உதய கம்மன்பில

19ஆவது திருத்தம் தொடர்பில் கம்மன்பில தவறாகத் தெரிவித்துள்ளார்.

"

...19ஆவது திருத்தத்திற்கு முன்னர் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரங்களுக்கும் தற்போதுள்ள அதிகாரங்களுக்கும் இடையில் பாரிய மாற்றங்கள் இல்லை. 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் மூன்று அதிகாரங்கள் மாத்திரமே நீக்கப்பட்டன.

திவயின | ஜூன் 18, 2019

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டது/நீக்கப்பட்டது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில தெரிவித்த மேலேயுள்ள கூற்றினை திவயின பத்திரிகை 2019 ஆம் ஆண்டு ஜுன் 18 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

‘அமைச்சர் ஒருவரை நியமிக்கும் போது பிரதமரின் பரிந்துரையின் பேரில் [ஜனாதிபதி] செயற்பட வேண்டும். ஒரு வருடத்திற்கு பின் பாராளுமன்றத்தைக் கலைக்கும் [அதிகாரம்] நான்கரை வருடங்களாக நீடிக்கப்பட்டது. பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட சட்டமூலத்தை நேரடியாக வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கும் ஜனாதிபதியின் அதிகாரம் நீக்கப்பட்டது.’

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதியின் குறைக்கப்பட்ட/நீக்கப்பட்ட அதிகாரங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை மாத்திரமே என பாராளுமன்ற உறுப்பினர் தனது கூற்றில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்த மாற்றங்கள் ஜனாதிபதியின் அதிகாரத்தில் பாரிய மாற்றங்களைக் கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிடுகின்றார்.

அவரது கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு, நாங்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் (திருத்தப்பட்டது) அரசியலமைப்பை ஆராய்ந்தோம். அதன் பிரகாரம், குறைக்கப்பட்ட/நீக்கப்பட்ட மேலும் பல அதிகாரங்கள் தொடர்பில் FactCheck கண்டறிந்துள்ளது. ஆணைக்குழுக்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலகங்களுக்கு நியமனங்களை மேற்கொள்ளும் ஜனாதிபதியின் விருப்புரிமை அதிகாரம் நீக்கப்பட்டுள்ளதும் இதில் அடங்கும். 19ஆவது திருத்தத்தை தொடர்ந்து, அவ்வாறான நியமனங்கள் அரசியலமைப்புச் சபையின் பரிந்துரை மற்றும் ஒப்புதல்களினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. (சரத்துக்கள் 41b மற்றும் 41c). மேலும், ஜனாதிபதி தமக்கு அமைச்சரவைகளை ஒதுக்கும் அதிகாரம் (சரத்து 43(2)); அவரது நடவடிக்கைகள் சட்டரீதியாக சவாலுக்கு உள்ளாவதை தடை செய்தல் (சரத்து 35(1)); இரண்டாவது பதவிக் காலத்திற்கு அப்பால் ஜனாதிபதியாக தன்னை தேர்ந்தெடுப்பதற்கு பரிந்துரைத்தல் (சரத்து 31(3)(3A)(a)(i)) ஆகியவையும் 19ஆவது திருத்தத்தில் குறைக்கப்பட்டுள்ளன/நீக்கப்பட்டுள்ளன.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பிலவினால் பட்டியலிடப்பட்ட மூன்று குறைக்கப்பட்ட/நீக்கப்பட்ட அதிகாரங்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் இன்றி ஜனாதிபதி செயல்படுவதை பின்வரும் மூன்று விடயங்களில் கட்டுப்படுத்துகின்றது. (i) அமைச்சர்களை நியமித்தல் (ii) ஒரு வருடத்திற்கு பின்னர் பாராளுமன்றத்தைக் கலைத்தல் (iii) பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட சட்டமூலத்தை நேரடி வாக்கெடுப்புக்கு சமர்ப்பித்தல். இவை ஜனாதிபதி முன்னர் கொண்டிருந்த நிறைவேற்று அதிகாரங்களின் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஆகும்.

எனவே, ஜனாதிபதியின் அதிகாரங்களில் 19ஆவது திருத்தம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரண்டு விடயங்களில் தவறாக குறிப்பிட்டுள்ளார். (i) மூன்று அதிகாரங்கள் மாத்திரமே குறைக்கப்பட்டது/நீக்கப்பட்டது. (ii) குறைக்கப்பட்ட/நீக்கப்பட்ட அதிகாரங்கள் ‘பாரிய மாற்றங்கள் அல்ல’.

எனவே, நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பிலவின் கூற்றினை ‘தவறானது’ என வகைப்படுத்துகின்றோம்.

*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.



மூலம்

  • இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்றம், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு (2015 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி வரை திருத்தப்பட்டது) (2015), சரத்துக்கள் 31(2), 41b, 41c மற்றும்  43(2), பார்வையிட: https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-19th.pdf [last accessed: 28 August 2019]
  • இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்றம், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் (2015), பார்வையிட: https://www.parliament.lk/files/pdf/constitution/19th-amendment-act.pdf [last accessed: 28 August 2019]