உதய கம்மன்பில

கடன் சுமை தொடர்பில் உதய கம்மன்பில: புள்ளிவிபரங்கள் சரியானவை, ஆனால் அதன் மூலம் எட்டப்பட்ட முடிவு சரியில்லை

"

2005 ஆம் ஆண்டில் நாங்கள் நாட்டினைப் பொறுப்பேற்றுக்கொண்ட போது, இலங்கையின் கடன் சுமை 103 சதவீதமாக இருந்தது

மவ்பிம | ஜூலை 8, 2020

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

மேலேயுள்ள கூற்றில், 2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் நாட்டின் கடன்சுமையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 103 சதவீதத்தில் இருந்து,  அவர்களின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் 72 சதவீதமாகக் குறைத்துள்ளனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிடுகின்றார். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஐந்தாண்டின் இறுதியில் கடன் சுமையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 87 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

இந்தக் கூற்றுக்களை மதிப்பிடுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் 2019 ஆண்டறிக்கையின் சிறப்பு புள்ளிவிபரப் பின்னிணைப்பினை FactCheck ஆராய்ந்தது.

உதய கம்மன்பில குறிப்பிடும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமான கடன் தொடர்பான புள்ளிவிபரம் மத்திய அரச படுகடனாகும், ஆனால் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் உள்ள கடன்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

2004 ஆம் ஆண்டின் முடிவில் – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னர் – மத்திய அரசாங்கத்தின் கடன் இலங்கை ரூபாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 102.5 வீதமாகக் காணப்பட்டது. 2014 ஆம் ஆண்டின் இறுதியில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஆட்சி முடிவின் போது, இது 72.3 சதவீதமாகக் குறைந்தது. 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி அமைத்தது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் அதன் ஆட்சி முடிவுக்கு வந்த போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் விகிதம் 86.8 சதவீதமாக உயர்ந்தது. இந்த புள்ளிவிபரங்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட சதவீதங்களுடன் பொருந்திப் போகின்றன.

கடனை ஒரு நாணய அலகில் இருந்து மற்றொன்றுக்கு மாற்றும் போது (மற்றும் செலாவணி  வீதத்திற்காக தெரிவுசெய்யப்படும் திகதி) முடிவுகள் மாறலாம் என்பதை இதற்கு முன்னரான உண்மைச் சரிபார்ப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன – உதாரணம், வருடாந்த நாணய மதிப்பு வீழ்ச்சியினால் நிலையான அமெரிக்க டொலர்களிலுள்ள கடனானது இலங்கை ரூபாயிலுள்ள கடனாக அதிகரிக்கின்றது என கணக்கிடப்படுகின்றது. அதேநேரம், வெளிநாட்டுக் கடன்களை அமெரிக்க டொலர்களிலும், உள்நாட்டுக் கடன்களை இலங்கை ரூபாயிலும் தொடர்ந்து கணக்கிடுவது இந்தக் குழப்பத்தை தடுக்கும்.

உள்நாட்டுக் கடனின் வளர்ச்சியை இலங்கை ரூபாயிலும், வெளிநாட்டுக் கடன்களை அமெரிக்க டொலர்களிலும் கருத்தில் கொள்ளும் போது, நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியை விட (8.2% மற்றும் 9.2% அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை ரூபாயில்) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சிக்காலத்தில் (9.6% மற்றும் 14.1% அமெரிக்க டொலர் மற்றும் இலங்கை ரூபாயில்) வருடாந்த கடனின் வளர்ச்சி வீதம் அதிகமாக காணப்பட்டது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பிலவின் கூற்றிலிருந்து தவறான முடிவு எட்டப்பட்டாலும் கூட, இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டது போன்று, மத்திய அரசாங்கத்தின் கடந்த காலக் கடனை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதங்களுக்கு அவர் சரியாகவே மேற்கோள் காட்டுகின்றார்.

எனவே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை ‘சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.

2015 – 2019 காலப்பகுதியில் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை குறைவாக இருந்த போதும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் அதிகரித்தது. அந்தக் காலப்பகுதியில், சராசரி வருடாந்த வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை 6.1 வீதமாக இருந்தது. ஆனால் 2005 – 2014 காலப்பகுதியில் சராசரி வருடாந்த வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை 7 சதவீதமாகக் காணப்பட்டது. ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் புதிய கடன் உருவாக்கம் குறைந்த வேகத்தில் காணப்பட்டது. பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறைந்தமை மற்றும் 2005 – 2014 காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது அதிகரித்தமையே நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடனின் விகிதம் அதிகரித்தமைக்கு காரணம் ஆகும்.

அட்டவணை 1: மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக மத்திய அரச படுகடன் (2004 – 2019) 

 

அட்டவணை 2: மத்திய அரசாங்கத்தின் கடனின் வருடாந்த வளர்ச்சி வீதம் (2004 – 2019)



மூலம்