உண்மைச் சரிபார்ப்புகளும்
இலங்கை அதன் மொத்த நிலப்பரப்பில் தொழில்துறைகளுக்கு 0.01 சதவீதத்தை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இது இலங்கையில் தொழில்துறைக்கான நில ஒதுக்கீடு சர்வதேசத் தரங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு என்பதைக் குறிக்கின்றது (மேலதிகக் குறிப்பைப் பார்க்கவும்).
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, முதலீட்டுச் சபை, வர்த்தக அபிவிருத்திச் சபை, நாடுகளின் மொத்த நிலப்பரப்பு தொடர்பான உலக வங்கி தரவு மற்றும் ஏனைய நாடுகளில் வலயங்களுக்கான காணி ஒதுக்கீடு தொடர்பான மூலங்கள் ஆகியவற்றை FactCheck.lkஆராய்ந்தது.
நாடுகளுக்கு இடையே மொத்த தொழில்துறை நிலப்பரப்பை நேரடியாக ஒப்பிடக்கூடிய தேசிய அல்லது சர்வதேசத் தரவுத்தொகுப்பு எதையும் FactCheck.lk ஆல் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு மாற்றாக, இலங்கை மற்றும் ஒப்பிடப்படும் நாடுகளின் தொழில்துறை நிலங்களை மதிப்பிடுவதற்கு கைத்தொழில் வலயங்களாக (ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் மற்றும் கைத்தொழில் பூங்காக்கள்) நியமிக்கப்பட்டுள்ள நிலங்களை FactCheck.lk பயன்படுத்தியது.
இலங்கையின் மொத்த நிலப்பரப்பு சுமார் 15,285,915 ஏக்கர் ஆகும். 0.01% மட்டும் கைத்தொழில் துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்தால் அது 1,528 ஏக்கராக இருக்கும். எனினும் ஏற்றுமதி செயலாக்க வலயத்திற்காக மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலம் 5,076 ஏக்கர் ஆகும். இது மொத்த நிலப்பரப்பின் 0.03% ஆகும். இது இந்த வலயங்களுக்கு வெளியேயுள்ள கைத்தொழில் நிலங்களை உள்ளடக்கவில்லை என்றாலும், செயலாளர் குறிப்பிடும் பெறுமதியை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
இலங்கையின் தொழில்துறை நிலம் தொடர்பில் செயலாளர் குறைத்து மதிப்பிட்டாலும், வியட்னாம் மற்றும் தாய்லாந்து போன்ற அதிக செயல்திறன் கொண்ட பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் தொழில்துறை பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கின்றது என்ற அவரது கருத்து சரியாக உள்ளது.
வியட்னாமில் தொழில்துறை வலயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தின் பங்கு 0.30% (இலங்கையை விட பத்து மடங்கு அதிகம்), தாய்லாந்தில் 1.27% (இலங்கையை விட நாற்பது மடங்கு அதிகம்) ஆகும்.
செயலாளர் குறிப்பிடும் 0.01% என்பது தவறாக இருந்தாலும், விரிவடைந்துவரும் தொழில்துறை பொருளாதாரத்திற்கு தேவைப்படும் அளவிற்கு இலங்கையின் தொழில்துறை நில ஒதுக்கீடு மிகக்குறைவாக உள்ளது என்ற விளக்கத்தை இந்த ஒப்பீடு ஆதரிக்கின்றது.
எனவே நாங்கள் செயலாளரின் கூற்றை பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகின்றோம்.
மேலதிகக் குறிப்பு: ஒரு நாட்டின் மொத்த நிலப்பர்பில் 3% தொழில்துறைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற “சர்வதேச கருத்தை” செயலாளர் குறிப்பிடுகின்றார். எனினும் அவ்வாறான அளவுகோலைக் குறிப்பிடும் உத்தியோகபூர்வ அல்லது உறுதிப்படுத்தக்கூடிய மூலம் எதனையும் FactCheck.lk ஆல் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக, இந்தக் கூற்றின் உறுதிப்படுத்தக்கூடிய விடயமான, இலங்கை அதன் நிலப்பரப்பில் தொழில்துறைக்காக 0.01 சதவீதத்தை மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளது என்பதில் மட்டும் இந்த மதிப்பீடு கவனம் செலுத்துகின்றது. “சர்வதேச கருத்து” என்பதற்கான அடிப்படை தொடர்பில் செயலாளரிடம் விளக்கம் கேட்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோதும், எந்தவித பதிலும் கிடைக்காததால் அது வெற்றியளிக்கவில்லை.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனதுமுடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: நாட்டின் மொத்த நிலப்பரப்பில் கைத்தொழில் வலயங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலத்தின் சதவீதம்

மூலம்
Ministry of Industrial Development Board
Total Land Areas of Countries, World Bank