அநுர குமார திஸாநாயக்க

எரிவாயு பைப்லைன் ஒப்பந்தம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் திசாநாயக்கவின் எதிர்ப்பு சரியானது

"

…பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சர் என்ற வகையில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்ப்பித்து டெண்டர் செயல்முறையில் இடம்பெற்றிருக்காத அமெரிக்க நிறுவனத்திற்கு (நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி) இந்தக் கட்டுமானத்தை (யுகதனவி மின்நிலையத்தை LNG நிலையமாக மாற்றுவதற்கு) கையளித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கம் | செப்டம்பர் 19, 2021

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினர் அவரது அறிக்கையில், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைய அரசாங்கத்திற்கும் நியூ ஃபோர்ட்ரெஸ் எனர்ஜி (New Fortress Energy – NFE) நிறுவனத்திற்கும் இடையிலான தற்காலிக ஒப்பந்தத்தினால் நடப்பு டெண்டர் செயல்முறையின் ஒரு பகுதியான பொருளாதார உரிமைகள் அந்த நிறுவனத்திற்குக் கிடைத்தன எனக் குறிப்பிடுகிறார். இந்த டெண்டரின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது. மிதக்கும் மீள்வாயுவாக்க சேமிப்பு அலகு (Floating Storage Regasification Unit – FSRU) மற்றும் இலங்கையில் ஏற்கெனவேயுள்ள இரண்டு மின் நிலையங்களுக்கு இயற்கை எரிவாயுவை விநியோகிப்பதற்கான பைப்லைன்களை உருவாக்குவதற்காக டெண்டர் கோரப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை ஆராய்வதற்கு எரிசக்தி அமைச்சினால் பெப்ரவரி 18, 2021 வெளியிடப்பட்ட இல. B/12/2021 டெண்டர் முன்மொழிவுகளுக்கான அழைப்பு, நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட செப்டெம்பர் 6, 2021 திகதியிடப்பட்ட MF/PED/11/CM/2021/164 அமைச்சரவைப் பத்திரம் மற்றும் கிடைக்கும் பிற ஆவணங்கள் (யூலை 6, 2021 திகதியிடப்பட்ட MF/10/11/CM/2021/128 அமைச்சரவைப் பத்திரம்) ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

அமைச்சரவைப் பத்திரம் வெஸ்ட் கோஸ்ட் பவர் (பிரைவட்) லிமிடெட் பங்குகளில் முதலீடு செய்வது தொடர்பானது. இது கூடுதலாக ஒப்பந்தம் தொடர்பான விபரங்களையும் குறிப்பிடுகிறது. இது FSRU மற்றும் இல. B/12/2021 டெண்டர் அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு மின் நிலையங்களில் ஒன்றுக்கு இயற்கை எரிவாயுவை விநியோகிப்பதற்கான பைப்லைன்களை நிர்மாணிக்கவும் NFEக்கு அனுமதியளிக்கிறது. இல. B/12/2021 டெண்டர் அழைப்புக்கான ஏலம் ஏற்கெனவே யூன் 18, 2021 முடிவடைந்துவிட்டது. இதற்கு NFE ஏலப் பத்திரத்தைச் சமர்ப்பிக்கவில்லை.

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களும் நடப்பிலுள்ள டெண்டர் செயல்முறையையே குறிப்பிடுகின்றன. உதாரணமாக, செப்டெம்பர் 6 திகதியிடப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் பத்தி 6.1.1, ”… FSRU மற்றும் பைப்லைன்களுக்கான அறிவிக்கப்பட்ட நிலையான கட்டணத்தை ஏற்கெனவேயுள்ள டெண்டரில் இருந்து கணக்கில் எடுத்துக்கொண்டால்” எனக் குறிப்பிடுகிறது. ‘ஏற்கெனவேயுள்ள டெண்டர்’ என்பதற்கான இந்தக் குறிப்புகள் டென்டர் அறிவிப்பு (இல. B/12/2021) மற்றும் NFE உடனான தற்காலிக ஒப்பந்தத்திற்கு இடையிலான முரண்பாடுகளைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. நடப்பிலுள்ள டெண்டர் செயல்முறையிலுள்ள முரண் குறித்து நிதியமைச்சுக்கும் தெரிந்துள்ளது என்பதை இந்தக் குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

NFE பங்கேற்காத நடப்பிலுள்ள வேறொரு டெண்டர் செயல்முறையின் (சர்ச்சைக்குரியதாக இருந்தாலும்) பகுதியான பொருளாதார உரிமைகள் போட்டித்தன்மையற்ற ஒப்பந்தம் மூலம் NFEக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை மேல் குறிப்பிட்டவை உறுதிப்படுத்துகின்றன.

ஆகவே பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை ‘சரியானது’ என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.மூலம்

நிதியமைச்சு, யூலை 6, 2021 திகதியிடப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் இல. MF/10/11/CM/2021/128, மின்சார உற்பத்தி மீதான செலவைக் குறைப்பதற்காக வெஸ்ட் கோஸ்ட் பவர் (பிரைவட்) லிமிடெட் மீதான முதலீடு.

நிதியமைச்சு, யூலை 6, 2021 திகதியிடப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் இல. MF/PED/11/CM/2021/164, மின்சார உற்பத்தி மீதான செலவைக் குறைப்பதற்காக வெஸ்ட் கோஸ்ட் பவர் (பிரைவட்) லிமிடெட் மீதான முதலீடு.

எரிசக்தி அமைச்சு, மார்ச் 2, 2021 திகதியிடப்பட்ட இல. B/12/2021 முன்மொழிவுகளுக்கான அழைப்புகள், கரவலப்பிட்டிய கடற்கரையிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மிதக்கும் மறுவாயுவாக்க சேமிப்பு அலகிலிருந்து ஏற்கெனவேயுள்ள மற்றும் எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள களனிதிஸ்ஸ மற்றும் கரவலப்பிட்டிய மின் நிலையங்களுக்குக் ‘கட்டியெழுப்பு சொந்தமாக்கு செயற்படுத்து மாற்று’ (Built Own Operate and Transfer – BOOT) என்பதன் அடிப்படையில் மீள்வாயுவாக்கப்பட்ட திரவ இயற்கை எரிவாயு (R-LNG) பைப்லைன் நிர்மாணம்.

ராஜேஷ் சீத்தாராம், “பாரிய FSRUக்குப் பின்னாலுள்ள தர்க்கம் குறித்து டொக்டர். ரல்பனாவே கேள்வி எழுப்புகிறார்“, சிலோன் ருடே, மார்ச் 20, 2021, https://ceylontoday.lk/news/dr-ralpanawe-questions-logic-behind-the-large-fsru [last accessed 28 October 2021].

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது