சாந்த பண்டார

வரிக்கான மன்னிப்பு என்பது பண மோசடிக்கான மன்னிப்பு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பண்டார சரியாகக் குறிப்பிடுகிறார்

"

”…. [2021 ஆம் ஆண்டின் 18 ஆம் இல. நிதிச் சட்டம்] நாட்டிலுள்ள பணம் தூய்தாக்கல் தடைச் சட்டம் அல்லது வேறு எந்த நிதிச் சட்டத்தையும் செல்லுபடியற்றதாக்க முடியாது என்ற உண்மை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.”

திவயின | செப்டம்பர் 10, 2021

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

வெளிப்படுத்தப்படாத வரி விதிக்கப்படக்கூடிய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் தாமாக முன்வந்து வெளிப்படுத்துபவர்களுக்கு மன்னிப்பை வழங்கும், புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள நிதிச் சட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். பணம் தூய்தாக்கல் தடைச் சட்டம் மற்றும் பண மோசடிக்கு எதிரான பிற சட்டங்களின் செயல்பாட்டை நிதிச் சட்டம் ‘செல்லுபடியற்றதாக்கும்’ மற்றும் நிதிச் சட்டம் பண மோசடிக்கு உதவும் என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.

நிதிச் சட்டத்தின் பொருத்தமான விதிகளை மதிப்பிடுவதன் மூலம் FactCheck.lk இந்தக் கூற்றை ஆராய்ந்தது.

வரி விதிக்கப்படக்கூடிய வருமானம் மற்றும் சொத்துக்கள் குறித்து தன்னிச்சையாக வெளிப்படுத்துபவர்களுக்கு நிதிச் சட்டத்தின் பிரிவு 1 நன்மைகளை (வரி அபராதம், வெளிப்படுத்துவதில் இரகசியத்தன்மை போன்ற பாதுகாப்பு) வழங்குகிறது. 1979, 2000, 2006 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளின் உள்நாட்டு இறைவரிச் சட்டங்கள் மற்றும் பெறுமதி சேர் வரிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் மார்ச் 31, 2020க்கு முன்னதாக இதுவரை வெளிப்படுத்தப்படாத வரி வருமானம் மற்றும் சொத்துக்கள் குறித்த விபரங்களைப் பிரகடனப்படுத்த வேண்டும்.

எனினும், நிதிச் சட்டத்தின் பிரிவு 2(2) பின்வரும் நபர்களுக்கு அவ்வாறான நன்மைகளிலிருந்து விலக்களிக்கிறது. கீழ்வரும் சட்டங்களின் கீழ் வெளிப்படுத்தப்படாத வரி வருமானம் அல்லது சொத்துக்கள் தொடர்பில் 1) விசாரிக்கப்படுபவர்கள் 2) நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருப்பவர்கள் 3) குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள்.

  1. பணம் தூய்தாக்கல் தடைச் சட்டம்
  2. பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாயச் சட்டம்
  3. இலஞ்சச் சட்டம்
  4. போதையூட்டும் ஓளடதங்களினதும் உளமருட்சி ஏற்படுத்தும் பதார்த்தங்களினதும் சட்டத்திற்கு முரணான வியாபாரத்திற்கு எதிரான சமவாயங்கள் சட்டம்

நிதிச் சட்டத்தின் கீழ் வெளிப்படுத்துபவர்களின் இரகசியம் காக்கப்படும் என அந்தச் சட்டத்தின் பிரிவு 7(1) குறிப்பிடுகிறது. எனினும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மாத்திரமே அவ்வாறு இரகசியத்தைப் பேண வேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ் வரி விபரங்களை நபரொருவர் வெளிப்படுத்தியிருந்து, மேலே குறிப்பிட்டுள்ள நான்கு சட்டங்களின் கீழ் குற்றம் இழைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டால் சட்ட அமுலாக்க அதிகாரிகள் வேறு வழிகளில் விசாரணைகளை முன்னெடுப்பதுடன் அதை வெளிப்படுத்துவது தடை செய்யப்படவில்லை. எந்தச் சந்தர்ப்பத்திலும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தம்வசம் வைத்திருக்கும் குறிப்பிட்ட தகவல்களை வெளியிடும்படி உத்தரவிடுவதற்குச் சட்ட அமலாக்க அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகள்/ஆணைகளைப் பெறுவதை நிதிச் சட்டம் தடை செய்யவில்லை.

பணம் தூய்தாக்கல் தடைச் சட்டம் மற்றும் நிதிக் குற்றங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள சட்டங்களின் செயல்பாட்டை நிதிச் சட்டத்தின் தெளிவான உரை செல்லுபடியற்றதாகவோ, ரத்தோ செய்யவில்லை. பண மோசடி மற்றும் தொடர்பான குற்றங்களுக்குச் சட்ட அமலாக்க அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் அதற்கான பொறுப்பை உறுதிப்படுத்த பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதையும் நிதிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வெளிப்படுத்துகை இரகசியத்தன்மை தடுக்காது.

ஆகவே பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை ‘உண்மையானது’ என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

 

 

 

 

 

 

 மூலம்

2021ம் ஆண்டு 18ம் இலக்க நிதிச் சட்டம். பார்வையிட:  

http://www.ird.gov.lk/en/publications/Acts_Other%20Levies%20%20Taxes/Finance_Act_No_18_2021_E.pdf [இறுதியாகப் பார்வையிட்ட திகதி 20 அக்டோபர் 2021]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது