உண்மைச் சரிபார்ப்புகளும்
மார்ச் 31 ஆம் திகதி நிலவரப்படி மொத்தக் கடன் பெறுமதிகளை மேற்கோள் காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், அந்தப் பெறுமதிகளைப் பயன்படுத்தி செலவினம் மற்றும் கடன் சேவைக்கான செலவினங்களுடன் ஒப்பிடும்போது அரசாங்கம் பெறும் கடன்கள் “விபரிக்க முடியாத அளவுக்கு மிக அதிகமாக” உள்ளது (ஏன் இந்த அரசாங்கம் இத்தனை கடன்களைப் பெறுகின்றது என்பதே எங்கள் பிரச்சினை”) என்ற பரந்த வாதத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
எனவே இந்தப் பரந்த வாதத்தின் இரண்டு அம்சங்களை FactCheck.lk மதிப்பிடுகின்றது: (1) அவர் குறிப்பிட்ட கடன் தொடர்பான தரவுகள் சரியானவையா? (2) 2025 முதல் காலாண்டில் (Q1) செலவினம் மற்றும் கடன் சேவை தேவைப்பாடுகளுடன் ஒப்பிடுகையில் அரசாங்கம் பெறும் கடன்கள் ‘விபரிக்க முடியாத அளவுக்கு மிக அதிகமாக’ இருக்கின்றதா?
இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க, காலாண்டு கடன் திரட்டுக்கள், மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த காலாண்டுக்கான அரசாங்கத்தின் நிதி செயல்திறன் அறிக்கை ஆகியவற்றிலுள்ள தரவுகளை FactCheck.lk ஆராய்ந்தது. புதிய நிர்வாகத்தின் கீழான முதலாவது முழுமையான காலாண்டாக Q1 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கூற்று 1: தரவின் துல்லியத்தைப் பொறுத்தவரை, டிசம்பர் 2024 இறுதியில் மொத்தப் பொதுப் படுகடன் ஐ.அ.டொ 106,166 மில்லியன் என 2025 Q1 காலாண்டு கடன் திரட்டு பதிவுசெய்துள்ளது. இந்த டிசம்பர் மாத மொத்தக் கடன் தொகையைப் பாராளுமன்ற உறுப்பினர் மார்ச் 2025க்கான மொத்தக் கடனாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். எனினும் அரசாங்கக் கடன் ஐ.அ.டொ 102,671 மில்லியன் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் (SOE) கடன் ஐ.அ.டொ 4,831 மில்லியன் (இரண்டும் சேர்த்தால் ஐ.அ.டொ 107,519 மில்லியன்) என்று அவர் வழங்கும் விபரங்கள் மார்ச் 2025 இறுதியில் பதிவான மொத்தக் கடனுடன் பொருந்துகின்றது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).
கூற்று 2: பெறப்பட்ட கடன் விபரிக்க முடியாத அளவுக்கு மிக அதிகமாக உள்ளது என்ற பரந்த வாதத்தைச் சரிபார்க்க, 2025 Q1 இல் அரசாங்கம் உண்மையாகப் பெற்றுக்கொண்ட கடனை 2025 Q1க்கான மொத்த நிதி தேவைகளுடன் FactCheck.lkஒப்பிட்டது. மொத்த நிதித் தேவையை விட உண்மையில் பெறப்பட்ட கடன் அதிகமாக இருந்தால், செலவினம் மற்றும் கடன் சேவைக்கு உடனடியாகத் தேவையானதை விட அரசாங்கம் அதிகமாகக் கடன் வாங்கியுள்ளது எனக் கருதலாம்.
2025 Q1 இல், உண்மையாகப் பெற்றுக்கொண்ட கடன் ரூ.900 பில்லியனாக உள்ளது. இதில் உள்நாட்டுக் கடன் ரூ.690 பில்லியன் மற்றும் வெளிநாட்டுக் கடன் ரூ.210 பில்லியன் அடங்கும் (கணக்கீடுகளுக்கு மேலதிகக் குறிப்பு 1 ஐப் பார்க்கவும்). அதே காலப்பகுதியில், மொத்த நிதித் தேவை ரூ.498 பில்லியனாக உள்ளது (கணக்கீடுகளுக்கு அட்டவணை 2 ஐப் பார்க்கவும்).
இந்த அடிப்படையில், 2025 Q1 இல் உண்மையாகப் பெறப்பட்ட கடன், மொத்த நிதித் தேவையை விட ரூ.402 பில்லியனால் அதிகமாக உள்ளது. எனவே 2025 Q1 இல் செலவினம் மற்றும் கடன் சேவைக்கு உடனடியாகத் தேவையாகவுள்ள தொகையை விட அரசாங்கத்தின் கடன் மிக அதிகமாக உள்ளது.
எனினும், கூடுதலாகப் பெறப்பட்ட கடன் விபரிக்க முடியாத அளவுக்கு மிக அதிகமானதில்லை. அரசாங்கத்தின் பொதுப் படுகடன்களை மீள் நிதியளிப்பதற்கு அல்லது முன்நிதியளிக்கும் நோக்கங்களுக்காக அரசாங்கம் முன்கூட்டியே கடன் பெறுவதற்கும் இருப்புக்களை வைத்திருப்பதற்கும் 2018 ஆம் ஆண்டின் 8 ஆம் இல. தீவிரப் பொறுப்பு முகாமைச் சட்டத்தின் பிரிவு 3 அங்கீகாரம் வழங்குகின்றது. முந்தைய நிதியாண்டின் இறுதியில் கடனின் மொத்த நிலுவையில் 10% வரை அரசாங்கம் இருப்பாக வைத்திருப்பதற்கு சட்டத்தின் பிரிவு 3 அனுமதியளிக்கின்றது. 2024 டிசம்பர் இறுதியில் மத்திய அரசாங்கத்தின் கடனுடன் ஒப்பிடுகையில் முதல் காலாண்டில் கூடுதலாகக் கடனாகப் பெறப்பட்ட தொகை 1.4% மட்டுமே. இது அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் உள்ளது. எனவே உடனடி நிதித் தேவைகளை விட கடன் அதிகமாக இருந்தாலும், இது விபரிக்க முடியாத அளவிற்கு அதிகமாக இல்லை. ஏனெனில் இது அனுமதிக்கப்பட்ட முன்நிதியளிக்கும் கையிருப்புக்களின் வரம்புக்குள் உள்ளது.
மொத்தத்தில், கூற்று 1 இல் பாராளுமன்ற உறுப்பினர் மொத்தப் பொதுப் படுகடனுக்கான டிசம்பர் பெறுமதியை மார்ச் மாதத்திற்கான அரசாங்கம் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் கடன் விபரங்களுடன் ஒன்றாகச் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளார். கூற்று 2 ஐப் பொறுத்தவரை, 2025 Q1 இல் உண்மையாகப் பெற்றுக்கொண்ட கடன், உடனடி மொத்த நிதித் தேவைகளை விட அதிகமாக உள்ளபோதும், தீவிரப் பொறுப்பு முகாமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கையிருப்பு கடன்பெறுதல் வரம்பிற்குள் வருவதால், இது விபரிக்க முடியாத அளவுக்கு மிக அதிகமாக இல்லை.
எனவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகின்றோம்.
அட்டவணை 1: கடன் விபரங்கள்

மூலம்: காலாண்டு கடன் திரட்டு 2025 Q1
அட்டவணை 2: 2025 Q1 மொத்த நிதித் தேவைக்கான கணக்கீடு

மூலம்: மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த முதலாவது காலாண்டுக்கான அரசாங்கத்தின் நிதி செயல்திறன் அறிக்கை
மேலதிகக் குறிப்பு 1
2025 Q1 இல் உண்மையாகப் பெறப்பட்ட கடன் பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்பட்டுள்ளது,
உண்மையில் பெறப்பட்ட கடன் = Q1 2025 இறுதியில் மொத்தக் கடன் – Q1 2025க்கான நாணயமாற்று விகிதம் சரிசெய்யப்பட்ட ஆரம்பக் கடன் + Q1 2025 இல் மூலதனக் கடன் கொடுப்பனவுகள்

- உள்நாட்டுக் கடனில் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் அடங்குகின்றன.
- 2025 டிசம்பர் 31 ஆம் திகதி, 1 ஐ.அ.டொலரின் மாற்று விகிதம் ரூ.5833.
- 2025 மார்ச் 28 ஆம் திகதி, 1 ஐ.அ.டொலரின் மாற்று விகிதம் ரூ.3472.
- மத்திய அரசாங்கத்தின் கடனுக்கான கடன் மீள்கொடுப்பனவு.
- 2025 Q1 இல் உண்மையில் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்கள் ஐ.அடொ 710 மில்லியன். இது 2025 மார்ச் 28 ஆம் திகதி, 1 ஐ.அ.டொலரின் மாற்று விகிதம் ரூ.3472 என்பதைப் பயன்படுத்தி ரூ.பில்லியனுக்கு மாற்றப்பட்டது.
மூலம்
நிதி அமைச்சு, காலாண்டு கடன் திரட்டு 2025 Q1.
https://www.treasury.gov.lk/api/file/b1b863d2-0919-4218-9bc9-0c79a2cfc4ff
நிதி அமைச்சு, மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த முதலாவது காலாண்டுக்கான அரசாங்கத்தின் நிதி செயல்திறன் அறிக்கை.
https://www.treasury.gov.lk/api/file/d26ffb14-ab4a-4580-90b7-75f670578f93
2018 ஆம் ஆண்டின் 8 ஆம் இல. தீவிரப் பொறுப்பு முகாமைச் சட்டம்