சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ: ஜனாதிபதியை விமர்சிப்பது தொடர்பில் தவறாகக் குறிப்பிடுகிறார்

"

சமூக ஊடகங்களிலோ வேறு எந்த ஊடகங்களிலோ ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிடுவதும் பரிமாறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளது.

திவயின | ஜனவரி 3, 2022

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிரிஹான ஊடாகப் பயணம் செய்துகொண்டிருக்கும்போது பொதுமக்கள் வாய்மொழியாக எதிர்ப்புத் தெரிவிக்கும் வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்காக செயற்பாட்டாளர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தல்துவ இந்தக் கூற்றை ஊடகங்களுக்கு முன்வைத்தார். இந்தக் கூற்றை மதிப்பிடுவதற்கு FactCheck.lk அரசியலமைப்பு விதிகள் மற்றும் இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஆராய்ந்தது.

இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 14(1)(அ) பிரகாரம் ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சு மற்றும் கருத்துகளை வெளியிடுவதற்கான சுதந்திரம் உள்ளது. அரசியலமைப்பின் கீழ் தேசியப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, இன மற்றும் மத நல்லிணக்கம், பாராளுமன்ற சிறப்புரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு அல்லது குற்றத்தைத் தூண்டுவதைத் தடுப்பதற்கு சட்டத்தினால் மட்டுமே கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

ஜனாதிபதி அல்லது அரசாங்கம் மீது அவமதிக்கும் அறிக்கைகளை வெளியிடுவதற்கான சட்டபூர்வத்தன்மை வஹலதந்திரி எதிர் ஜயந்த விக்கிரமரத்ன, பொலிஸ் மாஅதிபர் [S.C. (F.R.) விண்ணப்ப இல. 768/2009] இடையிலான 2015 உயர் நீதிமன்றத் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்திய இரண்டு நபர்கள் மீது தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 120இன் கீழ் பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர். ஜனாதிபதி அல்லது அரசாங்கத்திற்கு எதிரான அவதூறான, சங்கடமான அல்லது அவமதிக்கும் அறிக்கைகளை வெளியிடுவது கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்துவதற்கான சட்டபூர்வமான மற்றும் ஜனநாயக உரிமை என அந்தத் தீர்ப்பில் உயர் நீதிமன்றம் அறிவித்தது. மேலும் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்திற்கு எதிராக அவதூறான, சங்கடமான அல்லது அவமதிக்கும் கருத்துகளை வெளியிடுவதற்காக பொதுமக்கள் மீது பொலிஸார் வழக்குத் தொடர முடியாது எனவும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. அவ்வாறான கருத்துகள் வன்முறையைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்தால் மட்டுமே தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 120 பொருந்தும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

ஜனாதிபதியை அவமதிக்கும் அல்லது அவதூறு செய்யும் வகையிலான கருத்துகளை வெளியிடுவது தண்டனைக்குரியது அல்ல என்பது மேலுள்ள ஆய்வு மூலம் உறுதியாகிறது. ஜனாதிபதியை அவமதிக்கும் அல்லது அவதூறு செய்யும் அறிக்கைகளை வெளியிடுவது தண்டனைக்குரியது அல்ல என்பதால், அவ்வாறான அறிக்கைகளை வெளியிடும் அல்லது பரிமாறும் நபர்கள் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எந்தவித சட்ட அடிப்படையும் இல்லை. ஆகவே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவவின் அறிக்கையை நாங்கள் ‘தவறானது’ என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

 



மூலம்

அமரதுங்க V. சிறிமல் [1993] 1 ஸ்ரீ எல்.ஆர். 264 – https://www.lawnet.gov.lk/wp-content/uploads/2016/11/029-SLLR-SLLR-1993-1-AMARATUNGA-v.-SIRIMAL-AND-OTHERS-JANA-GHOSHA-CASE.pdf

இலங்கையின் அரசியலமைப்புhttps://www.parliament.lk/files/pdf/constitution.pdf

தண்டனைச் சட்டம் –  https://ihl-databases.icrc.org/applic/ihl/ihl-nat.nsf/0/2962721b86fc380ac125767e00582c62/$FILE/Penal%20Code.pdf

வஹலதந்திரி V ஜயந்த விக்கிரமரத்ன, பொலிஸ் மா அதிபர் [எஸ்.சி. (F.R.) விண்ணப்ப எண். 768/2009] –  http://www.supremecourt.lk/images/documents/sc_fr_768_2009.pdf

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன