உண்மைச் சரிபார்ப்புகளும்
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அவரது அறிக்கையில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் திரட்டப்பட்ட நட்டத்திற்கு, விற்பனை விலையுடன் ஒப்பிடும் போது எண்ணெயின் கொள்வனவு விலை உயர்வாக இருப்பதே காரணம் எனக் குறிப்பிடுகிறார்.
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் நிதியமைச்சின் ஆண்டறிக்கைகளிலுள்ள தரவு மூலமான கணக்கீடுகள், 2020 ஆம் ஆண்டில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் திரட்டப்பட்ட நட்டம் ரூ.335 பில்லியன் எனச் சுட்டிக்காட்டுகின்றன. இந்த நட்டங்களுக்கான மூலத்தை அடையாளம் காண்பதற்கான கணக்கியல் தகவல்களையும் அவை வழங்குகின்றன.
2013 ஆம் ஆண்டு முதல் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒவ்வொரு ஆண்டும் மொத்த இலாபத்தைப் பதிவு செய்ததை நிதியமைச்சு பெறுமதிகள் காட்டுகின்றன. இதன் போது வரிகள் உள்ளடங்கலான விற்பனைச் செலவை விட வருமானம் அதிகமாக இருந்தது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). ஆகவே பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிக விலையில் கொள்வனவு செய்து குறைந்த விலையில் விற்பனை செய்வதாக அமைச்சர் குறிப்பிடுவது வெளியிடப்பட்ட கணக்குகளுக்கு முரணாக உள்ளது. விநியோகம், நிர்வாகம் மற்றும் தேய்மானம் ஆகிய செலவுகள் சேர்க்கப்பட்டாலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.29 பில்லியன் இலாபத்தைக் கொண்டிருக்கிறது.
குறித்த காலப்பகுதிக்கான பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் திரட்டப்பட்ட நட்டத்திற்கு நிதிச் செலவுகள் மற்றும் மீட்கப்படாத நிலுவைகளினால் ஏற்பட்ட பரிமாற்று வேறுபாடுகள், நிலுவைக் கடன்கள் மற்றும் ஐந்தொகையில் நாணயங்களின் பொருந்தாத தன்மை ஆகியவையே முக்கிய காரணங்கள் ஆகும். 2011 – 2020 காலப்பகுதியில் மொத்த நிதிச் செலவு மற்றும் பரிமாற்று வேறுபாட்டு இழப்புகள் ரூ.335 பில்லியன் ஆகும்.
கடந்த 10 ஆண்டுகளில் மொத்த திரட்டப்பட்ட நட்டமான ரூ.335 பில்லியன் மோசமான திறைசேரி நிர்வாகத்தினால் ஏற்பட்ட நட்டத்துடன் சரியாக இருப்பதை இந்தப் பகுப்பாய்வு காட்டுகிறது. குறித்த காலப்பகுதியில் பிற செலவுகள் அனைத்தையும் கணக்கில் எடுத்த பின்னரும் விற்பனை வருமானம் மூலம் ரூ.29 பில்லியன் இலாபத்தை இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திரட்டியுள்ளது. இது அமைச்சரின் கூற்றுடன் முரண்படுகிறது.
ஆகவே அவருடைய அறிக்கையை ‘தவறானது’ என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.
விற்பனைச் செலவு கணக்கீடு சுங்கத்தீர்வை மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) ஆகிய வரிச் செலவினங்களை உள்ளடக்கியுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள செலவினங்களைக் கழித்ததன் பின்னரே இலாபம்/நட்டம் கணக்கிடப்பட்டுள்ளது. ஆகவே ஆண்டறிக்கையில் வழங்கப்பட்டுள்ள பெறுமதியில் இருந்து சில சந்தர்ப்பங்களில் இந்தப் பெறுமதிகள் வேறுபடலாம்.
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த நிதி அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள இலாபம்/நட்டம் சில சந்தர்ப்பங்களில் நிதியமைச்சின் ஆண்டறிக்கைப் பெறுமதிகளுடன் வேறுபடலாம்.
மூலம்
நிதியமைச்சு, ஆண்டறிக்கைகள் (2011 – 2020), பார்வையிட: https://www.treasury.gov.lk/web/annual-reports#2020
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஆண்டறிக்கைகள் (2011 – 2018), பார்வையிட: http://ceypetco.gov.lk/annual-reports/
முழுமையான அறிக்கையைப் பார்ப்பதற்கு: https://www.facebook.com/100044544934777/videos/344874720313784