது அறிக்கையில் குறிப்பிடுகின்றார். (1) இலங்கையில் தொழிற்படை பங்கேற்பில் பாரிய பாலின இடைவெளி காணப்படுகின்றது (2) 15-24 வயதுடைய பெண்களிடையே வேலையின்மை அதிகமாக காணப்படுகின்றது.
தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொழிற்படை கணக்கெடுப்பு ஆண்டறிக்கை மற்றும் உலக பொருளாதார பேரவையின் (WEF) உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையை பயன்படுத்தி FactCheck அமைச்சரின் கூற்றினை ஆராய்ந்தது. தொழிற்படை பங்கேற்பு ஆண்டறிக்கைகள் 2017 ஆம் ஆண்டு வரை காணப்படுகின்றன. அத்துடன் உலகப் பொருளாதார பேரவையின் அறிக்கைகள் 2018 ஆம் ஆண்டுவரை கிடைக்கின்றன. அமைச்சர் 2016 ஆம் ஆண்டு என குறிப்பாகத் தெரிவித்துள்ளதால், 2016 ஆம் ஆண்டுக்குரிய புள்ளிவிபரங்களைப் பயன்படுத்தி FactCheck அவரது கூற்றினை ஆராய்ந்தது. எனினும், கிடைக்கப்பெற்ற சமீபத்திய தரவுகளும் வழங்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், விக்கிரமரத்னவின் முழுமையான வாதத்திற்கு ஆதரவாகவே சமீபத்திய தரவுகளும் காணப்படுகின்றன.
2016 ஆம் ஆண்டில் தொழிற்படை பங்கேற்பில் ஆண்கள் 75.1 சதவீதமும், பெண்கள் 35.9 சதவீதமும் உள்ளதை தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்கள தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. 2017 ஆம் ஆண்டில் ஆண்கள் 74.5 சதவீதமாகவும், பெண்கள் 37.9 சதவீதமாகவும் உள்ளனர். தொழிற்படை பங்கேற்பில் பாலின இடைவெளியில் 144 நாடுகளில் இலங்கையை 131 ஆவது இடத்தில் உலகப் பொருளாதார பேரவை நிரற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பாரிய பாலின இடைவெளி உள்ள 14 ஆவது நாடாக இலங்கை உள்ளது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் முறையே 144 நாடுகளில் 132 இடத்திலும், 149 நாடுகளில் 130 ஆவது இடத்திலும் இலங்;கை நிரற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தொழிற்படை பங்கேற்பு தொடர்பில் அமைச்சர் குறிப்பிட்ட சதவீதங்கள் சரியாகவே உள்ளன.
2016 ஆம் ஆண்டில் உச்சபட்ச வேலைவாய்ப்பின்மையைக் (29.2 சதவீதம்) கொண்ட குழுவாக 15-24 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் உள்ளதை தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இது அதே வயதுடைய ஆண்கள் குழுவுடன் ஒப்பிடுகையில் 12.1 சதவீதப் புள்ளிகள் அதிகமாகும். அத்துடன் 25-29 வயதுடைய பெண்கள் குழுவுடன் ஒப்பிடுகையில் 13.3 சதவீதம் அதிகமாகும் (அட்டவணை 1). 2017 ஆம் ஆண்டில் இது 24.5 சதவீதமாகக் குறைந்தது.
இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தனது இரண்டு கூற்றுக்களையும் சரியாகவே தெரிவித்துள்ளார். எனவே நாங்கள் அவரது அறிக்கையினை ‘சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: வயது மற்றும் பாலின அடிப்படையில் தொழிற்படை பற்கேற்பு மற்றும் வேலையின்மை
அட்டவணை 2: வயது மற்றும் பாலின அடிப்படையில் வேலையின்மை விகிதம்
மேலதிக தகவல்கள்
எவ்வாறாயினும், தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தொழிற்படை பங்கேற்பு கணக்கீடுகளில் வெளிநாடுகளில் பணிபுரியும் கணிசமான அளவு இலங்கைப் பெண்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இலங்கையின் புலம்பெயர் பணியாளர்கள் உள்ளடக்கப்பட்டால், பெண்களின் தொழிற்படை பங்கேற்பு அதிகரிக்கலாம்.
மூலம்
- தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை தொழிற்படை பங்கேற்பு ஆண்டறிக்கை 2015, பக்கம் 23, பார்வையிட: http://www.statistics.gov.lk/samplesurvey/LFS_Annual%20Report_2015.pdf
- தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை தொழிற்படை பங்கேற்பு ஆண்டறிக்கை 2016, பக்கம் 23, பார்வையிட: http://www.statistics.gov.lk/samplesurvey/LFS_Annual%20Report_2016.pdf [last accessed: 15 October 2019]
- தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை தொழிற்படை பங்கேற்பு ஆண்டறிக்கை 2017, பக்கம் IV மற்றும் 23, பார்வையிட: http://www.statistics.gov.lk/samplesurvey/LFS_Annual%20Report_2017_version2.pdf [last accessed: 15 October 2019]
- உலகப் பொருளாதார மன்றம், உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2016, பக்கம் 322, பார்வையிட: http://www3.weforum.org/docs/GGGR16/WEF_Global_Gender_Gap_Report_2016.pdf [last accessed: 15 October 2019]
- உலகப் பொருளாதார மன்றம், உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2017, பக்கம் 302, பார்வையிட: http://www3.weforum.org/docs/WEF_GGGR_2017.pdf [last accessed: 15 October 2019]
- உலகப் பொருளாதார மன்றம், உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2018, பக்கம் 255, பார்வையிட: http://www3.weforum.org/docs/WEF_GGGR_2018.pdf [last accessed: 15 October 2019]
- அசல் அறிக்கையைப் பார்வையிட: http://www.ft.lk/business/ARTDO-shares-ideas-for-sustainable-future/34-686408 [last accessed: 15 October 2019]