விஜித ஹேரத்

ஜனாதிபதிக்குரிய செலவின ஒதுக்கீட்டைப் பாராளுமன்ற உறுப்பினர் அதிகரித்துக் குறிப்பிடுகிறார்

"

இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும்… செலவினங்களைக் குறைப்பதாக அரசாங்கம் மீண்டும் உறுதியளித்தாலும் ஜனாதிபதிக்குரிய செலவினத் தலைப்பு ரூ.3,779 மில்லியனாக (அதிகரிக்கப்பட்டுள்ளது) உள்ளது… அமைச்சரவைக்கும் ஏனையவற்றுக்கும் இந்த ஜனாதிபதி செலவிடும் தொகையை நாங்கள் கவனத்தில் கொண்டால்… (தொடர்ச்சி)

பாராளுமன்றம் | நவம்பர் 22, 2023

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

(தொடர்ச்சி) “…ஜனாதிபதியின் கீழ் ஏழு அமைச்சுக்கள் உள்ளதுடன் மொத்த செலவினம் ரூ.7,826.84 பில்லியனில் ரூ.5,227.77 பில்லியன் அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது… அதாவது வரவு செலவுத்திட்டத்தின் மொத்த செலவினத்தில் 66.7% ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.”

ஜனாதிபதியுடன் தொடர்புடைய செலவின ஒதுக்கீடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் இரண்டு கூற்றுக்களை முன்வைத்துள்ளார்: (1) வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதிக்குரிய செலவினத் தலைப்பு (நாட்டின் தலைவராக அவரது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு) ரூ.3,779 மில்லியனாக அதிகரித்துள்ளது, (2) ஜனாதிபதியின் கீழுள்ள ஏழு அமைச்சுக்களுக்கும் மொத்த வரவு செலவுத்திட்ட செலவினத்தில் 66.7% ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றைச் சரிபார்ப்பதற்கு, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளின் வரைபு (பாராளுமன்ற உறுப்பினர் அறிக்கையை வெளியிட்ட நேரத்தில் கிடைத்தது), இலங்கை அரசியலமைப்பு, பாராளுமன்ற ஹன்சாட், அமைச்சரவை அமைச்சர்களின் துறைகளைத் தீர்மானிப்பதற்கு வர்த்தமானி இல.2304/58 ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

கூற்று 1: ஜனாதிபதிக்குரிய செலவினத் தலைப்பின் மீண்டுவரும் (மூலதனம் அல்லாத) கூறு (2023 இல்) ரூ.2,812 மில்லியனில் இருந்து 2024 ஆம் ஆண்டில் ரூ.3,779 மில்லியனாக அதிகரித்துள்ளதை வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டு வரைபு காட்டுகின்றது. இந்த அதிகரிப்பிற்கான முக்கிய காரணம் பயன்பாடுகள் மற்றும் ஊதியங்களுக்கான ஒதுக்கீடுகள் அதிகரித்தமை ஆகும். வரவு செலவுத்திட்டத்தின் மூலதனக் கூறுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை.

கூற்று 2: வரவு செலவுத்திட்டத்தில் மொத்த செலவினம் ரூ.6,558.44 பில்லியன், ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களுக்கான செலவினமாக ரூ.3,859.97 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மூலதனக் கடன் மீள்கொடுப்பனவுகள் ரூ.1,268.39 பில்லியனை (இது நிதி அமைச்சினால் கையாளப்படுகிறது) செலவினத்துடன் சேர்த்ததன் காரணமாகவே பாராளுமன்ற உறுப்பினர் அவர் குறிப்பிடும் பெறுமதியைப் பெற்றிருக்கக்கூடும். எனினும் கடன் மீதான இந்த மூலதன மீள்கொடுப்பனவுகள் பொதுக் கணக்கு தரநிலைகளுக்கு (கூடுதல் குறிப்பைப் பார்க்கவும்) அமைய செலவினமாக வகைப்படுத்தப்படவில்லை. எனவே ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களுக்கான செலவினம், வரவு செலவுத்திட்டத்தின் மொத்த செலவினத்தில் 58.9% ஆகும். பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது போன்று 66.7% அல்ல. அத்துடன் செலவினத்தில் 40.4% கடன்கள் மீதான வட்டியைச் செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத்தாண்டி, வரவுசெலவுத்திட்டத்தின் 18.4% மட்டுமே ஜனாதிபதியின் கீழ் உள்ள செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கீழ் ஏழு அமைச்சுக்கள் உள்ளது என்பதிலும் பாராளுமன்ற உறுப்பினர் தவறிழைத்துள்ளார். வர்த்தமானி இல.2304/58 மற்றும் நவம்பர் 22, 2023 திகதியிடப்பட்ட பாராளுமன்ற ஹன்சாட்டின் (பாராளுமன்ற உறுப்பினர் இந்தக் கூற்றை வெளியிட்டபோது இவை கிடைத்தன) பிரகாரம் 28 அமைச்சுக்கள் உள்ளன, அவற்றில் ஐந்துக்கு மட்டுமே ஜனாதிபதி அமைச்சராக உள்ளார்.

ஜனாதிபதிக்குரிய செலவினத் தலைப்பின் மீண்டுவரும் (மொத்தம் அல்ல) ஒதுக்கீட்டின் அதிகரிப்பு பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதியுடன் பொருந்துகிறது. எனினும் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட செலவினத்தின் விகிதத்தை அவர் தவறாகக் குறிப்பிடுகிறார். அத்துடன் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் எண்ணிக்கையும் அவர் மிகைப்படுத்துகிறார்.

எனவே பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை நாங்கள் பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.

மேலதிக குறிப்பு: செலவினத்தில் என்னென்ன அடங்கும் என்பதற்கு, “ராஜபக்ஷ வரவுசெலவுத்திட்டத்தை மதிப்பிடுவதில் அனுர குமார திசாநாயக்க செலவினத்தைத் தவறாக வகைப்படுத்துகிறார்” எனத் தலைப்பிடப்பட்ட டிசம்பர் 2021 உண்மைச் சரிபார்ப்பில் FactCheck.lk ஏற்கனவே விளக்கமளித்துள்ளது.

 



மூலம்

2024க்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் வரைபு, தொகுதி 1, நவம்பர் 2023, நிதி அமைச்சு

(இணைப்பு: Ministry of Finance – Sri lanka (treasury.gov.lk))

2024க்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள், தொகுதி 1, டிசம்பர் 2023, நிதி அமைச்சு

(இணைப்பு: Ministry of Finance – Sri lanka (treasury.gov.lk))

ராஜபக்ஷ வரவுசெலவுத்திட்டத்தை மதிப்பிடுவதில் அனுர குமார திசாநாயக்க செலவினத்தைத் தவறாக வகைப்படுத்துகிறார், டிசம்பர் 2021, FactCheck.lk

(இணைப்பு: AKD mis-categorises expenditure in assessing Rajapaksa budget – FactCheck)

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் வர்த்தமானி, இல. 2304/58, நவம்பர் 4, 2023, அரசாங்க அச்சுத் திணைக்களம் (இணைப்பு: 2304-58_E.pdf (documents.gov.lk))

ஹன்சாட், நவம்பர் 22, 2023, இலங்கைப் பாராளுமன்றம் (இணைப்பு: 1704260841006732.pdf (parliament.lk)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன