Anura Kumara Dissanayake

ஜனாதிபதி திசாநாயக்க குறிப்பிடும் ஒதுக்கு பெறுமதிகளில் பிரச்சினை உள்ளது

"

“5-6 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று எமது நாடு பாரிய டொலர் ஒதுக்கைக் கொண்டுள்ளது.”

NPP யூடியூப் சேனல் | ஏப்ரல் 17, 2025

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

உள்ளூராட்சித் தேர்தல்களை முன்னிட்டு இடம்பெற்ற பிரச்சாரப் பேரணி ஒன்றில், கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் இலங்கை தற்போதே மிகப்பெரிய டொலர் ஒதுக்கைக் கொண்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலர் அறிக்கைகள் ஆகியவற்றில் வெளிநாட்டு ஒதுக்கு தொடர்பான தரவுகளை FactCheck.lk ஆராய்ந்தது. இது இரண்டு குறிகாட்டிகளைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டது: (i) ஒதுக்குகளின் ஐ.அ.டொ பெறுமதி (ii) ஒதுக்குகளின் அடிப்படையில் இறக்குமதிகளுக்கான இயலுமை மாதங்கள் – அதாவது ஒதுக்குகளைப் பயன்படுத்தி எத்தனை மாதங்கள் இறக்குமதி செய்யலாம் (Import Cover). இந்த இரண்டு குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த மதிப்பீடு இந்தக் கூற்றை ஜனாதிபதி தெரிவித்த காலப்பகுதியான மார்ச் 2025 ஆம் ஆண்டின் ஒதுக்கு பெறுமதியுடன் கடந்த கால ஒதுக்கு பெறுமதிகளை ஒப்பிட்டது.

  1. ஒதுக்குகளின் ஐ.அ.டொ பெறுமதி

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் (ஏப்ரல் 2020 முதல்) 5 தடவைகளும், கடந்த ஆறு ஆண்டுகளில் (ஏப்ரல் 2019 முதல்) 17 தடவைகளும் மார்ச் 2025 இல் பதிவான ஐ.அ.டொ 6.5 பில்லியனைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்றன. சமீபத்தில் பதிவானது செப்டெம்பர் 2020 ஆம் ஆண்டில் ஆகும். இதன்போது ஒதுக்குகள் ஐ.அ.டொ 6.7 பில்லியனை எட்டின (4.5 ஆண்டுகளுக்கு முன்னர்).

எனினும் டிசம்பர் 2021 முதல் சுமார் ஐ.அ.டொ 1.4 பில்லியன் பெறுமதியான சீன மக்கள் வங்கியின் பரஸ்பர நாணயப் பரிமாற்றலை ஒதுக்குகள் உள்ளடக்கியிருந்தன. பயன்பாட்டிற்கான குறிப்பிடத்தக்க நிபந்தனைகளைக் கொண்டுள்ள இந்த நாணயப் பரிமாற்றல், ஒதுக்குச் சொத்து எனத் தகுதிபெறவில்லை என்பதால் இதை இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகளில் கணக்கிட முடியாது (FactCheck.lk விளக்கத்தைப் பார்க்கவும்).

இந்த நாணயப் பரிமாற்றலைத் தவிர்த்தால், முறையாக வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு ஒதுக்குகள் மார்ச் 2025 இல் ஐ.அ.டொ 5.1 பில்லியன் ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் 9 தடவைகளும், கடந்த ஆறு ஆண்டுகளில் 21 தடவைகளும் கடந்த கால ஒதுக்குகள் இந்த ஐ.அ.டொ 5.1 பில்லியன் பெறுமதியைத் தாண்டியுள்ளன. மிகச் சமீபத்தியது டிசம்பர் 2020 ஆகும். இதன் போது ஒதுக்குகள் ஐ.அ.டொ 5.7 பில்லியனாகக் காணப்பட்டது (4.25 ஆண்டுகளுக்கு முன்னர்). அட்டவணை 1 இல் தரவுகளைப் பார்க்கவும்.

எனவே, கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் மிக அதிகம் என ஜனாதிபதி குறிப்பிடுவதற்கு மாறாக, மார்ச் 2025 இல் இலங்கையின் ஒதுக்குகள் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையிடப்பட்ட பெறுமதி அல்லது முறையாக வரையறுக்கப்பட்ட ஒதுக்குகள் பெறுமதி ஆகிய இரண்டிலுமே குறைவாக உள்ளன. மார்ச் 2025 ஒதுக்குகள் கடந்த நான்கு ஆண்டுகளில் மிக அதிகமாக இருந்தது (இலங்கை சர்வதேச நாணயச் சந்தைகளுக்கான அதன் அணுகலை இழந்த பின்னர்), மாறாக கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் அதிகூடியதாக இருக்கவில்லை.

  1. ஒதுக்குகளின் அடிப்படையில் இறக்குமதிக்கான இயலுமை மாதங்கள்

வெளிநாட்டு ஒதுக்குகளால் நிதியளிக்கக்கூடிய இறக்குமதி மாதங்களின் எண்ணிக்கையை இந்தக் குறிகாட்டி அளவிடுகின்றது. முந்தைய 12 மாதங்களில் சராசரி மாதாந்த இறக்குமதிகளை அடிப்படையாகக் கொண்டு இது கணக்கிடப்படுவதுடன் இது மேற்கோள் காட்டப்பட்ட மாதத்தையும் உள்ளடக்கியுள்ளது. மார்ச் 2025க்கு, இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையிடப்பட்ட ஒதுக்குகளின் அடிப்படையில் இறக்குமதிக்கான இயலுமை 4.05 மாதங்கள் ஆகும். முறையாக வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு ஒதுக்குகளின் பெறுமதியின் அடிப்படையில் இது 3.20 மாதங்களாகக் குறைகின்றது.

இலங்கை மத்திய வங்கி அறிக்கையிட்ட ஒதுக்குகளின் அடிப்படையில் ஒதுக்குப் போதுமாந்தன்மை, 2025 மார்ச் மாதத்திற்குக் கணக்கிடப்பட்ட 4.05 மாதங்களை விட கடந்த ஐந்து ஆண்டுகளில் 11 தடவைகளும், கடந்த ஆறு ஆண்டுகளில் 22 தடவைகளும் அதிகமாக இருந்துள்ளன. மிகச் சமீபத்தியது நவம்பர் 2024 ஆம் ஆண்டாக உள்ளதுடன் இதன்போது 4.21 மாதங்களை எட்டியது. இதேபோன்று முறையாக வரையறுக்கப்பட்ட ஒதுக்குகளின் அடிப்படையில் 2025 மார்ச் மாதத்திற்கான 3.20 மாதங்கள் என்ற ஒதுக்கு போதுமாந்தன்மை, கடந்த ஐந்து ஆண்டுகளில் 13 தடவைகளும் கடந்த ஆறு ஆண்டுகளில் 25 தடவைகளும் அதிகமாக இருந்துள்ளன. மிகச் சமீபத்தியது நவம்பர் 2024 ஆம் ஆண்டாகும், இதன்போது இது 3.30 மாதங்களாகக் காணப்பட்டது. இந்தக் குறிகாட்டியிலும் கூட மார்ச் 2025 பெறுமதியை விட ஒதுக்குகளின் பலம் கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் பல மாதங்களில் அதிகமாக இருந்திருக்கிறது என்பதை இந்தப் பெறுமதிகள் காட்டுகின்றன.

சுருக்கமாகக் குறிப்பிடுவதானால், கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் மார்ச் 2025 ஒதுக்குகள் அதிகமாக உள்ளது என்ற ஜனாதிபதியின் கூற்று இலங்கை மத்திய வங்கி அறிக்கையிட்ட பெறுமதிகளிலும் முறையாக வரையறுக்கப்பட்ட ஒதுக்குகளின் அடிப்படையிலும் தவறாக உள்ளது. ஆனால் மார்ச் 2025 ஒதுக்குகள் கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகமாக இருந்தது. ஏனெனில் 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஒதுக்குகள் பலத்த சரிவைச் சந்தித்தன. ஐ.அ.டொலர் பெறுமதிக்குப் பதிலாக ஒதுக்குகளின் பலத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் இறக்குமதிகளுக்கு ஒதுக்கின் போதுமாந்தன்மையைக் கணக்கில் கொண்டாலும் அந்தக் கூற்றும் இதேபோன்று தவறாகவே உள்ளது.

எனவே நாங்கள் ஜனாதிபதியின் அறிக்கையை தவறானது என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனதுமுடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

 

அட்டவணை 1: இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கு சொத்துகள் மற்றும் இறக்குமதிகளுக்கு ஒதுக்கின் போதுமாந்தன்மை: ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2025



மூலம்

FactCheck.lk. (2024, ஜனவரி 22). ஒதுக்குகளின் தவறான அறிக்கையிடல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி உதவி ஆளுநர் சரியாகக் குறிப்பிடுகின்றார்.  https://factcheck.lk/factcheck/cbsl-assistant-governor-correctly-cites-flawed-reserve-reporting/

இலங்கை மத்திய வங்கி. (ஏப்ரல் 2025). வாராந்தக் குறிகாட்டிகள். https://www.cbsl.gov.lk/en/statistics/economic-indicators/weekly-indicators

சர்வதேச நாணய நிதியம். (2009). சென்மதி நிலுவை மற்றும் சர்வதேச முதலீட்டு நிலை கையேடு (6வது பதிப்பு). https://www.imf.org/external/pubs/ft/bop/2007/bopman6.htm

சர்வதேச நாணய நிதியம். (2023, டிசம்பர்12). இலங்கை: நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் நீட்டிக்கப்பட்ட ஏற்பாட்டின் கீழான முதலாவது மீளாய்வு, செயல்திறன் அளவுகோல்களைக் கடைப்பிடிக்காததற்கு விலக்கு அளித்தல், செயல்திறன் அளவுகோல்களை மாற்றியமைத்தல், அணுகலை மறுபரிசீலனை செய்தல் மற்றும் நிதி உத்தரவாதங்களை மதிப்பாய்வு செய்தல் ஆகியவற்றுக்கான கோரிக்கைகள் ஊடக வெளியீடு; அலுவலர் அறிக்கை; மற்றும் இலங்கைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளரின் அறிக்கை (நாட்டின் அறிக்கை இல. 2023/408). https://www.imf.org/en/Publications/CR/Issues/2023/12/12/Sri-Lanka-First-Review-Under-the-Extended-Arrangement-Under-the-Extended-Fund-Facility-542441.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன