ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பெறுமதிகளை மொத்த ஏற்றுமதி என அமைச்சர் குணவர்தன தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்

"

உள்நாட்டிலும் உலகளவிலும் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்ட நிலையிலும் இலங்கை ஏற்றுமதிகளை 23 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. மொத்த ஏற்றுமதிகள் 2020 ஆம் ஆண்டில் ஐ.அ.டொலர் 12.3 பில்லியன் மற்றும் 2021 ஆம் ஆண்டில் ஐ.அ.டொலர் 15.12 பில்லியன் ஆகும்.

பந்துல குணவர்தனவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம் | ஜனவரி 28, 2022

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

அமைச்சர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில் 1) 2020 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி ஐ.அ.டொலர் 12.3 பில்லியன் மற்றும் 2021 ஆம் ஆண்டில் ஐ.அ.டொலர் 15.12 பில்லியன் எனக் குறிப்பிட்டுள்ளதுடன், 2) மொத்த ஏற்றுமதிகள் அதிகரித்துச் செல்லும் போக்கில் காணப்படுவதுடன் 2021 ஆம் ஆண்டில் மேலும் 23 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என வரைபடத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அறிக்கையை மதிப்பிடுவதற்கு இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் ஏற்றுமதிப் புள்ளிவிபரங்களை FactCheck.lk ஆராய்ந்தது.

ஏற்றுமதி என்னும் பதம் பொருட்களின் ஏற்றுமதியை மட்டும் குறிப்பிடவோ பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியைக் குறிப்பிடவோ பயன்படுத்தப்படுகிறது. அமைச்சர் குறிப்பிடும் பெறுமதி பொருட்களின் ஏற்றுமதியை விட அதிகமாக இருக்கிறது. எனவே அவர் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியைக் குறிப்பிடுகிறார் எனக் கருதப்படுகிறது.

அமைச்சரின் முதலாவது கருத்தைப் பொறுத்தவரையில், அவர் குறிப்பிடும் ஐ.அ.டொலர் 12.3 பில்லியன் மற்றும் ஐ.அ.டொலர் 15.12 பில்லியன் என்பது ஏற்றுமதி அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள பெறுமதிகள் ஆகும். எனினும், இந்தப் பெறுமதிகள் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த ஏற்றுமதியைக் குறிப்பிடவில்லை. ஏனெனில் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியில் பயணச் சேவைகளுக்கான பிரிவை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை உள்ளடக்குவதில்லை. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான முழுமையான பெறுமதியையும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள பகுதியளவான பெறுமதியையும் அட்டவணை 1 காட்டுகிறது.

இரண்டாவது கருத்தைப் பொறுத்தவரையில், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை குறிப்பிடும் பெறுமதியில் இலங்கை 23% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. எனினும் பயணச் சேவைகள் இதில் உள்ளடக்கப்படுவதில்லை என்பதால் இது பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த ஏற்றுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பு இல்லை. மேலும் வரைபடத்தில் காட்டப்படும் 2020 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்து 2020 ஆம் ஆண்டு வரை ஏற்றுமதிகளில் காணப்படும் அதிகரிக்கும் போக்கும் தவறானது. ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள பகுதியளவான மற்றும் முழுமையான ஏற்றுமதிப் பெறுமதிகள் ஆகிய இரண்டும் 2020ல் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. வரைபடத்தில் காட்டப்படுவது போன்று அதிகரிக்கும் போக்கில் இல்லை. (குறிப்பு: ஏற்றுமதி அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான பெறுமதிகளும் 2019 ஆம் ஆண்டை விடக் குறைவாகும்).

அமைச்சர் (அ) ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியின் பகுதியளவு கணக்கீட்டைச் சரியாகக் குறிப்பிடுகிறார். (ஆ) 2021ல் அந்தப் பெறுமதிகளில் ஏற்பட்ட அதிகரிப்பின் சதவீதத்தையும் சரியாகக் கணக்கிட்டுள்ளார். எனினும் (இ) இந்தப் பெறுமதிகள் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த ஏற்றுமதியைக் குறிப்பிடுவதாகத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார். (ஈ) உண்மையில் வீழ்ச்சிப் போக்கில் காணப்படும் ஏற்றுமதிகள் தொடர்ந்து அதிகரிக்கும் போக்கில் உள்ளதாகத் தவறாகச் சித்தரித்துள்ளார்.

ஆகவே அவரது கூற்றை நாங்கள் ‘பகுதியளவில் சரியானது’ என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

ஏற்றுமதி அபிவிருத்தி வங்கி, ஏற்றுமதி செயலாற்றுகைக் குறிகாட்டிகள் 2020, பார்வையிட: https://www.srilankabusiness.com/ebooks/export-performance-indicators-of-sri-lanka-2011-2020.pdf [இறுதியாக அணுகியது ஜனவரி 31 2022]

ஏற்றுமதி அபிவிருத்தி வங்கி, இலங்கையின் ஏற்றுமதி செயலாற்றுகை 2021, பார்வையிட: https://www.srilankabusiness.com/news/sri-lankas-export-performance-for-year-2021.html

இலங்கை மத்திய வங்கி, வெளிநாட்டுத் துறை புள்ளிவிபரங்கள், பார்வையிட: https://www.cbsl.gov.lk/en/statistics/statistical-tables/external-sector  [இறுதியாக அணுகியது ஜனவரி 31 2022]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன