அனுப பஸ்குவல்

மாணவர்கள் “இலக்கின்றி அலைவது” குறித்து பாராளுமன்ற உறுப்பினர் பஸ்குவல் தவறாகக் குறிப்பிடுகிறார்

"

இந்த 400,000 மாணவர்களில் (தரம் 1 இல் நுழைபவர்கள்) 40,000 மாணவர்களுக்கு மட்டுமே பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகின்றது. 90 சதவீதமானவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதில்லை, அத்துடன் அவர்கள் இலக்கின்றி அலைய விடப்படுகின்றார்கள்.

இலங்கைப் பாராளுமன்ற யூடியூப் பக்கம் | நவம்பர் 25, 2023

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினர் பஸ்குவல் அவரது உரையில் சிறிய எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே (10%) பல்கலைக்கழகத்திற்குச் செல்ல வாய்ப்பு கிடைப்பதாகவும், ஏனையவர்கள் பாடசாலையைக் கல்வியை முடித்த பின்னர் “இலக்கின்றி அலைய விடப்படுவதாகவும்” தெரிவித்துள்ளார். அதிக அரச பல்கலைக்கழகங்கள் தேவை என்பதே பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றின் நோக்கமாக உள்ளதென FactCheck.lk விளங்கிக்கொள்கிறது.

அவர் குறிப்பிட்ட புள்ளிவிபரங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தனது கூற்றுக்கு ஆதரவாக முன்வைத்த வாதம் ஆகியவை தொடர்பில் மட்டுமே இந்த உண்மைச் சரிபார்ப்பு கவனம் செலுத்துகிறது. அவரது கூற்றுக்கு ஆதரவான வேறு வாதங்கள் இருக்கலாம், அவை மதிப்பீடு செய்யப்படவில்லை.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இலங்கையின் வருடாந்த பாடசாலைக் கணக்கெடுப்பு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவரால் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் மற்றும் UNESCO புள்ளிவிபர நிலையம் ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறாத மாணவர்கள் “இலக்கின்றி அலைய விடப்படுகிறார்கள்” என்ற பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று மூன்று காரணங்களுக்காகத் தவறானது:

 

  1. அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறும் மாணவர்களின் சதவீதத்தைக் குறைத்துக் குறிப்பிடுகிறது.
  2. அரச சார்பற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையைப் புறக்கணிக்கிறது.
  3. பல்கலைக்கழகங்கள் தவிர்ந்த உயர்கல்வி கற்கை நிலையங்களில் கல்வியைத் தொடரும் மாணவர்களின் எண்ணிக்கையைப் புறக்கணிக்கிறது.

முதலாவதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரகாரம் 2021 ஆம் ஆண்டில் 43,927 மாணவர்கள் அரச பல்கலைக்கழங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பெறுமதியானது 13 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2008 ஆம் ஆண்டில் தரம் 1 இல் இணைந்த 330,488 மாணவர்களின் சுமார் 13% ஆகும். இது பாராளுமன்ற உறுப்பினர் பஸ்குவல் குறிப்பிடும் 10% என்னும் பெறுமதியை விட அதிகமாகும்.

இரண்டாவதாக, பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகளைத் தொடரும் மாணவர்களின் எண்ணிக்கையை அரசாங்கத்தால் வழங்கப்படும் பல்கலைக்கழக கல்வியுடன் பாராளுமன்ற உறுப்பினர் மட்டுப்படுத்துகிறார். உள்ளுர் அல்லது வெளிநாட்டு இணைந்த பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்புகளை வழங்கும் அரச சாராத கற்கை நிலையங்களில் சுமார் 25,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என 2021 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. மேலதிகமாக 29,000 மாணவர்கள் வெளிநாடுகளில் பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்வதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. மொத்தச் சேர்க்கையில் வருடாந்த அனுமதிகள் நான்கில் ஒரு பங்கு என அனுமானித்தால், வருடாந்தம் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் சதவீதம் மேலும் நான்கு சதவீதப் புள்ளிகளால் அதிகரிக்கிறது.

மூன்றாவதாக, பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர் உயர்கல்வியாகக் குறிப்பிடுகிறார். உயர்கல்வி என்பது அரசு மற்றும் அரசு சாராத பல்கலைக்கழகங்கள், டிப்ளோமாக்கள், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றால் வழங்கப்படும் பட்டப்படிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த ஒன்றாகும். 2021 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கையின் பிரகாரம், சுமார் 16,000 மாணவர்கள் அரசு மற்றும் அரசு சாராத கற்கை நிலையங்களில் டிப்ளோமாக்களில் இணைந்துள்ளனர். மேலும் பல்வேறு தொழில் கல்விகளுக்குப் பயிற்சி வழங்கும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கல்லூரிகளில் 35,700 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இந்த டிப்ளோமா மற்றும் தொழிற்கல்வி திட்டங்களின் சராசரி காலப்பகுதி இரண்டு ஆண்டுகள் என அனுமானித்தால், உயர்/மேலதிக கல்வித் திட்டங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் பங்கு மேலும் 8 சதவீதப் புள்ளிகளால் அதிகரிக்கிறது. வங்கி மற்றும் கணக்கியல் போன்ற தொழில்சார் கல்வித் திட்டங்களில் சேரும் மாணவர்கள் இந்தக் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

பாடசாலைக்குச் சேரும் மாணவர்களில் 90 சதவீதமானவர்கள் பாடசாலைக் கல்வி முடியும் வயதுக்குப் பின்னர் (உயர்கல்விக்கான வாய்ப்புகள் இன்றி) “இலக்கின்றி அலையவிடப்படுவதாக” பாராளுமன்ற உறுப்பினர் தனது கூற்றினை ஆதரித்துக் குறிப்பிடுகிறார். எனினும், அந்த வயதிலுள்ளவர்களில் 25 சதவீதமானவர்கள் (13+4+8) உயர் கல்வி நிலையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர் என்பதைக் கிடைக்கும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இதன் மூலம் உயர்கல்விக்கான வாய்ப்புக் கிடைக்காதவர்களின் எண்ணிக்கையை அவர் 90% என மிகைப்படுத்தி மதிப்பிடுகிறார்.

ஆகவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கையை தவறானது என வகைப்படுத்துகிறோம்.

 

மேலதிகக் குறிப்பு

2022 ஆம் ஆண்டு வரை, இலங்கையில் பொது மற்றும் தனியார் பல்கலைக்கழங்களில் மொத்த சேர்க்கை விகிதம் 23% என UNESCO புள்ளிவிபர நிலையம் குறிப்பிடுகிறது. அதே அறிக்கையின் பிரகாரம், பிராந்திய நட்பு நாடுகளான இந்தியா (40%), மலேசியா (40%), தாய்லாந்து (49%) ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இந்தப் பெறுமதி குறைவாக உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மொத்த சேர்க்கை விகிதம் என்பது, வயதைக் கருத்தில் கொள்ளாமல், மூன்றாம் நிலைக்கல்வியை உத்தியோகபூர்வமாகப் பெற விரும்பும் வயதுக் குழுவிலுள்ள சனத்தொகையில் மொத்த சேர்க்கை விகிதமாகும். இதில் தனியார் மற்றும் பொது கற்கை நிலையங்கள் ஆகிய இரண்டிலும் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் அடங்குவர்.மூலம்

இலங்கை கல்வி அமைச்சு, இலங்கை வருடாந்த பாடசாலைக் கணக்கெடுப்பு 2021, https://moe.gov.lk/wp-content/uploads/2023/02/School_Census-2021_Summary-Tables-Final-Report1.pdf இணைப்பின் வழியாகப் பெறப்பட்டது

UNESCO புள்ளிவிபரங்கள் நிலையம், http://data.uis.unesco.org/# இணைப்பின் வழியாகப் பெறப்பட்டது

இலங்கை பல்கலைக்கழங்கள் மானியங்கள் ஆணைக்குழு, இலங்கை பல்கலைக்கழக புள்ளிவிபரங்கள் 2022, அத்தியாயம் 2 பல்கலைக்கழக அனுமதிகள், https://www.ugc.ac.lk/downloads/statistics/stat_2022/Chapter%202.pdf இணைப்பின் வழியாகப் பெறப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன