உண்மைச் சரிபார்ப்புகளும்
கடந்த கால மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தொடர்பில் அமைச்சர் ரம்புக்வெல்ல: சரியானது ஆனாலும் தவறாக வழி நடத்தும்
மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி ஆட்சிக்காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அமைச்சர் மேற்கோள் காட்டும் புள்ளிவிபரங்கள் சரியானவை. எனினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியை இலங்கை ரூபாய்க்குப் பதிலாக அமெரிக்க டொலர்களில் குறிப்பிடுவது ஏன் தவறாக வழிநடத்தும் என்பதை விளக்க இது உதவும்.
இந்தக் கூற்றினை இலங்கை மத்திய வங்கியின் 2018 ஆண்டறிக்கையின் சிறப்பு புள்ளிவிபரப் பின்னிணைப்பு மற்றும் தொகைமதிப்பு புள்;ளிவிபரத் திணைக்களத்தின் தேசிய கணக்குகள் மதிப்பீடுகளின் தரவுகளைப் பயன்படுத்தி FactCheck ஆராய்ந்தது.
அமெரிக்க டொலர்களில் கணக்கிடப்பட்ட பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (பணவீக்கம் சரிசெய்யப்படாதது) 2004 ஆம் ஆண்டில் 20.6 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 2014 ஆம் ஆண்டில் 79.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இது அமைச்சரின் கூற்றுடன் பொருந்திப் போகின்றது (மட்டம் தட்டப்பட்டுள்ளது).
எனவே, நாங்கள் அமைச்சரின் கூற்றினை ‘சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.
எனினும், இந்த புள்ளிவிபரம் தவறாக வழிநடத்தும். இந்த புள்ளிவிபரத்திற்கு மாத்திரம் அமைச்சர் இலங்கை ரூபாயிலிருந்து அமெரிக்க டொலர்களிற்கு மாற்றுகின்றார். உள்நாட்டு நாணயத்தில் குறிப்பிடாமல் அமெரிக்க டொலர்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை குறிப்பிடுவது, உற்பத்தி மற்றும் விலையின் பணவீக்க அதிகரிப்பிற்கு பதிலாக, உற்பத்தியில் உண்மையான அதிகரிப்பாக காட்டும். அமைச்சரின் நோக்கம் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியைக் காட்டுவதாக இருந்தால், அமெரிக்க டொலர்களில் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியை குறிப்பிடுவதை விடுத்து, இலங்கை ரூபாயில் பணவீக்கம் சரிசெய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியை குறிப்பிடுவதே பொருத்தமான அளவீடாக இருந்திருக்கும். இந்தக் காலப்பகுதியில், பணவீக்கம் சரிசெய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி இலங்கை ரூபாயில் 1.8 ட்ரில்லியனில் இருந்து 3.5 ட்ரில்லியனாக அதிகரித்துள்ளது (நிலையான 2002 விலைகளில்). இது நான்கு மடங்கு அல்ல, இரண்டு மடங்கு அதிகரிப்பு ஆகும்.
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: பெயரளவு மற்றும் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (2004 – 2014)
மூலம்
- இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை (2018) சிறப்பு புள்விவிபரப் பின்னிணைப்பு, அட்டவணை 2, பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/publications/annual_report/2018/ta/15_S_Appendix.pdf
- தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், தேசிய கணக்குகள் மதிப்பீடு – அடிப்படை ஆண்டு 2002, நிலையான 2002 சந்தை விலைகளில் மொ.உ.உ: சுருக்க குறிகாட்டிகள், ஆண்டு 2015, அட்டவணை 1.1: http://www.statistics.gov.lk/national_accounts/Press%20Release/2015ANNUAL.pdf