உண்மைச் சரிபார்ப்புகளும்
பாராளுமன்ற உறுப்பினர் அவரது அறிக்கையில் அ) பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் ஒவ்வொரு லீற்றர் விற்பனையிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்படுகிறது ஆ) தற்போது விதிக்கப்பட்டுள்ள அறவீடுகளை இல்லாமல் செய்தால் நாளாந்தம் ஏற்படும் நட்டங்களைக் குறைக்கலாம் எனக் குறிப்பிடுகிறார்.
2018ம் ஆண்டில் (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்) நிதியமைச்சு நடைமுறைப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமையவும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள பிற தரவின் அடிப்படையிலும் சிறந்த மதிப்பீடுகளை முன்னெடுப்பதன் மூலம் FactCheck.lk நட்டங்களை மதிப்பிடுகிறது.
92-ஒக்டெய்ன் பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றுக்கான தரவு மட்டுமே கிடைப்பதால் FactCheck.lk அதன் மதிப்பீட்டை அவற்றுக்கு மாத்திரமே முன்னெடுக்கிறது.
92-ஒக்டெய்ன் பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றின் ஒரு லீற்றர் விற்பனையால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நட்டம் குறித்த முதலாவது கூற்றைச் சரிபார்ப்பதற்கு, பெப்ரவரி 7 முதல் 11 வரையான (அட்டவணை 3 ஐப் பார்க்கவும்) சிங்கப்பூர் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளின் சராசரியைப் பயன்படுத்தி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கான செலவை FactCheck.lk மதிப்பிட்டது. பாராளுமன்ற உறுப்பினரின் மதிப்பீடு (கணக்கிடப்பட்டவாறு) மற்றும் FactCheck.lk மதிப்பீடுகளின் அடிப்படையில் பல்வேறு செலவுகளை அட்டவணை 1 காட்டுகிறது. FactCheck.lk மதிப்பீடுகளின் அடிப்படையில் ஒரு லீற்றர் பெற்றோலுக்கு ரூ.19 மற்றும் டீசலுக்கு ரூ.46 நட்டம் ஏற்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் டீசலுக்கு அதிக நட்டம் ஏற்படுவதாகக் குறிப்பிடுவது, வரிக்கு முந்தைய விலை மதிப்பீட்டில் 5 சதவீதத்திற்கும் குறைவான பிழையைக் காட்டுகிறது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நாளாந்த நட்டம் தொடர்பிலான இரண்டாவது கூற்றைச் சரிபார்க்க, 2021ம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் அறிக்கையிடப்பட்ட சராசரி மாதாந்த விற்பனைப் பெறுமதிகளை FactCheck.lk பயன்படுத்தியது. அதன் பிரகாரம் 92-ஒக்டெய்ன் பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசல் விற்பனையால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நாளாந்தம் ரூ.294 மில்லியன் நட்டம் ஏற்பட்டது. தற்போதைய வரி விகிதங்களைப் பயன்படுத்தினால், இந்தப் பெற்றோலியப் பொருட்களின் மீது நாளாந்தம் ரூ.207 மில்லியன் வரி அறவிடப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. ஆகவே இந்த அறவீடுகளை இல்லாமல் செய்தாலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்கும் (சுமார் ரூ.87 மில்லியன்), ஆனால் இந்த நட்டம் மிகக் குறைந்ததாக இருக்கும் என்பதைப் பாராளுமன்ற உறுப்பினர் சரியாகக் குறிப்பிடுகிறார்.
92-ஒக்டெய்ன் பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசல் விற்பனையின் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்படுகிறது மற்றும் இந்தப் பெற்றோலியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் அறவீடுகளை இல்லாமல் செய்தால் நாளாந்த நட்டங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் குறைக்க முடியும் என்ற இரண்டு கூற்றுகளையும் பாராளுமன்ற உறுப்பினர் சரியாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே நாங்கள் இந்த அறிக்கையை ‘சரியானது’ என வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
குறிப்பு: இந்த உண்மைச் சரிபார்ப்பில் இறக்குமதி, செயலாக்கம், நிர்வாகம் ஆகியவற்றுக்கான செலவுகள் 2018ம் ஆண்டுக்குரிய பெறுமதிகள் மற்றும் வழிமுறையின் அடிப்படையில் இருக்கும் என அனுமானிக்கப்படுகிறது. எனவே மேலே குறிப்பிட்டுள்ள இந்தச் செலவுகள் 2022ம் ஆண்டில் ஒரளவு மாறியிருக்கலாம்.
