சுனந்த மத்தும பண்டார

வேலையின்மை புள்ளிவிபரங்களை ஜனாதிபதி ஆலோசகர் தவறாகக் குறிப்பிடுகிறார்

"

2020 ஆம் ஆண்டில் நாட்டின் வேலையின்மை விகிதம் 5.5 சதவீதமாக அதிகரித்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை எதிர்கொண்ட மிக உயர்ந்த வேலையின்மை விகிதம் இதுவாகும். 2023 ஆம் ஆண்டில் இந்தப் பெறுமதியை 4.7 சதவீதமாகக் குறைப்பதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளது.

லங்காதீப | மே 8, 2024

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

2020 ஆம் ஆண்டில் 5.5 சதவீதமாக (2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக உயர்ந்த விகிதம்) காணப்பட்ட இலங்கையின் வேலையின்மை விகிதம் 2023 ஆம் ஆண்டில் 4.7 சதவீதமாகக் குறைந்துள்ளது எனவும் அரசாங்கக் கொள்கையின் வெற்றியே இதற்குக் காரணம் எனவும் ஜனாதிபதி ஆலோசகர் சுனந்த மத்தும பண்டார குறிப்பிடுகிறார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கியின் 2023 வருடாந்தப் பொருளாதார மீளாய்வை FactCheck.lk ஆராய்ந்தது.

அவர் குறிப்பிடும் பெறுமதிகள் வேலையின்மை புள்ளிவிபரங்களுடன் பொருந்துகின்றன:  2020 ஆம் ஆண்டில் பதிவான 5.5% என்பது 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான மிக உயர்ந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆகும். மேலும் 2023 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.7% எனப் பதிவாகியுள்ளது. எனினும் நேர்மறை அல்லது எதிர்மறை முன்னேற்றங்கள் காரணமாக வேலையின்மை விகிதம் வீழ்ச்சியடையலாம்.

வேலையின்மை என்பது முந்தைய நான்கு வாரங்களில் வேலை தேடி அது கிடைக்காதவர்களின் எண்ணிக்கையைச் சதவீதமாக அளவிடுகிறது. வேலை தேடாதவர்கள் “வேலையற்றவர்கள்” எனக் குறிப்பிடப்படாமல் “பொருளாதார ரீதியாக செயலற்றவர்கள்” என வகைப்படுத்தப்படுகிறார்கள். எனவே வேலையின்மை என்பது இரண்டு வழிகளில் குறையலாம்: (1) வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பது (நேர்மறை), அல்லது (2) வேலையில் இல்லாதவர்கள் வேலை கிடைக்காததால் சோர்வடைவதுடன் முந்தைய நான்கு வாரங்களில் வேலை தேடுவதை நிறுத்துவது – அதாவது அவர்கள் பொருளாதார ரீதியாக செயலற்றவர்களாக மாறுவது (எதிர்மறை).

2020 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டில் வேலையற்றவர்களின் எண்ணிக்கை 70,000 ஆல் குறைந்துள்ளதை அட்டவணை 1 காட்டுகிறது. எனினும் அதே காலப்பகுதியில் வேலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 11,000 மட்டுமே அதிகரித்துள்ளது. அத்துடன் பொருளாதார ரீதியில் செயலற்ற உழைக்கும் வயதிலுள்ள சனத்தொகை 625,000 ஆல் அதிகரித்தது. இந்த நிலை கடந்த ஆண்டு மேலும் மோசமடைந்தது (2022 – 2023): வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 1,000 ஆல் மட்டுமே குறைவடைந்தது, வேலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 138,000 ஆல் குறைவடைந்தது (அதிகரிக்கவில்லை). மக்கள் பொருளாதார ரீதியாக செயலற்றவர்களாக மாறுவதன் (வேலை தேடுவதற்குப் பதிலாக) காரணமாக வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவடைவதுடன், உழைக்கும் வயதிலுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் வேலையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதைக் கடந்த ஆண்டுக்கான பெறுமதிகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஒட்டுமொத்தமாக, ஜனாதிபதி ஆலோசகர் சரியான வேலையின்மை விகிதத்தை மேற்கோள் காட்டுகிறார். எனினும் அவர் எதிர்மறை விளைவை நேர்மறை விளைவு எனத் தவறாக விளக்குகிறார். வேலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் அன்றி, மக்கள் பொருளாதார ரீதியாக செயலற்று இருப்பதால் (வேலை தேடுவதில்லை) வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது.

ஆகவே அவரது கூற்றை நாங்கள் பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.

அட்டவணை 1: தொழிற்படையின் மாற்றங்கள்               

பெறுமதிகள் ‘000மூலம்

வருடாந்திர பொருளாதார மீளாய்வு 2023, இலங்கை மத்திய வங்கி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன