லசந்த அலகியவன்ன

திரவப் பெற்றோலிய எரிவாயு சிக்கலுக்கான காரணத்தை இராஜாங்க அமைச்சர் அலகியவன்ன தவறாகக் குறிப்பிடுகிறார்

"

இந்த (திரவப் பெற்றோலிய எரிவாயு) பிரச்சினை பியூட்டன் மற்றும் புரொபேன் கலவையால் ஏற்பட்ட சிக்கலினாலேயே முக்கியமாக ஏற்பட்டுள்ளது – (ஏனென்றால்) இலங்கை தரநிர்ணய நிறுவனத்தால் (SLSI) உருவாக்கப்பட்ட தரநிலைகளில் இந்தக் கலவையின் அளவு குறிப்பிடப்படவில்லை

இலங்கை பாராளுமன்றத்தின் ஹன்சாட் மற்றும் யூடியூப் சேனல் | நவம்பர் 29, 2021

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

சமையலுக்கான திரவப் பெற்றோலிய எரிவாயுவில் புரொபேன் மற்றும் பியூட்டனின் பாதுகாப்பான விகிதத்தை உறுதிப்படுத்தத் தவறியமைக்கு, இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் தரநிலைகளில் கலவையின் விகிதம் குறித்துக் குறிப்பிடாமல் அழுத்தத்தின் அளவு மாத்திரம் குறிப்பிடப்பட்டதே காரணம் என கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் பாவனையாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இராஜாங்க அமைச்சரின் விளக்கத்தின் உண்மைத்தன்மையை மதிப்பிடுவதற்கு திரவப் பெற்றோலிய எரிவாயுத் துறையின் சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல்களை FactCheck.lk ஆராய்ந்தது. இந்த வழிகாட்டுதல்கள் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்துடன் (UNEP) இணைந்து சர்வதேச திரவப் பெற்றோலிய எரிவாயு சங்கம் (WLPGA) வெளியிட்டுள்ள விரிவான தொகுப்பு ஆகும். இந்த வழிகாட்டுதல்கள் மிக முக்கியமான சர்வதேச தரநிலைகளையும் நடைமுறைகளையும் குறிப்பிடுகின்றன. இவை அட்டவணை 1ல் வழங்கப்பட்டுள்ளன.

திரவப் பெற்றோலிய எரிவாயு என்பது மசகு எண்ணெயில் இருந்து பெறப்படும் ஹைட்ரோகார்பனை அடிப்படையாகக் கொண்ட வாயுக்களைக் குறிக்கிறது. இதன் முதன்மையான கூறுகள் புரொபேன் மற்றும் பியூட்டன் ஆகும். சாதாரண அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தின் போது புரொபேன் மற்றும் பியூட்டன் ஆகிய இரண்டும் வாயுக்களாக இருக்கும். ஆனால் அதிக அழுத்தம் அல்லது பூச்சிய வெப்பநிலையில் அவை திரவங்களாக மாறும். புரொபேன் மற்றும் பியூட்டன் ஆகிய இரண்டினதும் இயற்பியல் பண்புகளில் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் உள்ளன. புரொபேன் மிக எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டது. –42°C வெப்பநிலையில் அது ஆவியாகும். ஆனால் பியூட்டன் 0°C வெப்பநிலையில் மாத்திரமே ஆவியாகும். ஆகவே சிலிண்டரிலுள்ள எரிவாயுவைத் திரவமாக வைத்திருப்பதற்கான அழுத்தத்தின் மட்டம் புரொபேனுக்கும் பியூட்டனுக்குமான விகிதத்தில் தங்கியுள்ளது. புரொபேனின் அளவை அதிகரிக்கும்போது (இலங்கையில் செய்யப்பட்டது போன்று) சிலிண்டரிலுள்ள அழுத்தத்தின் அளவும் குறிப்பிட்ட வெப்பநிலையில் உயரும்.

ஆகவே பிற காரணிகள் (அளவு மற்றும் வெப்பநிலை போன்றன) நிலையானதாக இருக்கும்போது அழுத்தத்தின் மட்டம் கலவையின் விகிதத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது சர்வதேசத் தரங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. சர்வதேசத் தரங்களும் திரவப் பெற்றோலிய வாயுவிற்கான புரொபேனுக்கும் பியூட்டனுக்குமான நிலையான விகிதத்தைக் குறிப்பிடாமல் அதிகபட்ச அழுத்தத்தையே குறிப்பிடுகின்றன.

எனவே அமைச்சரின் கூற்று தவறானது. உள்நாட்டு மற்றும் சர்வதேசத் தரநிலைகளின் பிரகாரம் அழுத்தத்தின் அளவு கலவையின் விகிதத்தில் முக்கிய கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. எனவே பின்பற்றப்படும் தரநிலையில் கலவையின் விகிதம் குறிப்பிடப்படாததே பிரச்சினைக்கு காரணம் எனக் குறிப்பிட முடியாது.

ஆகவே அமைச்சரின் அறிக்கையை நாங்கள் ‘தவறானது’ என வகைப்படுத்துகிறோம்.

**பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

சர்வதேச திரவப் பெற்றோலிய எரிவாயு சங்கம் (WLPGA) மற்றும் ஐக்கிய நாடுகள் சுற்றுசூழல் திட்டம் (UNEP). (2008). திரவப் பெற்றோலிய எரிவாயுத் துறையில் சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன