உண்மைச் சரிபார்ப்புகளும்
முன்மொழியப்பட்டுள்ள 2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஜனாதிபதியின் செலவினத் தலைப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை “நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அதிகமானது” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிடுகின்றார்.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, கடந்த பதினைந்து ஆண்டுகளாக (2011 முதல் 2025 வரை) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலங்களில் ஜனாதிபதியின் செலவினத் தலைப்பிற்கு ஒதுக்கப்பட்ட தொகையை FactCheck.lk ஆராய்ந்ததுடன், அவற்றை 2026 ஆம் ஆண்டுக்கு முன்மொழியப்பட்ட ஒதுக்கீடான ரூ.11.385 பில்லியனுடன் ஒப்பிட்டுப் பார்த்தது.
பணவீக்கம் காரணமாக (சம்பள அதிகரிப்பு உட்பட) அநேகமான வரவு செலவுத்திட்ட தலைப்புகளுக்கான செலவினம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பது பொதுவான ஒன்றாகும். ஏனெனில் அதே பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஆண்டுதோறும் அதிகம் செலவாகின்றது. எனவே ஒவ்வொரு ஆண்டின் தொகையும் பெயரளவு பெறுமதியில் குறிப்பிடப்படும்போது அவை வரலாற்றில் அதிகமாகவே இருக்கும். இந்தத் தாக்கம் குறிப்பாக 2021 ஆம் ஆண்டு முதல் மிகவும் கூடுதலாக உள்ளது. இதன்போது ஒட்டுமொத்த நுகர்வோர் விலை பணவீக்கம் 80 சதவீதத்தைத் தாண்டி மிக அதிகமாக இருந்தது. அதாவது 2021 ஆம் ஆண்டில் ரூ.100 ஆகக் காணப்பட்ட பொருள் தற்போது ரூ.180 ஐ விட அதிகமாக இருக்கும்.
இதன் பிரகாரம், கடந்த கால செலவினங்களுடனான நியாயமான ஒப்பீடு அதன் உண்மையான பெறுமதியில் இருக்க வேண்டும். அதாவது பணவீக்கம் சரிசெய்யப்பட்ட செலவினப் பெறுமதியை ஒப்பிட வேண்டும். கடந்த பதினைந்து ஆண்டுகளின் (2011 ஆம் ஆண்டு முதல்) ஜனாதிபதியின் செலவினத் தலைப்பிற்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டை 2026 ஆம் ஆண்டின் முன்மொழியப்பட்ட பெறுமதியுடன் ஒப்பிடும்போது பதினொரு தடவைகள் அதிகமாக உள்ளதை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள உண்மையான பெறுமதி புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. எனவே 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு நிச்சயமாக வரலாற்றில் அதிகூடியது அல்ல.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்தநாயக்க பெயரளவு பெறுமதிகளில் தனது கூற்றை (நியாயமற்ற வகையில்) முன்வைத்திருந்தாலும், பெயரளவு ஒதுக்கீடுகளும் 2019 (ரூ.13,561 பில்லியன்) மற்றும் 2024 (ரூ.38,600 பில்லியன்) ஆகிய இரு ஆண்டுகளிலும் அதிகமாகவே உள்ளன. 2024 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் பின்னர் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது.
மொத்தத்தில், உண்மையான மற்றும் பெயரளவு பெறுமதிகளில் ஜனாதிபதி செலவினத் தலைப்பிற்கான 2026 ஒதுக்கீடு வரலாற்றில் அதிகூடியது அல்ல என்பதைத் தரவு காட்டுகின்றது.
எனவே நாங்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை தவறானது என வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனதுமுடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: ஜனாதிபதி செலவினத் தலைப்பிற்கான ஒதுக்கீடு: பெயரளவு மற்றும் உண்மையான பெறுமதிகள் (2011 – 2026)

குறிப்பு: 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான சராசரி வருடாந்த பணவீக்கம் முறையே 0% மற்றும் 5% எனஅனுமானிக்கப்படுகின்றது.
மூலம்
ஒதுக்கீட்டுச் சட்டமூலங்கள், நிதி அமைச்சு. https://www.treasury.gov.lk/web/appropriation-act/section/2026
பணவீக்கம் தொடர்பான தரவு, இலங்கை மத்திய வங்கி.