இலங்கை மத்திய வங்கி அதன் நாளாந்தப் பொருளாதார குறிகாட்டிகளில் சிங்கப்பூர் பெற்றோல் மற்றும் சிங்கப்பூர் டீசல் ஆகியவற்றின் விலைகளையே வெளியிடுகிறது. வேறு வகைகளின் (அதாவது 92-ஒக்டெய்ன் பெற்றோல், 95-ஒக்டெய்ன் பெற்றோல், ஓட்டோ டீசல், சுப்பர் டீசல்) விலைகளை வெளியிடுவதில்லை. ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் அனைத்துப் பெறுமதிகளையும் FactCheck.lk மதிப்பிடுவது சாத்தியமில்லை. மேலும் 2020ம் ஆண்டில் இலங்கையின் மொத்த பெற்றோல் மற்றும் டீசல் பாவனையில் 95- ஒக்டெய்ன் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகிய இரண்டும் வெறும் 6% மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
மூலம்
இலங்கை மத்திய வங்கி, நாளாந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள் (பெப். 7, 2022 – பெப்.11,2022), பார்வையிட: https://www.cbsl.gov.lk/en/statistics/economic-indicators/daily-indicators [இறுதியாக அணுகியது 02 மார்ச், 2022]
இலங்கை மத்திய வங்கி, மாதாந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள் (நொவம்பர் 2021 – ஜனவரி 2022), பார்வையிட: https://www.cbsl.gov.lk/en/statistics/economic-indicators/ monthly-indicators [இறுதியாக அணுகியது 02 மார்ச், 2022]
இலங்கை மத்திய வங்கி, குறியீட்டு ஐ.அ.டொலர் உடன் செலவணி வீதம் (ஐ.அ.டொலர் ஒன்றிற்கு இல.ரூபா), பார்வையிட: https://www.cbsl.gov.lk/rates-and-indicators/exchange-rates/daily-indicative-usd-spot-exchange-rates [இறுதியாக அணுகியது 02 மார்ச், 2022]
நிதியமைச்சு, ஊடக அறிக்கை (டிசம்பர் 31, 2018), பார்வையிட: http://www.treasury.gov.lk/web/guest/article/-/article-viewer-portlet/render/view/retail-prices-of-auto-fuels-as-at-december-19-2018-as-per-fuel-pricing-mechanism [இறுதியாக அணுகியது 24 மார்ச், 2020]
நிதியமைச்சு, ஊடக அறிக்கை (ஒக்டோபர் 16, 2018), பார்வையிட: www.treasury.gov.lk/documents/10181/606187/PRESS+RELEASE+-+Fuel+Formula20181016/acd8b96e-fae4-46b5-ae30-25086e16134e?version=1.0 [இறுதியாக அணுகியது 24 மார்ச், 2020]
இலங்கை சுங்கம், சுங்க இறக்குமதித் தீர்வை – 2022, பார்வையிட: https://www.customs.gov.lk/customs-tariff/import-tariff/ [இறுதியாக அணுகியது 02 மார்ச், 2022]
நிதியமைச்சு, சுங்க இறக்குமதித் தீர்வைகள் மீதான தள்ளுபடி (மார்ச் 24, 2021), பார்வையிட: https://treasury.gov.lk/api/file/95bfd5ef-e255-4310-a437-0b23bea9e284 [இறுதியாக அணுகியது 02 மார்ச், 2022]
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், கடந்த கால விலைகள், https://ceypetco.gov.lk/historical-prices/ [இறுதியாக அணுகியது 02 மார்ச், 2022]