உண்மைச் சரிபார்ப்புகளும்
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது அறிக்கையில், 2020 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் நாட்டின் மாதாந்திர கடன் அதிகரிப்பு வீதத்தினை 2015 – 2019 காலப்பகுதியுடன் ஒப்பிடுகின்றார்.
இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்கு, இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய மே மாதத்திற்கான மாதாந்த செய்தித் திரட்டு மற்றும் கடந்த காலத் தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு மத்திய வங்கியின் 2019 ஆண்டறிக்கையையும் FactCheck ஆராய்ந்தது.
முடிவடைந்த டிசம்பர் 2014 முதல் டிசம்பர் 2019 வரையான ஐந்தாண்டு காலப்பகுதியில், அரச கடனின் மொத்த நிலுவைத் தொகையானது ரூ.5,545 பில்லியனால் அதிகரித்தது (அட்டவணை 1). இது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட ரூ.5,700 பில்லியனுக்கு அண்மையில் உள்ளதுடன், அவர் குறிப்பிடுவதை விட சற்றுக் குறைவாகும்.
2020 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அரச கடனின் மொத்த நிலுவை ரூ.993 பில்லியனால் அதிகரித்துள்ளது. இது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் ரூ.1,000 மில்லியனுடன் ஒத்துப் போகின்றது.
முன்னைய ஐந்தாண்டு காலத்தின் சராசரி மாதாந்தக் கடனுடன் ஒப்பிடுகையில், 2020 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் சராசரி மாதாந்தக் கடன் 2.5 மடங்கினால் அதிகரித்துள்ளது என்பதே பாராளுமன்ற உறுப்பினர் முன்வைக்கும் முக்கியமான கூற்று. 2015 – 2019 காலப்பகுதியில் சராசரி மாதாந்தக் கடன் ரூ.92 பில்லியன் ஆகும். 2020 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் சராசரி மாதாந்தக் கடன் ரூ.248 பில்லியன் ஆகும். இது 2.69 மடங்கு அதிகரிப்பாகும், இது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவதை விட இன்னும் அதிகமாகும்.
ஆகவே, நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை “சரியானது” என வகைப்படுத்துகின்றோம்.
Additional Note
அரசாங்க கடனின் பெயரளவிலான ரூபாய் மதிப்பு காலப்போக்கில் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன, அனைத்திற்கும் அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகள் மற்றும் முடிவுகள் காரணங்களாக அமையாது. உதாரணமாக, அரசாங்கம் மேலதிக கடனைப் பெற்றுக்கொள்ளாத போதும், கடன் வாங்கிய நாணயத்திற்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தால் ரூபாயிலுள்ள கடன் தொகை அதிகரிக்கும். கடன் அதிகரிப்பினை மதிப்பிடும் போது, விளக்கங்களுக்கான விரிவான பகுப்பாய்விற்கு அப்போதைய எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் கூற்றினை மதிப்பிட்ட முன்னைய உண்மை சரிபார்ப்பினை பார்க்கவும். எனினும், இந்த விடயத்தில் கணக்கீடுகளில் அமெரிக்க டொலர்களுக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சியின் தாக்கம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. கடன் அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முன்வைக்கும் கூற்றின் துல்லியத்தை அது பாதிக்காது.
மூலம்
ஐக்கிய மக்கள் சக்தி ஊடக சந்திப்பு வீடியோ [37.30 தொடக்கம்), பார்வையிட: https://www.facebook.com/sjblanka/videos/1740344922771930/
இலங்கை மத்திய வங்கி, மாதாந்த செய்தித் திரட்டு மே 2020, அட்டவணை 31, பக்கம் 33, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/mbt/monthly_bulletin_may_202020.pdf
இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை 2019 புள்ளிவிபரப் பின்னிணைப்பு, அட்டவணை 110, பக்கம் 102, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2019/ta/15_Appendix.pdf
FactCheck.lk, ‘பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ கடன் அதிகரிப்பு மற்றும் அதற்கான காரணங்களை தவறாகக் கணிக்கின்றார்”, பார்வையிட: https://factcheck.lk/claim/mahinda-rajapaksa-4