கோட்டாபய ராஜபக்ஷ

இயலாமை தரவு தொடர்பில் ஜனாதிபதி தவறாகத் தெரிவித்துள்ளார்.

"

இலங்கையில் 20 சதவீதமான சிறுவர்கள் உள அல்லது உடல் ரீதியான இயலாமையைக் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கம் | ஜனவரி 25, 2020

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

இயலாமை தரவு தொடர்பில் ஜனாதிபதி தவறாகத் தெரிவித்துள்ளார்.

அயதி சிறுவர் பாதுகாப்பு நிலையத்தை ஆரம்பித்து வைத்த பின்னர் ட்விட்டரில் பதிவிடப்பட்ட ஜனாதிபதியின் கூற்றினை ஆராய்வதற்கு FactCheck தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மிக சமீபத்திய தகவலான குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு தரவுகளை ஆராய்ந்தது.

ஆறு பிரிவுகளில் குறைந்தது ஒரு உள அல்லது உடல் இடர்ப்பாடு அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாக்கம் செலுத்தினால் அது இயலாமை என பொதுவாக புரிந்துகொள்ளப்பட்ட வரையறையை குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு பயன்படுத்துகின்றது (அட்டவணை 1 பார்க்கவும்). 5 முதல் 14 வயது வரையான சிறுவர்களில் இந்த இடர்ப்பாடு 1.7 வீதமாகவும், 5 முதல் 19 வயது வரையான சிறுவர்களில் இது 1.8 வீதமாகவும் காணப்படுவது குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கணக்கெடுப்பு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இடர்ப்பாடுகளை மதிப்பிடவில்லை. பிற பகுதிகளில் இயலாமையை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் வேறு வழிமுறைகளைப் பின்பற்றினால் இலங்கையில் தற்போதுள்ள மதிப்பீட்டை விட அதிகமாகலாம்.   எனினும், அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற இந்த உத்தியோகபூர்வ மதிப்பீடு ஜனாதிபதி குறிப்பிடும் 20 சதவீதத்தை விட மிகவும் குறைவாகும்.

ஜனாதிபதியின் கூற்றுக்கு ஆதரவளிக்கக்கூடிய ஆதாரங்களை கண்டறிவதற்காக நாங்கள் பின்வரும் மூலங்களை ஆராய்ந்தோம்.

2016 ஆம் ஆண்டின் மக்கள் தொகை மற்றும் சுகாதார ஆய்வு – 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளில் 10 பிரிவுகளில் (அட்டவணை 1 பார்க்கவும்) குறைந்தது ஒன்றில் வயதுக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் பிரச்சினைகளை இயலாமையாக யுனிசெவ் வரையறுத்துள்ளது. அதிகம் அறியப்படாத இந்த புள்ளிவிபரத்தின் அடிப்படையில் மதிப்பிடுகையில் 22.8 சதவீதமான குழந்தைகள் இடர்ப்பாடுடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

அயதி இணையத்தளம் – ‘சுமார் 20 சதவீதமான சிறுவர்கள் ஏதோவொரு வகையிலான உள அல்லது உடல் இயலாமையைக் கொண்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கின்றது.

மக்கள் தொகை மற்றும் சுகாதார ஆய்வு மதிப்பீடு 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை மாத்திரமே கருத்தில் கொள்கின்றது. மேலும், கணக்கெடுப்பில் பயன்படுத்தப்படும் கேள்விகள் சில வகையான மருத்துவ குறைபாடுகளுக்கு அதிக ஆபத்துடைய குழந்தைகளை அடையாளம் காணும் வகையிலேயே உள்ளன. ஆனால் மருத்துவ குறைபாடுகளை கண்டறியும் வகையில் இல்லை.

இயலாமைக்கான பரந்த வரையறைகளைப் பயன்படுத்தி பிற பகுதிகளில் மதிப்பிடப்பட்ட தோராயமான வீதங்களின் அவதானிப்புக்களை அயதி இணையத்தளத்தில் உள்ள மதிப்பீடு பிரதிபலிக்கின்றது. எனினும், இலங்கையில் கிடைக்கக்கூடிய கணக்கெடுப்பு தரவுகள் அல்லது வெளியான ஆய்வு முடிவுகளை பயன்படுத்தி இலங்கைக்கான மதிப்பீடாக இந்த வீதத்தினை உறுதிப்படுத்த முடியாதுள்ளது.

குடிசன மற்றும் வீட்டுவசதி தொகைமதிப்பில் பயன்படுத்தப்படும் பொதுவாக புரிந்துகொள்ளப்பட்ட இயலாமை குறித்த வரையறையிலேயே ஜனாதிபதி இந்த புள்ளிவிபரங்களைத் தெரிவிக்கின்றார் என்பது அவர் பேச்சின் சூழல், அவர் குறிப்பிடும் சிறுவர்களின் வயது வரம்பு மற்றும் உள மற்றும் உடல் இயலாமையை அவர் நேரடியாக குறிப்பிடும் விதம் சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் அவர் மேற்கோள் காட்டும் சதவீதத்தை, 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களை மதிப்பீடு செய்யாத மக்கள் தொகை மற்றும் சுகாதார ஆய்வில் இருந்தோ அல்லது உறுதிப்படுத்தப்படாத மதிப்பீட்டை வெளியிட்டுள்ள அயதி இணையத்தளத்தில் இருந்தோ பெற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

அறிக்கையை வெளியிடுவதில் ஜனாதிபதி பொருத்தமற்ற ஆதாரங்களில் கவனக்குறைவாக தங்கியிருந்திருக்க வேண்டும். கிடைக்கும் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்தக் கூற்றானது தவறு. எனவே நாங்கள் இந்தக் கூற்றினை ‘தவறானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாக பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck மறுபரிசீலனை செய்யும்.

மேலதிக குறிப்பு:

இலங்கையில் இயலாமையை மதிப்பிடுவதற்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு பயன்படுத்தும் முறைகள் தொடர்பில் இலங்கையிலுள்ள சில கல்வியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளதாக FactCheck இற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு தரவுகளுக்கான மாற்று மூலங்கள் அல்லது தேசிய மதிப்பீடுகள் இல்லாத நிலையில் உத்தியோகபூர்வ தரவுகளின் துல்லியம் அல்லது பொருத்தம் குறித்து கருத்து தெரிவிப்பது இந்த கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு அப்பாற்பட்ட நோக்கமாகும்.



Additional Note



மூலம்

  • தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு (2012), பக்கம் 72, பார்வையிட: http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/Pages/Activities/Reports/FinalPopulation.pdf [last accessed: 26 February 2020]
  • தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், மக்கள் தொகை மற்றும் சுகாதார ஆய்வு (2016),  பக்கம் 146, 147,  பார்வையிட: http://www.statistics.gov.lk/social/DHS_2016a/Chapter10.pdf [last accessed: 26 February 2020]
  • அயதி நிலையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், ‘தற்போதைய நிலை’, பார்வையிட: https://www.ayati.lk/ [last accessed: 26 February 2020]